செல்வத்துட் செல்வஞ் செவிச் செல்வம் ...

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்...



செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
 செல்வத்துள் எல்லாம் தலை."
                                  குறள்  :  411
                                  
செல்வத்துள் _  செல்வங்களுள்
 செல்வம் _  செல்வம் எனப்படுவது
 செவிச் செல்வம் _கேள்விச் செல்வம்
 அச் செல்வம் _ அந்தச் செல்வம்
 செல்வத்துள் _ செல்வங்கள்
 எல்லாம் _  எல்லாவற்றிலும்
 தலை _    முதன்மையானது
 
ஒருவனுக்குச் சிறந்த செல்வம் என்று கூறப்படுவது 
கேள்வியறிவால் வரும் செல்வமேயாகும்.
அச்செல்வம் எல்லாச் செல்வத்தை விடவும்
தலையாயச்  செல்வமாகக்  கருதப்படும். 

விளக்கம் : 

" கற்றலின் கேட்டலே நன்று " என்ற பழமொழி
 ஒன்று உண்டு.
 
கல்வியும் கேள்வியும் சேர்ந்து அறிவுச் செல்வத்தைக்
கொடுக்கிறது. வெறுமனே கல்வியால் மட்டும்
அறிவைப் பெற்றுவிட முடியாது.
கேள்வி ஞானம் வேண்டும் .
அங்கே இங்கே கேட்ட செய்திகளில் உள்ள
பட்டறிவு நம்மை இன்னும் அறிவுடையவர்களாக
மாற்றும்.

புத்தகங்களில் கிடைக்காத அறிவு
கேட்டுப் பெறுதல் மூலம் கிடைக்கிறது.

கல்வியை செல்வம் என்ற வள்ளுவர்
இப்போது செல்வத்தில் எல்லாம் தலையாய
செல்வம் கேள்விச் செல்வம் என்கிறார்.
நூல்களில் நுவலப்படாத எத்தனையோ
சிந்தனைகள் சமூகத்தில் சிதறிக் கிடக்கின்றன.
பிறரிடம் பேசும்போதுதான் அவை நமக்குக்
கிடைத்திட வாய்ப்பு ஏற்படும்.
 
அதற்காக நாம் மெனக்கெடத் தேவையில்லை.
பிறருடைய பேச்சினை உற்று நோக்கினாலே 
அது புரியும்.
 
"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு 
மாடல்ல மற்ற பிற "
என்றார் வள்ளுவர்.

கல்வியால் பெறுவது மட்டுமே அழிவற்ற
செல்வம் என்றார் வள்ளுவர்.

இப்போது கல்வியால் பெறும் செல்வத்தைவிட
முதன்மையானது என்று கேள்விச்
செல்வத்திற்கு மகுடம் சூட்டியுள்ளார்.
இரண்டும் முரண்பாடான
கருத்தா?

இருக்க முடியாது.

 கல்வியும் கேள்வியும் வேறு வேறு அல்ல.
 கல்வி என்பதை வெறும் புத்தகப் படிப்பாக
 மட்டும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
 அந்தக் கல்வியிலேயே கேள்வியும்
 அடங்கியிருக்கிறது.
 கேட்டுப் பெறும்போது ஐயங்களைக் கேட்டு
 தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
 அதனால்தான் நல்ல தெளிவான அறிவைக்
 கொடுக்கக் கூடிய கேள்விச் செல்வத்தைத்
 தலையாயச் செல்வமாக வள்ளுவர் கூறுகிறார்.

கேட்டல் அறிவு சார்ந்த செய்திகளை எளிதில்
புரிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது.
புராணக் கதைகளைக் கற்று தெரிந்து
கொள்வதைவிட கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது
நினைவில் அப்படியே பதிந்து போகும்.

"கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை "

என்ற குறளும் இங்கு நோக்கத் தக்கது.

English couplet : 

"Wealth of wealth is wealth acquired be ear
attent wealth mid all wealth supremely excellent "

Explanation : 

Wealth gained by the ear is wealth of wealth; 
that wealth is the chief of all wealth .

Transliteration : 

"Selvaththt selvanj chevichchelvam Achchelvam
Selvathu Lellaam thalai "





Comments

Popular Posts