பணம் பத்தும் செய்யும்

                         பணம் பத்தும் செய்யும்   

" பணம் பந்தியிலே 
குணம் குப்பையிலே"
என்பார்கள்.

"  இல்லானை இல்லாளும் வேண்டாள் 
    ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
    செல்லாது அவன் வாயிற் சொல்"

பணம் இல்லை என்றால் கட்டிய
மனைவி மதிக்க மாட்டாள்.
பெற்ற தாய்கூட விரும்ப மாட்டாளாம்.
அவனுடைய பேச்சு சபையில்
எடுபடாது. இதுதான் உலக எதார்த்தநிலை.

"பணமில்லாதவன் பிணம்"

பணமில்லாதவன் செயலிழந்தவன்
ஆகிவிடுவானாம். உண்மைதாங்க...
பணம் இல்லாமல் என்ன நடந்துவிடப் போகிறது.

"பணம் உள்ளவன் பின்னாலும் பத்து பேர்
பதவி உள்ளவன் பின்னாலும் பத்து பேர்"

பணம் இருந்தால்தான் நாலுபேர் வந்து
நம்மை எட்டிப் பார்ப்பார்கள்.
பணம் இல்லையா இறுதி யாத்திரையின் போது
தூக்கிச் செல்லகூட நாலுபேர்
இருக்கமாட்டார்கள்.

"ஈட்டி எட்டும்வரைதான் பாயும்; 
பணம் பாதாளம் வரை பாயும்."

பணம் இருந்தால் எங்கிருந்தாலும்
இங்கு உள்ளவர்களைக் கைக்குள்
கொண்டு வந்துவிடலாம்.உலகையே ஆட்டிப்
படைக்கும் வல்லமை பணத்திற்கு உண்டு.

"கோவணத்துல காசு இருந்தா
கோழிகூட பாட்டுப் பாடுமாம் "

கோவணம் கட்டி வந்தால்  என்ன...
பட்டு பரிவட்டங்கட்டி வந்தால் என்ன..
பணம் இருந்தால் பின்பாட்டுப்பாட
ஒரு கூட்டம் கூடவே வரும்.
புகழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

"நாய் வித்த காசு குரைக்கவா செய்யும் ? 
கருவாடு விற்றகாசு நாறவா செய்யும்? "

எந்த வழியில் வந்தா என்னங்க...
பணம்...பணம்தாங்க...


"ஒன்று ஜனக்கட்டு வேண்டும் - 
இல்லை என்றால்
பணக்கட்டு வேணும் "

இது ரொம்ப ரொம்ப உண்மைங்க...
இந்த இரண்டும் இருந்தால்தான்
சமுதாயத்தில் மதிப்பும்
மரியாதையும் கிடைக்கும்.

இப்படி பணமொழிகள் ஏராளம் உண்டு.

இந்த பழமொழிகள் வெறுமனே பணத்தின்மீது
வெறுப்புள்ளவர்களால் சொல்லப்பட்டவைகளாக
இருக்கும் என்று சொல்லிவிட்டு கடந்து போக
முடியாது.
அனுபவித்து உணர்ந்த உண்மைகள்தான்
பழமொழிகளாக நம்மோடு உலா வருகின்றன.

ஆளாளாளுக்கு பணத்தைப் பற்றிய
கருத்து மாறுபடலாம்.
ஆனால் பணமில்லாமல் எதுவும் நடக்காது
என்ற கள நிலவரத்தை யாரும் மறுக்க முடியாது.
மறைக்கவும் முடியாது.
பேச்சுக்கு வேண்டுமானால் பணம்
என்னங்க பணம். குணம்தானே நிரந்தரம் என்று
சொல்லிக் கொள்ளலாம்.

காசு இன்றைக்கு ஒருத்தன் கையில்
இருக்கும். நாளை இன்னொருத்தன்
கையில் இருக்கும். பணம் நிரந்தரமல்ல...என்று
ஏதேதோ வாய்க்கு வந்ததைப் பேசிக் கொள்ளலாம்.
உறவுகளை நிரந்தரமாக உங்களோடு
ஒட்ட வைப்பதற்கு முழுமுதற் காரணியாக
இருப்பதே பணம் தாங்க...
சபையில் முன் வரிசையில் துண்டு போட்டு
இடம் பிடித்து வைப்பதும் பணம் தாங்க...
இதை யாராலும் மறுக்க முடியாது.

"காசேதான் கடவுளடா- அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா"
சும்மாவா பாடி வைத்தார்கள்.

"தட்சணை இன்றி அர்ச்சனை இல்லை."
சாமியைப் பார்க்கவும் பணம் வேண்டும்.

"முட்டாப்பயலை எல்லாம் 
தாண்டவக்கோனே- காசு
முதலாளியாக்குதடா 
தாண்டவக்கோனே! 
.
கட்டியழும்போதும்
தாண்டவக்கோனே- பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமீது கண்வையடா 
தாண்டவக்கோனே!"

 என்ற பராசக்தி படத்தில் உடுமலை
நாராயணகவி எழுதிய பாடல்
பணம் எவ்வளவு அவசியமான ஒன்று
என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.

இப்படி பணமே எல்லாம் என்று
பேசிக் கொண்டிருந்தவர்கள்
திடீரென பாதை மாறி எதிர்த்திசை
நோக்கி திருப்பியடிக்க ஆரம்பித்தனர்.

பணம் எதிர்மறை தாக்கத்தையும்
உண்டுபண்ண வல்லது 
என்பதையும் நாம் ஒத்துக் கொண்டுதான் 
ஆக வேண்டும்.

காசுக்கு  நாணயம் என்ற பெயர் உண்டு.
நாணயம் உருண்டோடுவதுபோல
பணம் கைமாறிப் போகும் 
என்பதால்தான் அதற்கு நாணயம்
என்ற பெயர் வந்ததோ?

நாணயத்திற்கு மற்றுமொரு பொருளும்
உண்டு. அதுதான்  நேர்மை.
பணம் அதிகமானால் 
அந்த நேர்மை இல்லாமல்
போக நிறைய வாய்ப்பு ஏற்பட்டுவிடுமாம்.
பணம் பேசும்போது மனிதப் பண்பு
காணாமல் போவது இயல்புதானே!

அத்தோடு மட்டுமல்லாமல் பணம் வந்தால் 
பத்து கெட்ட குணங்கள் 
 கூடி வந்து கும்மாளமிடுமாம்.
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும் "என்று
 சொல்லி வைத்திருக்கிறார்கள்.

 அந்தப் பத்து குணங்களாவன:-
        
         1.  பேராசை
         
       2.    தீய இச்சை ( தேவையில்லா ஆசைகள் )
      
        3.    கஞ்சத்தனம்
        
        4.    காதல்
        
         5.   அகம்பாவம் அதாவது ஈகோ
        
          6.  பொறாமை 
          
         7.    ஆடம்பரம்
        
         8.  அகங்காரம்  ( தனக்கு நிகர் எவரும் 
             இல்லை என்ற மேட்டிமை)
        
        9   கர்வம் ( தற்பெருமை)
        
       10.    கெடுமனம் (அதாவது பிறருக்கு
                 கேடு விளைவித்து இன்பம் காணும்
                 கொடிய எண்ணம் )  

 போன்ற பத்து தீய குணங்களும்
 வந்து சேர்ந்து விடுமாம்.

பணம் வந்தால் இத்தனை தீய குணங்கள்
வந்து விடுமா? 
இதைத்தான் பணம் பத்தும் செய்யும்
என்று சொன்னார்களா?
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

"பணம் பத்தும் செய்யும்" 
என்பது  நமது முன்னோர்களின் 
கணிப்பு.
பெரியவர்கள் சொன்னால் உண்மை
இல்லாமலா இருக்கும்?

 
                

Comments

Post a Comment