உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உப்பிட்டவரை உள்ளளவும் நினை 


" ஒரு நாளாவது உங்க உப்பை
தின்னுருக்கான் இல்லியா...
அதற்கு கொஞ்சமாவது நன்றி
விசுவாசம் காட்ட வேண்டாமா ?
கொஞ்சம்கூட நன்றி கிடையாது...."

பல நேரங்களில் நாம் கேட்ட குரல்...
கேட்டுக் கொண்டிருக்கும் குரல்....

உப்பைத் தின்றால் நன்றி 

இருக்கணுமா?

உப்புக்கும் நன்றிக்கும் என்ன தொடர்பு?
என்றாவது சிந்தித்தோமா?

"கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா?
நீ சோத்துல உப்புதானே போட்டு
சாப்புடுற...."
இந்தக் கேள்விகளும் நம் காதுகளுக்கு
வருவதுண்டு.

சூடு சொரணை வர வேண்டுமானாலும்
உப்பு  வேண்டுமாம்.

சூடு சொரணை என்றால் என்ன ?

கார சாரமா இருக்கணுமாம்.

அதை எப்படி எல்லாம் சுற்றி வளைத்து

உப்பு போட்டுத் தாராங்க பாருங்க....

சோறு என்றால் சுவை வேண்டும்.
சுவை இருந்தால் மட்டுமே உண்பதில்
மகிழ்ச்சி கிடைக்கும்.
உப்பு இல்லாமல் சப்பென்று இருந்தால் 
சுவாரசியம் இருக்காது.

இன்பமும் மகிழ்ச்சியும் தருவது உப்பு.

உப்பிட்டவர் என்றால் இனிமை சேர்த்தவர்
என்றும் அர்த்தம் உண்டாம்...

ஆஹா...இப்படி ஒரு பொருள் இருப்பது
இதுவரை தெரியாதே என்கிறீர்களா....

இன்று தெரிந்துவிட்டீர்களல்லவா!

அப்படியானால் தாராளமாக உப்பைச்
சேர்த்துக் கொள்ளலாம்....

தாராளமாகவா...என்ற உங்கள் நமட்டுச்
சிரிப்பு என் காதுகளில் விழுகிறது.

நான் தாராளமாக என்றதும் ஏராளமாக உப்பைக்
கொட்டி உணவின் சுவையைக் கெடுத்து விடாதீர்கள்.

அதிகமானால் அமிர்தமும் நஞ்சுதான்
என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

அட ...உப்பு கதையைச் சொல்லி ...சொல்ல
வந்த கருத்தை விட்டுவிட்டேன்
பாருங்க ...

நமக்கு சொல்லாலோ செயலாலோ ஒருவர்செய்த
உதவி மகிழ்ச்சி தருவதாக இருந்தால் அவரை உயிர்
உள்ளவரை மறக்கக் கூடாதாம்.

என்றென்றும் நம் நினைவில் வைத்திருக்க
வேண்டுமாம்.

"தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார் "

" காலத்தினாற்  செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

" பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது"

என்று நன்றியின் முக்கியத்துவத்தை பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார்
திருவள்ளுவர்.

இந்த நன்றியை வலியுறுத்த வந்ததுதான்
இந்த உப்புப் பழமொழி.

நன்றி மறவாதிருக்க வேண்டும் என்பதற்காக,

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "

என்று கூறி எச்சரிக்கையும் செய்திருக்கிறார் வள்ளுவர்.

உப்புக்கும் நன்றிக்கும் இப்படி ஒரு உறவா!

 இவ்வளவு விசயம் உப்புக்குள் இருக்கிறதா?
அதனால்தான் உயிருள்ளவரை என்ற ஒரு
வார்த்தையும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறதோ....
இருக்கலாம்...இருக்கலாம்.

இன்னும் யார்யார் எல்லாம் உப்புப்பற்றி

பேசி இருக்கிறார்கள் பாருங்க...

பைபிளில் இயேசு கிறிஸ்து தனது மலை
பிரசங்கத்தில்  உப்பைப்  பற்றி
பேசுகிறார்.

"நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்.
உப்பானது சாரமற்றுப் போனால் எதினால் சாரமாக்கப்படும் ?
வெளியே கொட்டப்படுவதற்கும் மனிதரால்
மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும்
உதவாது"
என்று தன் சீடர்களுக்கு உபதேசித்தார்.

சாரமற்ற உப்பாக அல்ல பிறருக்குப்
பயன்படும் சாரமுள்ள உப்பாக இருக்க வேண்டும்.
நல்லது செய்ய வேண்டுமா?
நீங்கள் உப்பாக நடுநிலை தவறாது...அதாவது
கூடவும் குறையவும் இடங்கொடுக்காமல்
இருங்கள் என்கிறார் கிறிஸ்து.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகித்தது காந்திஜியின்
உப்பு சத்தியாகிரகம்.

விடுதலைக்குக் காரணமாக இருந்ததும் உப்பு.
இப்படி உப்பைப் பற்றி பேசாதவர்களே
இருக்க முடியாது.

"உப்பில்லா பண்டம் குப்பையிலே"

உப்பிற்கும் உணவிற்கும் ரொம்ப நெருக்கம்.

நாம் வாங்கிய கடனை எப்படியாவது
அடைத்துவிடலாம்.
ஆனால் ஒருவருக்கு நன்றிக்கடன் 
பட்டிருந்தால் காலம் முழுவதும்
அதனை அடைக்க முடியாதுங்க..

நன்றிக்கடனை அடைக்க வேண்டும் என்றால்
வாழ்க்கை முழுவதும் நாம் நன்றி
உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

நன்றி மறவா நல்லவர்களாக வாழ வேண்டும்.
அதுதாங்க நாம் அவர்களுக்குச் செய்யும் உதவியாக
இருக்க முடியும்.

அதனால் தான் "உப்பிட்டவரை உள்ளளவும்
நினை" என்ற பழமொழி வந்ததாம்.


Comments

Popular Posts