சுரையாழ அம்மி மிதப்ப....

சுரையாழ அம்மி மிதப்பு....


இலக்கியங்களைப் படிக்கப் படிக்க
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்
என உள்ளம் கேட்கும். அதனால்தான்
இலக்கிய இன்பம் என்கிறோம்.
இன்பத்தைத் தேடிதானே இந்த வாழ்க்கை.

இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள்,
உள்ளுறைகள் பல நேரங்களில் எங்கிருந்து
புறப்பட்டு வந்தது இத்தகைய சிந்தனைகளும்
கற்பனைகளும் என நம்மை வியக்க வைக்கும்.

சில உவமைகள் பல நினைவலைகளைக்
கொண்டுவந்து கண்முன் காட்சிப்படுத்தி 
அழகுபடுத்தி நிற்கும்.
நம்மோடு நேரடியாகப் பேசும்.
அவற்றை உள்ளுந்தோறும் உவகை 
மேலிடும். அவற்றோடு தொடர்புடைய
மேலும் பல கருத்துக்களை
ஒப்பிட்டுப் பார்த்து மகிழ வைக்கும்.

ஏதோ ஒரு சிறுகதையை வாசித்த
உணர்வைக் கொண்டு வரும்.
ஒற்றை வரிக்குள் இவ்வளவு 
செய்திகளா என வியக்க வைக்கும்.
அவ்வாறு நான் வியந்துபோன
இலக்கிய உவமைகள் ஏராளம் ஏராளம்.
அவற்றுள் ஒன்றே ஒன்றை எடுத்து
உங்கள் முன் படைக்கிறேன்.

இன்றைய இலக்கிய விருந்து இதோ:

நற்குடியில் பிறந்த நல்லவர்கள்
வறுமையால் வாடுகின்றனராம்.
கீழோர் எல்லாம் செல்வச் செழிப்புடன்
தலை நிமிர்ந்து வாழ்கின்றனராம்.
இது இயற்கைக்கு முரணான செயல்.
இது நடைபெறாது. நடைபெற்றிருக்கவும்
கூடாது.
ஆனால் அது நடந்து விட்டது.

அதனை சொல்ல வந்த இடத்தில்
சுரையாழ அம்மி மிதப்பு
என்ற பழமொழியை எடுத்து
வைக்கிறார் புலவர்.

அது என்ன சுரையாழ அம்மி மிதப்பு?

"சுரையாழ அம்மி மிதப்பு "
என்பது ஒரு பழமொழி.

எங்கேயாவது சுரைக்குடுக்கை நீரில் 
அமிழ்ந்து போவதையும்
அம்மிக்கல்  நீரில் மிதப்பதையும்
பார்த்திருக்கிறீர்களா?

அதெப்படி பார்க்க முடியும்?
என்ற கேள்வி எழலாம்.

சுரைக்குடுக்கையா அது என்னங்க?
என்று கேட்பவர்களும் இருக்கத்தான்
செய்வார்கள்.

முற்றிய சுரைக்காய் நெற்றாகிய பின்னர்
அதாவது காய்ந்த பின்னர்
அதன் உள்ளே உள்ள விதைகளை எல்லாம்
எடுத்துவிட்டு ஒரு குடுவையாக்கி கையில்
கோத்துக் கொண்டு யாசகம் கேட்க
வருபவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

பெரும்பாலும் சாதுக்கள் கையில் இது
இருக்கும்.
இதுதாங்க சுரைக் குடுக்கை என்பது.

இத்தகைய சுரை நெற்றுகள் பெருவெள்ள
காலங்களில் காட்டாற்று வெள்ளத்தால்
அடித்து வரப்பட்டு குளங்களில் மிதப்பதை
நம்மில் ஒரு சிலர் கண்டிருக்கலாம்.

நெற்றாகிப் போன சுரைக்குடுக்கை
நீரில் ஆழ்ந்து போகுமா ?

அதுபோல அம்மிக்கல் எங்காவது
மிதப்பதைக் கண்டிருப்போமா ?

இவை இயற்கைக்கு மாறான செயலாக
இருக்கிறதே!

இப்படி இயற்கைக்கு மாறான செயல்தான்
உயர்ந்தோர் தாழ்தலும் கீழோர்
உயர்நிலையில் இருத்தலும் என்கிறார்
புலவர்.

இந்தக் கருத்தை சாதாரணமாக
சொல்லிவிட்டுப் போனால் இந்த அளவு
அந்தக் கருத்து நம்முள் ஒரு தாக்கத்தை 
ஏற்படுத்தி இருக்காது.

சொல்லப்பட்ட  பழமொழி,அதன்மூலமாக
கூறப்பட்ட  கருத்து நம்மை சிந்திக்க வைக்கிறது.
ஒரு அழகிய சுனையின்
காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து
நிறுத்தி காட்சியில் மகிழ வைக்கிறது.

பழமொழி பாடல் இதோ :

"உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே
சுரையாழ அம்மி மிதப்பு "


தண்ணீரில் மிதக்க வேண்டிய ஒரு பொருள்
கீழே அமிழ்ந்து கிடக்கிறது.
கீழே அமிழ்ந்து கிடக்க வேண்டிய பொருள்
மேலே மிதக்கிறது.
எவ்வளவு பெரிய தலைகீழ் மாற்றம் பாருங்கள்.

இந்தக் கருத்தை சுமந்து வரும் இன்னொரு
பாடல் இதோ :

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை "

 தலைவன் பிரிந்து போய்
பரத்தை வீட்டில் வாழ்கிறான்.
வாழ வேண்டிய தலைவி தலைவனைப்
பிரிந்ததால் வாடிக் கிடக்கிறாள்.
ஆனால் பரத்தை தலைவனோடு இன்பமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இது எப்படி இருக்கிறதாம்.
சுரை ஆழ்ந்து கிடக்க
அம்மி மிதந்து செல்வது போல்
இருக்கிறதாம்.
யானை நீரில் மூழ்குவது போலவும்
சிறுமுயல் நீரில் நிலை கொண்டு 
நிற்பது போலவும்
இருக்கிறதாம்.

வாழ வேண்டியவர்கள் வாழாதிருப்பதும்
தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டியவர்கள்
வாழ்ந்து கொண்டிருப்பதும் இயற்கைக்கு
முரணான செயல்.

இதுவும் சில இடங்களில் நடப்பதுண்டு.
நடக்காதது ...இயற்கைக்கு முரணானது
இங்கே  நடக்கின்றது ...என்பதைக்  கூறி
நம் கவனத்தைப் பாடலின்பால் ஈர்க்க வைத்து
சிந்திக்க வைத்த பெருமை புலவருக்கு உண்டு.

சுரையாழ அம்மி மிதப்பு....
எவ்வளவு அருமையான சிந்தனையை
விதைத்துப் போன பழமொழி. 

Comments

Popular Posts