வல்லினம் மிகா இடங்கள்

  வல்லினம் மிகா இடங்கள்

இரண்டு சொற்கள் சேரும்போது  
 நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி 
 முதல் எழுத்தும் எந்தெந்த எழுத்துகள்
 இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் 
 என்பதை புணர்ச்சி இலக்கணத்தில் படிக்கலாம்.
 
 இப்போது இரண்டு சொற்கள் சேரும்போது
 வருமொழி முதல் எழுத்து வல்லினமாக 
 இருந்தால் எந்தெந்த இடங்களில் எல்லாம் 
 வல்லினம் மிகாது என்பதை இக்கட்டுரையில் 
 காண்போம்.
  க  ,ச  ,ட  ,த  ,  ப  ,  ற ஆறு எழுத்துகளும் 
 வல்லினம் எனப்படும்.
 இவற்றுள்  ட ,  ற ஆகிய இரண்டு எழுத்துகள் 
 மொழிமுதல் வராது.
 மீதமுள்ள க , ச , த , ப ஆகிய நான்கு எழுத்துகளும்
 வருமொழி முதல் எழுத்தாக வரும்போது 
 எந்தெந்த இடங்களில் எல்லாம் மிகாமல் 
 இயல்பாக வரும் என்பதைக் காண்போம்.

1.   உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

முதலாவது உம்மைத்தொகை என்றால் என்ன
என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

  இரண்டு சொற்களின் இடையில் அல்லது  இறுதியில்
  வர வேண்டிய  'உம் 'என்னும்  இடைச்சொல் 
  மறைந்து நின்று அதன் பொருளை உணர்த்தி
  வரும் சொற்கள் உம்மைத்தொகை எனப்படும்.
  
  இத்தகைய உம்மைத்தொகை சொற்களில் 
  வல்லினம் மிகாது.
         
  தாய் +  தந்தை  =  தாய்தந்தை (தாயும் தந்தையும்)
  இரவு  +  பகல் =   இரவுபகல்.    ( இரவும் பகலும்)
 இட்லி  +  தோசை     இட்லி தோசை ( இட்லியும் தோசையும்)
 நரை  +  திரை  =  நரை திரை. ( நரையும் திரையும் )
 நன்மை  +  தீமை  =  நன்மை தீமை (நன்மையும் தீமையும் )


 2.   வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

பெயர்ச்சொல்லின் ஒரு பகுதி மூன்று காலத்துக்கும் பொருந்திவருமாறு வரும் வினைச்சொல்
 அடங்கிய பெயர்ச்சொல் வினைத்தொகை எனப்படும்.
 
 எடுத்துக்காட்டாக எரிதழல் என்பது 
 எரியும் தழல், எரிந்த தழல், எரிகின்ற தழல் 
 என முக்காலமும் உணர்த்தும்.
 
இத்தகைய வினைத்தொகை சொற்களில் 
வல்லினம் மிகாது.
   சுடு  +  காடு  =  சுடுகாடு       
   மூடு  +  பனி  =  மூடுபனி 
 பாய்புலி.     =  பாய்  +  புலி           
குடி   +தண்ணீர்  = குடி தண்ணீர்
 படர்   +கொடி.  = படர்கொடி
 சுடு. +  சோறு  = சுடு சோறு
  ஓடு  +தளம்.   = ஓடு தளம்
  திருவளர் +  செல்வன். =  திருவளர் செல்வன்
  திருவளர்  +  செல்வி  =  திருவளர் செல்வி
             
இந்த வினைத்தொகை சொற்களை 
முக்காலத்துக்கும் பொருந்துமாறு
விரித்து சொல்லிப் பாருங்கள்.

இவ்வாறு வரும் வினைத்தொகைச் சொற்களில்
வல்லினம் மிகாது.

  3. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் 
  வல்லினம் மிகாது.

    படபடவென்று பேசினாள்.
    இந்த சொல்லில் படபட என்ற சொல்லைப்
    பட என்று பிரித்தால் பொருள் தராது.
    இவ்வாறு பிரித்தால் பொருள் தராமல்
    சேர்ந்தே வரும் சொற்கள் இரட்டைக்கிளவி எனப்படும்
    
   ஓடு ஓடு ஓடு வேகமாக ஓடு.
   போ போ போ போய்க் கொண்டையிரு.
இந்த சொற்றொடர்களில் வரும்
ஓடு, போ என்ற சொற்களைப் பிரித்துத்
தனியாக எழுதினாலும் பொருள் உண்டு.
 
இவ்வாறு பிரித்தால் பொருள் தருவது 
அடக்குத்தொடர் எனப்படும்.

இத்தகைய இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் 
சொற்களில்  வல்லினம் மிகாது.
        
 சலசல  _ இரட்டைக்கிளவி
 கலகல. _ இரட்டைக்கிளவி
 ஆடு ஆடு  _  அடுக்குத்தொடர்
 ஓடு ஓடு ஓடு _ அடுக்குத் தொடர்
    
4. விளித்தொடரில் வல்லினம் மிகாது.

 கண்ணா  வா !  
 இறைவா     கேள் !
  தம்பி  பார் !
  
 5. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின்
வரும் வல்லினம் மிகாது.

  முதலாவது வியங்கோள் வினைமுற்று 
  பற்றி அறிவோம்.
 வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
 க , இய  ,இயர் என்ற வகுதிகளை இறுதியாகப்
 பெற்று வரும் சொற்கள் வியங்கோள்
 வினைமுற்றுகள் எனப்படும்.
 
 வாழ்க  
 வாழிய  
 வாழியர்  
 
இத்தகைய வியங்கோள் வினைமுற்றுக்குப் 
பின் வரும்  க  , ச ,த  ,ப  மிகாது.
                
 வாழிய + செந்தமிழ்.  = வாழிய செந்தமிழ்
 வீழ்க    படைகள்          =  வீழ்க  படைகள்
 வாழ்க +  பல்லாண்டு.   =  வாழ்க பல்லாண்டு
 வெல்க + தமிழர்  =  வெல்க  தமிழர்
  வருக  +  சான்றோரே  =  வருக சான்றோரே  
                  
6. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் 
வல்லினம் மிகாது.
    
 இரண்டாம் வேற்றுமை உருபு  'ஐ ' மறைந்து 
 வந்துள்ள சொற்களை இரண்டாம்
 வேற்றுமை தொகை என்போம்.
 
  இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பது வேறு. 
  இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் 
  உடன் தொக்கத் தொகை என்பது வேறு.
  
 இரண்டாம் வேற்றுமைத் தொகையில் 
 மட்டும் க  , ச  ,த  ,ப  மிகாது.
         
  கதை +  சொன்னார் =   கதை சொன்னார்.
  கதையைச் சொன்னார் என்பதற்குப் பதிலாக
  கதை சொன்னார் என்று இரண்டாம் வேற்றுமை
  உருபு ஐ மறைந்து வந்துள்ளது.
  ஆதலால் இது இரண்டாம் வேற்றுமை தொகை
  எனப்படும்.
  
   தமிழ் +  கற்றேன்     = தமிழ் கற்றேன்.  (தமிழைக் கற்றேன்)
   காய்   +  கொடுத்தான்  =   காய் கொடுத்தான்
நகை  +   செய்தான்   =   நகை  செய்தான்
சாமி  +  கும்பிடு  =   சாமி  கும்பிடு

7    அத்தனை, இத்தனை,எத்தனை என்னும்   
    சொற்களுக்குப்  பின் வரும் வல்லினம் மிகாது.

   அத்தனை  +  பழங்கள்  =    அத்தனை பழங்கள்
   இத்தனை  +  பேர்   =    இத்தனை பேர்
    எத்தனை   +  கடைகள்  =  எத்தனை கடைகள்

 8. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் தவிர 
 பிற எண்ணுப் பெயர்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

எட்டு, பத்து ஆகியன வன்றொடர்
குற்றியலுகரங்கள் ஆகும்.
இவற்றின்முன் வல்லினம் மிகும்.

இவை தவிர ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து
என்னும் மென்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின்
முன்னும், ஆறு , நூறு என்னும் நெடில் தொடர்
குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும்
ஒன்பது என்னும் உயிர்த்தொடர் குற்றியலுகரத்தின்
முன்னும் வரும் வல்லினம் மிகாது.

நான்கு  +கால்கள்  =  நான்கு கால்கள் 
ஏழு  +  கதைகள்     =  ஏழு கதைகள்
 ஒன்பது  +  கிரகங்கள்  = ஒன்பது கிரகங்கள்
 நூறு  +  பழங்கள்   =  நூறு பழங்கள்
 ஐந்து +    படங்கள் =     ஐந்து  படங்கள்
 இரண்டு  +  பேர்  =     இரண்டு பேர்
  மூன்று  + புலி.  =       மூன்று புலி
  ஆறு  +  கற்கள்  =   ஆறு கற்கள்
  
ஒரு , இரு  , அறு , எழு என்பன 
எண்ணுப்பெயரடைகள் ஆகும்.

எண்ணுப் பெயரடைகள் முன் வல்லினம்
மிகாது.

ஒரு +  பொருள்  =  ஒரு பொருள்
இரு  +  தடவை    =  இரு தடவை
அறு  +  படைவீடு. =  அறுபடை வீடு
எழு  +  கடல்    = எழுகடல்
  
  
 9. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

    வண்டு +பறந்தது.    =  வண்டு பறந்தது
    முல்லை   + படித்தாள் = முல்லை படித்தாள்
                    
 10 .    அவை, இவை என்னும் சுட்டுப் பெயர்களின்
  பின் வல்லினம் வல்லினம் மிகாது.
                    
   அவை + பறந்தன =    அவை பறந்தன
   இவை + சென்றன =    இவை சென்றன

 11. அது, இது என்னும் சுட்டுகளின் பின் 
 வல்லினம் மிகாது.

 அது   +   போனது  =  அது போனது
 இது   +   சென்றது  = இது சென்றது

 12.  எது, எவை என்னும் வினாச் சொற்களுக்குப் 
 பின் வல்லினம் மிகாது.
 
    எது    +  கேட்டது   =    எது கேட்டது
                     
    எவை  +  பார்த்தன  =  எவை பார்த்தன
                     
  13.  ஆ,  ஏ , ஓ  என்னும் வினா எழுத்துகளின் 
பின் வரும் வல்லினம் மிகாது.

அவனா   +  சொன்னான்   =   அவனா சொன்னான்
அவனோ   +  போனான்     =  அவனோ  போனான்
 அவனே     +  கேட்டான்.      =   அவனே கேட்டான்
                     
14.   மூன்றாம் வேற்றுமை உருபுகளில்
ஒடு, ஓடு ஆகியவற்றின் பின் வரும் 
வல்லினம் மிகாது.

மூன்றாம் வேற்றுமை உருபுகள் 
ஆல் , ஆன் ஓடு, ஒடு என்பனவாம்.

இவற்றுள் ஒடு , ஓடு என வரும் சொற்களுக்குப்
பின் வரும் க, ச , த ,  ப  மிகாது.

 பூவொடு  +  சேர்ந்த    =   பூவொடு சேர்ந்த
 கபிலரோடு    + பரணர்  =  கபிலரோடு பரணர்

யாரோடு  +  பேசினாய்  =  யாரோடு  பேசினாய்

 15  . ஆறாம் வேற்றுமை உருபான அது என்பதன்முன்
 வல்லினம் மிகாது.

   யானையது  +  கொம்பு  =  யானையது கொம்பு
   எனது  +  புத்தகம்  =  எனது புத்தகம்

16. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
 தவிர பிற பெயரெச்சங்களின் பின் வரும் 
 வல்லினம் மிகாது.
 
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் 
ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் 
அது பெயரெச்சம் எனப்படும்.

படித்த பையன் என்ற சொல்லில் 
படித்த என்ற வினைச்சொல் முற்று பெறவில்லை. 
பையன் என்பது ஒரு பெயர்.
எனவே படித்த பையன் என்பது பெயரெச்சம் ஆகும்.
பெயரெச்சங்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
         
  படித்த   + பெண்   =  படித்த பெண்
  நடித்த      +  கலைஞர்  = நடித்த கலைஞர்
ஓடிய  +  குதிரை  =  ஓடிய குதிரை
பாடிய  +  பாட்டு  =  பாடிய பாட்டு

புதிய  +  சிந்தனை  =  புதிய சிந்தனை
அரிய  +  பொருள்  =  அரிய பொருள்
பெரிய  +  தெரு.  = பெரிய தெரு

 எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்
 வரும் வல்லினம் மிகாது.

ஒடாத , செல்லாத, காணாத போன்றவை 
எதிர்மறைப் பெயரெச்ச சொற்களாகும்.

காணாத  +  கண்கள்  =  காணாத கண்கள்
ஓடாத  +  குதிரை  =  ஓடாத  குதிரை

17   ண்டு, ந்து, ன்று என முடியும் மென்றொடர்க்
கற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்
வரும் வல்லினம் மிகாது.

கண்டு  +  பேசினார். = கண்டு பேசினார்

வந்து +  சென்றார்  =  வந்து  சென்றார்

கொன்று  +  குவித்தான்  =  கொன்று குவித்தார்

செய்து   +  தந்தான்  =  செய்து  தந்தான்

உகர ஈற்று வினையெச்சத்தின் முன்

வல்லினம் மிகாது.

நன்கு  +  பேசினான்  =  நன்கு பேசினான்

நன்று  +  சொன்னாய்  =  நன்று சொன்னாய்

18 பல,  சில என்னும் சொற்களின் முன்
வல்லினம் மிகாது.

பல  +  பொருள். == பல பொருள்

சில  +  பூக்கள்  =  சில  பூக்கள்

19  இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும்

தொடர்களில் வல்லினம் மிகாது.

தேசபக்தி
ஆதிபகவன்

20. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் கள் 
என்னும் அஃறிணைப் பன்மை விகுதியும்
தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் வந்தால்
வல்லினம் மிகாது

வகுப்பு +  கள்  =  வகுப்புகள்
வாக்கு  +  கள்  = வாக்குகள்

கூப்பு  + தல்  = கூப்புதல்
தூற்று +  தல்  == தூற்றுதல்

21.படி என்னும் சொல்லுக்குப் பின் 
 வரும் வல்லினம் மிகாது.

 சொன்னபடி   +  செய்தார்  = சொன்னபடி செய்தார்
 பாடியபடி   +   தொடர்ந்தார்  = பாடியபடி தொடர்ந்தார்

22. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு
 என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம்
 மிகாது.

இவ்வளவு + கண்கள்  = இவ்வளவு கண்கள்
அவ்வளவு +  கூட்டம்    =  அவ்வளவு கூட்டம்
எவ்வளவு +  தொலைவு  = எவ்வளவு தொலைவு

 மிகும் இடங்கள், வல்லினம்  
 மிகா இடங்கள் கட்டுரைகளைப்  படித்தால் 
 தவறில்லாமல் எழுத முடியும்.
  
  பிழையின்றி தமிழ் எழுத வாழ்த்துகள்!


      


      

         

           

         
         
  

Comments

Popular Posts