ஏட்டுச் சுரைக்காய்

                              ஏட்டுச் சுரைக்காய்


 பள்ளியிலிருந்து வந்த நேரத்திலிருந்து ஏதோ ஓர் நினைவிவிலேயே இருந்தாள் தாரகை.
    சியாமளா  ஏன் அப்படி கூறினாள்?
     மண்டையைப் போட்டு உருட்டி உருட்டிப் பார்த்தாயிற்று.
     ஒரு விடையும் கிடைக்கவில்லை ....அப்படியானால்...அப்படியானால்...சியாமளா சொல்லியதுதான் சரியாக இருக்குமோ?
     இல்லை ...இல்லை..அப்படி எல்லாம் இருந்துவிடவே கூடாது.
     அப்படி இருந்துவிட்டால் எனது  ஆசிரியை இதுவரை சொல்லித் தந்தது எல்லாம் தவறாகிவிடுமே..
    " எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் "என்ற ஔவையின் கூற்று  ஒரு போதும் பொய்யாக இருக்காது.
   
     அதெப்படி இருக்கும்....
     "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
     கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
     என்ற பொய்யாமொழிப் புலவராம் திருவள்ளுவரின் வாக்கு
     பொய்த்ததாக சரித்திரமே இல்லையே....
    அப்படியானால்....  இது மட்டும் எப்படி சாத்தியமாகும்.
     "எல்லா சொல்லும் பொருளுடையன "என்று தமிழாசிரியைச் சொல்லித் தந்தார்கள்.
     அப்படியானால் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதும் பொருள் உடைய சொற்றொடராகதானே இருக்க முடியும்.
     படிப்பு வாழ்க்கைக்கு உதவாது இதைத்தானே
     சியாமளாவும்  கூறினாள்.
      அப்படியானால் புத்தகப் படிப்பு ஒன்றுக்கும் உதவாதா....
      ஐயோ...நினைக்க நினைக்க தலை சுற்றுவது போல் இருந்தது.
     அம்மாவிடம் ஓடினாள்..
     "அம்மா எல்லா சொல்லுக்கும்  பொருள் உண்டாம்மா?"
     "ஆமாம்...பொருள் இருப்பதனால்தானே பேசுகிறோம்."
     "அப்படியானால் எல்லா பழமொழிக்கும் பொருள் உண்டா..."
    " கண்டிப்பாக உண்டு."
     அதனால்தானே பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
     "ஏட்டுச் சுரைக்காய்க்குப் பொருளுண்டா"
     அம்மா தாரகையை ஏற இறங்க பார்த்தார்.
     "உண்டு...அதிலென்ன சந்தேகம் "
      "அப்போ  ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது ...இதுக்குப் பொருள் சொல்லுங்க..."
     ஏதோ வில்லங்கமான கேள்வியாக இருக்கிறது என்று நினைத்த அம்மா..".எனக்கு அதைப்பற்றி எல்லாம் யோசிப்பதற்கு இப்போ நேரமில்லை.
    வேலை இருக்கிறது....சும்மா தொணதொணக்காத...அப்பாவிடம் போய் கேள்."..என்று சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி நகர்ந்துவிட்டார் அம்மா.
    அப்பாவிடம் போய் நின்றாள் தாரகை .
'   என்ன...'என்பது போல முறைத்தார் அப்பா.
  "  அப்பா....ஏதாவது கணக்குச் சொல்லித் தரணுமா."
    நாழிதழிலிருந்து கண்களை எடுக்காமலே கேட்டார் அப்பா.
"   இல்ல அப்பா..
    ஒரு கேள்வி.."
    "கேள்வி கேட்கணுமா ....ஒப்பிக்கப் போறியா...தாத்தாவிடம் போ..தாத்தாதான் சும்மா இருக்கிறார்" தள்ளி விடுவதிலேயே குறியாக இருந்தார் அப்பா.
    வேண்டா வெறுப்பாக அங்கிருந்து நகர்ந்தாள் தாரகை.
    நேரம் ஆக..ஆக...விண்ணில் முளைக்கும் ஏராளமான தாரகைகளைப் போல எண்ணற்ற கேள்விகள் தாரகையின் மனதில் வந்து போயின.
    தாத்தாவிடம் போய் நின்றாள்.
    "கேள்விகள் கேட்கணுமா..தாத்தாவுக்கு கண் சரியாக தெரியாதேம்மா ..."
    தாரகை கேட்குமுன்னே முந்திக் கொண்டார் தாத்தா.
    "இல்ல தாத்தா..."
    "பின்னர் ஏன் முகம் வாடியிருக்கு "தாரகையின் முகத்தை வருடியபடியே கேட்டார் தாத்தா.
"   ஒரு டவுட் தாத்தா..."
    "என் ஆத்தாவுக்கு இப்பவே டவுட்டா...என்ன டவுட்டு.."
   " நாம படிப்பதெல்லாம் வேஸ்டா தாத்தா"
    "யார் சொன்னது...நல்லா படிக்கணும்.
     நல்லா படிச்சி பெரிய ஆளாகணும்."
    "நீங்க பெரிய ஆளா... சின்ன ஆளா..தாத்தா.."
    தாத்தாவுக்குப்புரியல...தாரகையையே பார்த்தார்.
    "சொல்லுங்க தாத்தா நீங்க பெரிய ஆளா.... சின்ன ஆளா"
    "பெரிய ஆளுதான்."
   " நீங்க எத்தனாவது வரை படிச்சுருக்கிறீங்க..."
    "நான் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கல.."
    சொல்லிவிட்டு சிரித்தார் தாத்தா.
    "படிக்கல என்றால் நீங்க எப்படி பெரிய ஆளாக  இருக்க முடியும்"
    குறுக்குக் கேள்வி போட்டு மடக்கினாள் தாரகை.
  "  புத்திசாலி பொண்ணு "பேச்சை மாற்றினார் தாத்தா.
    "நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலியே..தாத்தா."
    "நான் படிக்கல ...அப்போ நான் சின்ன ஆள்தான்.."
    "போங்க தாத்தா நீங்க பொய் சொல்றீங்க.."
"   இப்போ என்ன வேணும்..."
    "ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா...உதவாதா..சொல்லுங்க" தாத்தா...
    "கறிக்கு உதவாதுதான்..."
    "அப்போ நாம படிக்கிறது எதுக்குமே உதவாதா தாத்தா..."
    "யார் சொன்னது.."
   " சியாமளா சொல்லுறா..."
  "  என்ன சொன்னா ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றா...
  "ஆமாம்...தாத்தா ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதாம்.அதுபோலதான் நாம் படிக்கிற படிப்பும் வாழ்க்கைக்கு உதவாதாம்."
   " ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது...கற்பனைக்கு உதவும்...சுரைக்காய் என்று நமக்குசொல்லித் தருவதற்கு உதவுமில்லையா..."
    "என்ன தாத்தா சொல்றீங்க.."
    "ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது....காரியத்துக்கு உதவும் என்கிறேன்..."
    "அப்போ ஏட்டுச்சுரைக்காய்க்குப் பொருள் உண்டு..இல்லையா தாத்தா.."
   " ஆமாம்..இன்னும் என்ன சந்தேகம்."
    "அப்போ நாம படிக்கிற எல்லாமே நமக்கு உதவும் இல்லையா தாத்தா "
"   உதவும்....என் புள்ள என்னா புத்திசாலி" தடவிக் கொடுத்தார் தாத்தா .
"படிப்புதான் எல்லா இடத்திலும் நமக்கு உதவும் இல்லையா தாத்தா..சியாமளாவுக்கு ஒண்ணும் தெரியல..."
" இப்போ புரிஞ்சுதுல்ல... சரி போ...போய் படி..."
  "  சரி தாத்தா . புரிஞ்சுது.எனக்கு வீட்டுப்பாடம் எழுதணும்... ."
"நாளை பள்ளிக்குப் போனதும் ஏட்டுச்சுரைக்காய்  கறிக்கு உதவாது..ஆனால் காரியத்துக்கு உதவும்.... கற்பனைக்கு உதவும்... கண்டு ரசிக்க உதவும்...  எல்லாவிதத்திலும் உதவும்...என்று சொல்லுவேன்" என்று சொல்லிக் கொண்டே வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கினாள் தாரகை.

   
   
   
   
   
   

Comments

  1. மிக அருமையான பயனுள்ள சிறுகதை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts