அன்னையர் தினம்



            அன்னையர் தினம்


 அம்மா என்றால் உயிர்
              அம்மா என்றால் அன்பு
              அம்மா என்றால் பாதுகாப்பு
              அம்மா என்றால் நிம்மதி
               அம்மா என்றால் மொழி
               அம்மா என்றால் தெய்வம்
       இப்படி அம்மாவைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
       ஒப்புவமையற்ற ஓர் உன்னத உயிர் அம்மா.
        ஆனால் சும்மா கெட என்று கிடப்பில் போடப்பட்ட பாவப்பட்ட ஜீவனும் அம்மாதான்.
        கூடவே இருக்கும் எந்த பொருளின் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை.
        கையைவிட்டுப் போன பின்னர்தான் அம்மாடியோவ்... ஆத்தாடியோவ் ....என்று அடித்துக் கொள்கிறோம்.
        கண்டம்விட்டு கண்டம் போன பின்னர் நாளும் அம்மாவின் அம்மாவிற்காக ஏங்குகிறோம்.
        நாளும் மருகி மருகி சாகிறோம்.
        நாம் அதிகம் கோபமாக பேசிய ஒரு நபர் உண்டென்றால் அதுவும் அம்மாதான்.
        நம் இயலாமையை   அம்மா மீதுதான் கோபமாக வெளிப்படுத்துவோம்.
        யார் மீது கோபம் வந்தாலும் அதற்கான வடிகால் அம்மாதான்.
        எல்லாம் உன்னாலத்தான் ....உன்னால்தான்...என்று எத்தனைமுறை கத்தியிருப்போம்.
        அம்மாவை அடித்த ஜாம்பவான்களும் உண்டு.
        நமது ஆத்திரத்தைக் காட்டுவதற்கான இடம் அம்மா மட்டும்தான்.
        ஆனால் எந்த ஜாம்பவான் ஆனாலும் ஒருநாள் அம்மாவை எண்ணி உருகுவான்.
        இது காலம் சொல்லித் தரும் பாடம்.
        கையைவிட்டு போன பின்னர் போற்றப்பட வேண்டியவர் அல்லர் அம்மா.
        இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டியவர் அம்மா.
        இதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் அன்னையர்தினம்
        மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரைச் சார்ந்த அன்னா
        ஜார்விஸ் என்பவர் எண்ணத்தில் உதயமானதுதான் இந்த அன்னையர் தினம்.
        குடும்ப உறவுகள் அன்னையைச் சுற்றியே இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
        1911 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்காவின் பல மாகாணங்களில் அன்னையர்தினம் கொண்டாடப் பட்டது.
        அதன் பின்னர்  1914 ஆம் ஆண்டு மே எட்டாம் நாள் அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
        அதன்படி மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அதிகாரப் பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டது.
        அன்றுமுதல் இன்றுவரை மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
        வசந்த காலத்தை வரவேற்கும் எண்ணத்தோடு கிரேக்கர்கள் பல தேவதைகளை வழிபட ஆரம்பித்தனர்.
        அதில் தாய் தெய்வத்தை வணங்குவது என்பது பெரிதும் போற்றத் தக்கதாக நடைபெற்று வந்தது.
        கிரேக்கர்கள் தாங்கள் தெய்வமாக வழிபட்டு வந்த கரோனஸின்
        மனைவியான ரேஹானாவை தாய் தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
        ரோமர்கள் வசந்த காலத்தைக் கொண்டாட சைபெலி என்ற பெண் தெய்வத்தைத் தாயாக கருதி வழிபட்டனர்.
        எது எப்படியோ தாய் என்பவள் தெய்வம் என்பது உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை.
        அதற்கெல்லாம் மேலாக நாம் நாட்டையே  பாரதத்தாய் என்று தாயாக கொண்டாடி மகிழ்கிறோம்.
        மொழியைத் தாயாகப் பார்க்கிறோம்.
        ஒருமுறை உலகின் முதன்மையானது எது என்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்டதாம்.
        தாய் என்று பதிலளித்தாராம் நபிகள்.
        இரண்டாவது எது? என்று கேட்கப்பட்டதாம் .
        அதற்கும் தாய் என்றாராம்.
        கேள்வி கேட்டவர் விடாமல் மறுபடியும் மூன்றாவது என்றார் இப்போதும் நபிகள் நாயகத்திடமிருந்து தாய் என்ற பதிலே வந்ததாம்.
        முதலாவது ...இரண்டாவது ....மூன்றாவது என்று தரம் பிரித்துப் பார்க்கத் தக்கவள் அல்லர் அம்மா.
        எப்போதும் ஒரே தரம் .உயர் தரம்.ஒப்புவமையற்ற தரம் அம்மா.
       இப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடுவதற்கான தினம்தான் அன்னையர் தினம்.
    அன்னையர் தினத்தில் மட்டும் அல்ல. நாளும் கொண்டாடப்பட வேண்டியவர் அம்மா என்பதை மனதில் நிறுத்துவோம்.
    அன்னையரை வாழ்த்துவோம்.
    கடைசிவரை உடன் வைத்துக் காப்போம்.
       
    "   தாயிற் சிறந்த கோவிலுமில்லை
       தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
       
  என்பதை  எந்நாளும் மனதில் நிறுத்துவோம்.    
              

               

Comments

Popular Posts