மதியாதார் முற்றம்...
மதியாதார் முற்றம்...
மன்னர்கள் வாயிலிருந்து வரும்
வார்த்தைதான் சாசனம்.
மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.
மன்னர்களால் வாழ்ந்தவர்களும் உண்டு.
வீழ்ந்தவர்களும் உண்டு.
வாய் தவறி வந்த வார்த்தைகள்கூட
ஆணையாகி சில நேரங்களில்
ஆபத்துக்களைத் தந்துண்டு.
இங்கே சோழ மன்னர் ஒருவருக்கு
திடீரென்று ஒரு ஆசை.
புலவர்களை ஏராளமான பாடல்கள்
பாட வைத்து அதனைக் கேட்டு
இன்புற வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆசை இருக்கலாம். தப்பில்லை.
அதுவும் இப்பவே வேண்டும் என்று
அடம்பிடிப்பது போன்ற ஒரு ஆசை.
நாளை காலைக்குள் நாலு கோடிப் பாடல்கள்
வேண்டும் என்கிறார் மன்னர்.
அதையே அவையிலுள்ள புலவர்களுக்கு
ஆணையாகப் பிறப்பித்து விடுகிறார்.
மன்னன் ஆணையாயிற்றே...
அதுவும் நாலு கோடிப்பாடல்...
நாளை காலைக்குள் நாலு கோடி பாடலா?
நான் எங்கே போவேன்....எங்கே போவேன்...
யாரிடம் போய் கேட்பேன்....ஐயோ...
எனக்கு வேணும்...எனக்கு வேணும்...
எனக்கு நல்லா வேணும். நாளைக்குள்
நாலுகோடிப்பாடல் எழுத எப்படி முடியும்?
ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்து
விட்டனர்.
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு
அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கே ஔவையார் வருகிறார்.
என்ன.....என்னாயிற்று...
ஏதோ சோகமாக இருப்பது போல் தெரிகிறதே!
கேட்கிறார் ஔவை.
இவரிடம் சொல்லிவிட்டால் மட்டும் நம்
சிக்கல் தீர்ந்து விடுமா என்ன என்று
நினைத்தபடி அமைதியாக இருந்தனர்.
ஏதாவது பிரச்சினையா?மறுபடியும் கேட்கிறார்
ஔவை.
" நாளை காலைக்குள் நாலு கோடி பாடல்
எழுதித் தர வேண்டும் என்று மன்னர்
ஆணையிட்டிருக்கிறார்.
ஒரு கோடியா ...இரண்டு கோடியா....
நாலு கோடிக்கு நாங்கள் எங்கே போவோம்? "
என்றனர் புலவர்கள்.
"ப்பூ....இவ்வளவுதானா...இதுக்குப்போய்
கவலைப்படுகிறீர்களாக்கும்" என்று
சாதாரணமாகப் பதிலளித்தார் ஔவை.
"இவ்வளவு சுலபமாக சொல்லிட்டீங்க...
நாலு கோடிப் பாடலுங்க....நாலு கோடிப்பாடல்.
இரவு முழுவதும் கண்விழித்து
எழுதினாலும் நாற்பது பாடல் தேராது...."
"அட....சொல்லிட்டீங்கல்ல...விடுங்க..
நாளை காலையில் பாருங்க..
நாலுகோடி பாடலும் கைக்கு வரும்"
என்றபடி முதல் பாடலைப் பாடி காட்டிவிட்டு
சென்றுவிட்டார் ஔவை.
"ஏதோ நீங்க சொல்லுறீங்க...நாங்களும் நம்புறோம் "
என்று நம்பிக்கை இல்லாமல் சென்றனர் புலவர்கள்.
இரவு முழுவதும் ஒருவருக்கும் தூக்கமே வரவில்லை.
காலையும் வந்தது.
ஔவையார் நாலுகோடி பாடலோடு வந்தார்.
புலவர்கள் கையில் கொடுத்தார்.
அனைவரும் பாடலோடு அரசவைக்குச் சென்றனர்.
மன்னரும் வந்து இருக்கையில் அமர்ந்தார்.
என்ன நடக்கப் போகிறதோ ...
ஏது நடக்கப் போகிறதோ ....
அனைவர் முகத்திலும் ஒரு கவலை
அப்பிக் கிடந்தது.
அவையும் தொடங்கியது.மன்னர் புலவர்களைப்
பார்த்தார்.
பார்வையின் பொருளைத் தெரிந்து
கொண்டு "மன்னா.!... பாடலைப் பாடலாமா "என்றார்.
புலவர் ஒருவர்.
"ஓ...தாராளமாக....பாடுங்கள்"அனுமதி
அளித்தார் மன்னர்.
முதல் கோடிக்கான பாடலைப் பாடினார்.
🌐 "மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்."
முதல் பாடலைப் பாடிவிட்டு் மன்னனைப் பார்த்தார் .
மன்னன் முகத்தில் மகிழ்ச்சி.
அருமையான கருத்து. பாராட்டினார் மன்னர்.
அடுத்த பாடலைப் பாடத் தொடங்கினார் புலவர்.
இரண்டாவது கோடிக்கான பாடல் :
🌐. " உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"
ஆஹா...என்றார் மன்னர்.உற்சாக மிகுதியில்
மூன்றாவது பாடல் வந்தது.
மூன்றாவது கோடிக்கான பாடல் :
🌐 " கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்."
அருமை... அருமை என்று பாராட்டினார் மன்னர்.
இன்னும் இருக்கு கேளுங்க என்றபடி
நாலாவது பாடல் தொடங்கியது.
நாலாவது கோடிக்கான பாடல் :
🌐 கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
இந்தா பிடியுங்கள் நாலுகோடி என்பது போல
பாடிவிட்டு இருக்கையில் அமர்ந்தார் .
மன்னருக்கு மகிழ்ச்சி தாழவில்லை.
ஆஹா....இதுவன்றோ புலமை வாயார வாழ்த்தினார்.
இதற்கும் நாலு கோடிக்கும் அப்படி என்ன
சம்பந்தம் இருக்கிறது
என்பது போல அனைவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டனர்.
நீங்களும் அப்படித்தான் பார்க்கிறீர்களா!
உங்களுக்கு பொருள்தானே வேண்டும்.
இந்தா பிடிங்க....
ஆமாங்க....நம்மை மதிக்காதவரை
மதித்து அவர் வீட்டிற்கு ஒருபோதும்
போகவே கூடாதாம்.
அப்படி நீங்கள் போகாதிருத்தல்
கோடி பொன் பெறுமாம்.
மதியாதார் தலைவாசல் மிதியாதே
என்று சும்மாவா சொன்னாங்க...
இரண்டாவது கோடியாவது...
சாப்பிடுங்க ...சாப்பிடுங்க...என்று நம்மை
வருந்தி சாப்பிடும்படி கேட்டுக் கொள்ளும்
பண்பு இல்லாதார் வீட்டில் சாப்பிடாமல்
கிளம்பிவிட வேண்டும்.
பண்பில்லார் வீட்டில் சாப்பிடாதிருத்தல்
கோடி பொன் பெறுமாம்.
சாப்பிடுறீகளா ...என்று ஒப்புக்கு
வீட்டுக்காரங்க சொல்லி வைக்க
சட்டுன்னு சாப்பிட உட்கார்ந்துவிடக்
கூடாது என்கிறார் ஔவை.
மூன்றாவது கோடியாவது....
கோடி பணம் கொடுத்தாவது நல்ல குடியில்
பிறந்தவர்களோடு
சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டுமாம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இல்லையா...
இதைத்தான் இப்படி சொல்லி இருக்கிறார் ஔவை.
இப்போது மூன்றாவது கோடியும் கொடுத்தாயிற்று.
நாலாவது கோடி நச்சென்று அடித்தார் பாருங்க...
ஒரு அடி.
நாக்கு சுத்தம் வேண்டுங்க...
கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும்
ஒருபோதும் புரட்டி புரட்டி பேசக்கூடாதாம்.
அதாவது பிறழ் சாட்சியாகிவிடக் கூடாதாம்.
அங்கொன்று பேசுவது....இங்கொன்று பேசுவது
இந்த கோள் சொல்கிற புத்தியோ....
பொய் பேசுகிற குணமோ எதுவும் கூடவே கூடாதாம்.
நான்கு பாடலையும் கேட்ட மன்னனுக்கு
அதற்குமேல் பேச நா எழவில்லை.
இதற்கு நாலு கோடி என்ன...
நானூறு கோடியே கொடுக்கலாம்.
அப்பப்பா....என்ன புலமை ! என்ன புலமை!
எவ்வளவு சாதுரியம்!
எவ்வளவு மெச்சினாலும் தகும்...
மெச்சினால் மட்டும் போதுமா...
தக்க சன்மானம் கொடுக்க வேண்டுமல்லவா!
பாராட்டிவிட்டு நாலு கோடி பொன் கொடுத்தாராம் மன்னர்.
நாலு கோடி பொன்னா.....ஆச்சரியமாக இருக்குல்ல..
பணம் என்னங்க பணம்.
குணம் தானே நிரந்தரம்.
தமிழர் தன்மானம் கொண்டவர்கள்.
நற்பண்புகள் மிகுந்தவர்கள்.
தமிழரின் தன்மானத்தைக் கோடி....கோடி...
என்ற வார்த்தைக்குள் தோய்த்து
கோடி கோடியாய் இருக்கும் தமிழர்கள்
உள்ளங்களைக் கொள்ளையடித்த
ஔவையின் இந்த பாடலுக்கு நாலு கோடி என்ன...
நாலாயிரம் கோடியே கொடுக்கலாம்
என்கிறீர்களா?
அதுதாங்க உண்மை.
Comments
Post a Comment