காமராசரின் நகைச்சுவை உணர்வு

காமராசர் சில சமயங்களில் நகைச்சுவையாகப் பேசுவார்.
         அவற்றுள் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒருசில செய்திகளை உங்கள்முன் வைக்கிறேன்.
         
      #   காமராசர் முதலமைச்சரானதும் தலைமைச்செயலகம் நோக்கிச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றன.
         காவல்துறை அதிகாரிகள்   வண்டிகள் சைரன் ஒலியுடன் பின் தொடர வண்டி புறப்பட்டது.
         சைரன் ஒலியைக் கேட்டதும் காமராசர் "நான் உயிரோடதானே இருக்கேன்.
         அதுக்குள்ள எதுக்கு சங்கு ஊதுறீங்கன்னேன்" என்றாராம்.
         கேட்ட அனைத்து அதிகாரிகள் முகத்திலும் சிரிப்பு.
         பின்னர் இருக்காதா என்ன?
         சைரன் ஒலிக்கு இப்படியும் அர்த்தம் இருக்கா....
         அதன் பின்னர் அவர் அலுவலகம் செல்லும்போது சைரன் ஒலிப்பதே இல்லையாம்.
           எப்படி சிரிப்போடு சிந்திக்க வைத்திருக்காரு பாருங்க..



    #  ஒருமுறை தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்றார்.
      வழியில் ஒரு கோவிலைப் பார்த்தார்.
      கோவிலின் வடிவமைப்பு நேர்த்தியாக இருந்தது.
      ஆனால் கோவில் சிதலமடைந்து கிடந்தது.
    அதிலுள்ள  சிற்பங்கள் கட்டிடக்கலை நேர்த்தி  யாவும் காமராசரை வெகுவாகக் கவர்ந்தது.
     உடன் வந்த அதிகாரிகளிடம் "இந்த கோவிலைக் கட்டியது யாருன்னேன் " என்றாராம்.
     'தெரியாது' என்றனராம் அதிகாரிகள்.
     "அங்க பாருங்க ....ட்யூப் லைட்டை "என்றாராம் காமராசர்.
     அனைவரும் ட்யூப் லைட் பக்கத்தில் கட்டினவர்  பெயர் இருக்குமோ எனத் தேடினர்.
     காமராசரோ "கோவில் கட்டினவன்  யாருன்னு் தெரியல...
     இத்துனூண்டு ட்யூப் லைட்டைப் போட்டவன்  யாருன்னு  ட்யூப் லைட் உபயம் என்று  பேரு எழுதி வைச்சிருக்கு  பாருங்க "என்று சொல்லி சிரித்தாராம்.
     நமக்கும் சிரிப்பாக இருக்குல்ல...
      சிரிப்பதோடு மட்டும் விட்டுறாதீங்க.
      இதன்மூலம் காமராசர் என்ன சொல்ல வந்தார் என்பதையும் சிந்தியுங்க...



 #       ஒருமுறை  ஒரு கிராமத்துக்குச் சென்றார் காமராசர்.
     ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் ஊடி வந்து "ஐயா எங்களுக்கு ஒரு குறை இருக்கு "என்றனர்.
     "சொல்லுங்க "என்றார் காமராசர்.
    " எங்க ஊரில் சுடுகாட்டுக்குப் போக பாதை இல்ல...நீங்கதான் அமைச்சுத் தரணும் "என்றனராம்.
     இதைக் கேட்டதும் காமராசர் சிரித்துவிட்டார்.
    அனைவரும் காமராசரின் சிரிப்பிற்கான அர்த்தம் புரியாமல் விழித்தனர்.
    "நான் வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களுக்குப் பாதை  அமைத்துக் கொடுப்பது எப்படி என்று தேடிகிட்டு இருக்கேன்.
    நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீங்க..".என்றாராம்.
    எல்லோரும் சிரித்தனராம்.
    சிரித்தாலும் சிந்திக்கப் படக்கூடிய விசயம் இல்ல...


#        ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேச்சாளர் ஒருவர்  "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் கொண்டு வருவோம் "என்றாராம்.
      அடுத்து பேசிய காமராசர் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தந்துடுவதாக வைத்துக் கொள்வோம்.
      அப்புறம் நெல் அறுக்கிறவன் அறுக்கிறவனுக்கே நெல் சொந்தம் என்பான்...
      அதை அரைக்கிறவன் அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தம் என்பான் .... கொடுப்பியளான்னேன் " என்று கேட்க ...கூட்டத்தில் ஒரே சிரிப்பொலி. 
       அரசியல்வாதிகளை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருதுல்ல...
       சிரிச்சுட்டு விசயத்தை கோட்டை விட்டுராதீங்க...
       காமராசர் என்ன சொல்ல வருகிறார் என்றால் செய்ய முடிஞ்சதை மட்டும் வாக்குறுதிகளாக கொடுங்க...
       நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றாதீங்க என்கிறார்.
       சிரிப்புக்குள்ளேயும் எவ்வளவு சீரியசான விசயம் இருக்கு பாருங்க...
       அதுதாங்க நம்ம காமராசர்.
       

Comments

Popular Posts