புதுக்கணக்கு எழுதுவோம்

  புதுக்கணக்கு எழுதுவோம்.....

எல்லோருடைய உள்ளங்களிலும்
உற்சாகம்.
முகங்களில் நம்பிக்கை ஒளிக் கீற்றுகள்.
நாளைய விடியல் நல்லதாக விடியாதா என 
ஏக்கத்தோடு காத்திருப்பது கண்களில்
தெரிகிறது.

நாட்டையே ஆட்டிப் படைக்கும்
நாசக்கார உயிர்த் தொற்று
வரும் ஆண்டாவது நாட்டைவிட்டு ஓடுமா
என்ற கேள்வி ஒருபக்கம்.....

இரண்டாவது அலை வீசுதாமே
அதன் விபரீதங்கள் கடந்த முறையைவிட
பயங்கரமாக இருக்குமாமே...
ஆண்டவா எங்களைக் காப்பாற்று என்ற
வேண்டுதல்களின் ஒலி மறுப்பக்கம்....

இன்னொரு லாக்டவுன் வந்துவிடுமோ....
ஐயோ....அம்மா.... வேண்டாம்டா சாமி...
முதல் லாக்டவுனிலிருந்தே எங்களால்
இன்னும் எழும்ப முடியவில்லையே
நினைத்தாலே ஈரக்குலை எல்லாம்
நடுங்குதே...என்ற பீதி இன்னொரு பக்கம்...

இந்த வருடமாவது பள்ளிக்குப் போவோமா? 
பள்ளி நாட்களில் செய்த குறும்புகளை மறந்து பல
மாதங்கள் ஆயிற்று.
மறுபடியும் பள்ளி வளாகத்தில்
துள்ளித் திரியும் வாய்ப்பு ஏற்படுமா ?
என்ற ஏக்கத்தோடு எட்டிப் பார்த்துப் பார்த்துக்
கனவுகளோடு கழிந்துபோன
நாட்களை நினைத்து நினைத்து
மருட்சியோடு இருக்கும்
மாணவர்கள் ஒரு பக்கம்...

தோழர்களோடு தோளோடு தோள் சேர்த்து
தோழமையோடு சுற்றி வர
முடியாமல் காவல்துறையைக் கண்டு
 அஞ்சி அஞ்சி பதுங்கும் 
இளைஞர்கள் ஒரு பக்கம்...

வீட்டோடு அடைபட்டு நாள் முழுவதும்
சமையலறையே தஞ்சம் என்ற நிலை
மாறி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும்
காலம் எப்போது வரும் என்ற கேள்வியோடு
நாட்களைக் கடத்திவரும் தாய்மார்கள்
 ஒரு பக்கம் ....

 வேலை இழந்து விட்டோமே ...
குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று
 தின்னும் தின்னாமலும்
 எதிர்காலம் குறித்த உறுதியான நிலைப்பாடு
எடுக்க முடியாமல் தடுமாறும்
குடும்பத் தலைவர்கள் இன்னொரு பக்கம்....

திரும்பிய இடமெல்லாம் 
போராட்டமும் புலம்பலும்....
பசியும் பட்டினியும்...
வறுமையும் விரக்தியும்...
தற்கொலைகளும் தடுமாற்றங்களும்...
அழுகையும் கண்ணீரும்......

அப்பப்பா ....போதுமடா சாமி
என்று ஒரு கட்டத்தில் சோர்ந்தே 
வீழ்ந்து விட்டோம்.

எல்லா தரப்பினரிடமிருந்தும் ஒரு
விரக்தி....
நாளைய விடியல்  குறித்த அச்சம்....
நம்பிக்கை  இன்மை...
உலகம் முழுவதுமே ஒரு கார்மேகம்
சூழ்ந்த சூழல்....
எதிர்பாராத , நினைத்துப் பார்த்திராத
சூழலைச் சந்தித்த அதிர்ச்சி...

மொத்தத்தில் மகிழ்ச்சியைத் தொலைக்க
 வைத்த ஆண்டு....
முன்னேற்றத்தை முடக்கிப் போட்ட ஆண்டு...
இப்படி வெறுமையையும் வெறுப்பையும்
மட்டுமே தந்து போன ஆண்டாகவே
இரண்டாயிரத்து
 இருபதாம் ஆண்டு கடந்து போனது.

போதும்...போதும் என்று சொல்லிச் சொல்லி
ஒரு கட்டத்தில் புலம்பலே வாழ்க்கை என்று
புலம்பலோடேயே வாழப் பழகிக் கொண்டோம்.

இனியொரு ஆண்டு எங்களுக்கு இப்படி 
வந்திடக் கூடாதப்பா சாமி...
என்ற வேண்டுதலோடு 
புதிய ஆண்டை எதிர்பார்த்து
அனைவர் விழிகளும் காத்துக் கிடக்கின்றன.

கொரோனாவை உரு தெரியாமல் 
 விரட்டப்போகும் தடுப்பூசியைக்
கொண்டுவரும் ஆண்டை  
எதிர்பார்த்து கையில் பூங்கொத்து
ஏந்தி காத்திருக்கிறோம்.

புதிய ஆண்டு நல்ல ஆண்டாக 
அமையும் என்று சோதிடர் எழுதி 
இருந்தால் அந்தப் பக்கத்தை மறுபடி மறுபடி 
புரட்டிப் பார்க்க மனம் ஓடுகிறது.

ஏகப்பட்ட கேள்விகளையும்
எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டு
புத்தாண்டு பிறந்திருக்கிறது.

இதுவரை பிறந்த புத்தாண்டுகளிலேயே 
அதிகப்படியான எதிர்பார்ப்புகளோடு 
வரும் புத்தாண்டு இதுவாகத்தான் இருக்கும்.

எதிர்பார்ப்புகள்  அதிகமானால் ஏமாற்றங்கள்
வரும்போது அதனை நம்மால் தாங்க முடியாது.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 
புத்தாண்டை  வரவேற்போம்.

நல்லதே நடக்கும். நன்மையானது மட்டுமே நிகழும்
என்ற நேர்மறை சிந்தனை
மட்டுமே மனதில் இருக்கட்டும்.

நடக்கப்போகிற யாவும் நல்லதாகவே இருக்கும்
 என்ற நல்ல மனநிலையோடு 
புத்தாண்டை எதிர்கொள்வோம்.

இந்தப் புத்தாண்டு உங்கள் எண்ணம்போல் 
இனிமையான ஆண்டாக இருக்கட்டும்.

இனி பழையவை அல்ல.
எல்லாம் புதிதாயின.

நம்பிக்கை என்னும் ஒற்றை சொல்லை
மனதில் சுமந்து கொண்டு 
புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைப்போம்.

நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்.
இமயமலையையே தாண்டி விடலாம்.

மலைபோல வந்த சிக்கல்கள்
 தவிடு பொடியாக்கிவிட்டன.
 நாம் காணும் கனவின் காலம் இதோ....
அருகில் தெரிகிறது.

நம்மை மிஞ்சி எதுவுமே நடந்துவிடப்
போவதில்லை என்று நம்மைச் சுற்றி
ஒரு நம்பிக்கை வளையம் போட்டு
 எல்லாவற்றையும் எதிர்கொள்வோம்.

இந்த ஆண்டு நன்மையானது மட்டுமே நடக்கும்.
சிந்தனைகள் நன்மையை
நோக்கியதாகவே இருக்கட்டும்.

நல்லவை மட்டுமே நடக்கும் என்ற ஒற்றைச்
சொற்றொடரோடு புதுக்கணக்கைத் தொடங்குவோம்.

புத்தாண்டில் புதுமைகள் நிகழட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!









Comments

  1. கடந்த ஆண்டின் எதிர்மறை நிகழ்வுகளையும் புத்தாண்டின் நேர்மறை எண்ணங்களையும் பிதிவிட்டது மிக அருமை.புத்தாண்டு நல்வாழ்த்துக்ள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts