பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
பசி ருசி அறியாது "என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
"பசித்தபின் புசி "என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும்?
அது என்ன பத்து ? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா!
கொஞ்சம் பொறுங்கள். பசியாறிவிட்டு வருகிறேன்.
அதாவது ஔவையின் பாடலைப் படித்து அறிவுப் பசி ஆற்றிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கான பதிலை ஔவையிடமிருந்து வாங்கி வந்திருக்கிறேன். கேளுங்கள்.
" மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாழாண்மை _ தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் "
என்கிறார் ஔவை.
" குழந்தைப் பசி கொள்ளிப்பசி" என்பார்கள்.
அது குழந்தைக்கு மட்டும்தானா நமக்கு இல்லையா.?
நல்ல பசி ...பானையில் சோறு குறைவாக இருக்கிறது.
அடிப்பத்தையும் வழித்துப் போட்டு சாப்பிட மாட்டோமா என்ன ?
இதுதான் இந்தப் பழமொழிக்கான பொருளாக இருக்குமோ !
பத்துப் பாத்திரம் தேய்க்க வேண்டும் என்று சொல்வார்களே!
அப்படியானால்.... அப்படியானால்... இது எந்தப் பத்து?
சற்று குழப்பமாக இருக்கிறதல்லவா.!
குழப்பமே வேண்டாம்.
ஔவையே சொல்லிவிட்டார்.
ஔவை வாக்கு அரச வாக்கு.
அதுதான் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
1 . மானம்
2 . குலம்
3 . கல்வி
4 . வண்மை அதாவது வாய்மை
5 . அறிவுடைமை
6 . தானம்
7 . தவம்
8 . உயர்ச்சி
9 . தாளாண்மை அதாவது ஊக்கம்
10 . காமம்
போன்ற பத்து குணங்களும் பசி வந்தால் நம்மை விட்டுப் போய் விடுமாம்.
அம்மாடியோவ்.... பசிக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா!..வியப்பாக இருக்கிறதல்லவா !
" எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் ."இது புது மொழிங்க..
வயிற்றுக்காகதானே இந்தப் பாடு.
நாமும் பசிக் கொடுமையை அனுபவித்திருப்போம்.
கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.
நல்ல வயிற்றுப் பசி இருக்கும் போது எது கிடைத்தாலும எந்த இடத்தில் இருந்தாலும் வாங்கி சாப்பிடுவோம்.
நாலுபேர் பார்ப்பார்களே ...நான் எவ்வளவு பெரிய ஆள்.... என் குலம் என்ன... அந்தஸ்து என்ன? பதவி என்ன... பவுசு என்ன?எதுவுமே நினைவுக்கு வராது.
நன்றாக சாப்பிட்டுவிட்டு பசி அடங்கியதும் அங்கிட்டும் இங்கிட்டும் பார்ப்போம்.
யாராவது பாத்திருப்பார்களோ?...
பசி அடங்கியதும் மானம் மெதுவாக வந்து எட்டிப் பார்க்கும்.
பசி இருக்கும்வரை அந்த நினைப்பே வராது.
இதைத்தான்" பசி வந்தால் பத்தும் பறந்து போகும் "என்று சொல்லி வைத்தார்கள்.
பழமொழி அனுபவமொழி .
உலக நடைமுறையை நச்சென்று... நாலே வார்த்தையில் சொல்லும் மொழி... என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்ன?
Comments
Post a Comment