பணி நிறைவு பாராட்டு மடல்

      
               பணி நிறைவு பாராட்டு மடல்


    கவினணி புனைந்த எழில்மிகு வனத்தாய்
     கலையணி கொண்ட காட்சிக்கு விருந்தாய்
     மலையணி எங்கும் இயற்கை மருந்தாய்
     எழிலணி ஓரணிதிரள் சின்னமனூரில் அவதரித்தாய்!

     அறப்பாணியாளர் அப்பா சண்முகவேலோடு அன்பாய்
     களப்பணி ஆற்றிட விஜயாவும் இணைந்தாய்
     இல்லறப்பணி இன்பமாய் பத்மாவதி பிறந்தாய்
     நல்லறப்பணி சாட்சியாயினர் தம்பியரும் அருமருந்தாய்!

     முதற்பணி கல்வியென உத்தர்பாரதியில் சீரடி பதித்தாய்
     கலைப்பணிக்கு சோமைய்யாவைத் தேர்வு செய்தாய்
     பெரும்பணிக்காய் கலினாவில் முதுகலை பயின்றாய்
     ஆசிரியப்பட்டயப் படிப்பிலிலும் முதல்நிலை பெற்றாய்!


      நற்பணி ஆற்றிட பிரைட் பள்ளிக்குள் நுழைந்தாய்
      உலகணி ஆங்கிலத்தை உவப்போடு கற்றிட வைத்தாய்.
      கவியணி புனைந்து கற்பிக்கும் பாங்கினை வகுத்தாய்
      கனியணி எம்பாணி எனத் தனித்துவம் படைத்தாய்!

     ஊரணி உவந்திட ஓயாது உழைத்தாய்
     தேரணி மகிழ்வாய் பணி உயர்வு அடைந்தாய்
     தாரணியாய் தக்கதோர் ஆசிரிய கூட்டணி அமைத்தாய்
     முற்போக்குக் கூட்டணியாய்ப் பள்ளி் பெயர் துலங்க வைத்தாய்!


     வேற்றணி இவரென எவரையும் வெறுக்காய்
     குன்றிமணியளவும் குறையா குணமே உனதாய்
     நவமணியாம் திருமணியாய்த் திகழ்ந்தாய்
     தவமணியாய் உறவுக்காய் உன்னையே அர்ப்பணித்தாய்

    தனியணி பிரிக்கும் ஓய்வின் வலையில் விழுந்தாய்
    ஓரணியாய் உம்மோடு யாமிருப்போம் வருந்தாய்
    நல்லணி திரட்டி அருட்பணி ஆற்றுக இனிதாய்
    நிரந்தர அணியாய்த் தொடருவோம் என்றென்றும் உறவாய்!
      

Comments