குற்றியலுகரம்

            குற்றியலுகரம்

உகரம்  ஒரு மாத்திரை உடையது.
 ஒரு மாத்திரை அளவு குறைந்து
 ஒலிக்கும் இடங்களும் உண்டு. 
 அவ்வாறு உகரம் தன் மாத்திரை அளவில்
 குறைந்து ஒலிக்கும் போது
 குற்றியலுகரம் என்று அழைக்கப்படும்.

குறுமை + இயல் + உகரம்  = குற்றியலுகரம்

வல்லின மெய்யோடு சேர்ந்த உகரம்
சொல்லின் கடைசி எழுத்தாக வரும் போது
தன் மாத்திரை அளவான ஒரு மாத்திரையிலிருந்து
குறைந்து அரை மாத்திரை அளவாக
ஒலித்தால் அது குற்றியலுகரமாகும்.

கு, சு , டு , து , பு , று
ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே
குற்றியலுகர எழுத்துகளாக வரும்.

குற்றியலுகரத்தின் வகைகள் :

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

1.நெடில் தொடர்க் குற்றியலுகரம்

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

3. உயிர்த் தொடர் குற்றியலுகரம்

4. வன்தொடர்க் குற்றியலுகரம்

5. மென்தொடர்க் குற்றியலுகரம்

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என்பனவாகும்.

 1 . நெடில் தொடர் குற்றியலுகரம் : 

தனியாக வரும் நெடில் எழுத்துகளை அடுத்து
குற்றியலுகர எழுத்துகளான கு ,சு, டு , து , பு  ,று
 என்ற எழுத்தில் ஏதாவது ஒன்று வந்தால் அது
 நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும்.

பாகு
தூசு
காடு
காது
ஆறு
வீசு

2 . ஆய்தத் தொடர் குற்றியலுகரம் :

ஃ என்பது ஆய்த எழுத்து

ஆய்த எழுத்தை அடுத்து கு, சு , டு , து , பு , று 
என்னும் எழுத்துகளில் ஏதாவது ஒன்று வந்தால்
அது ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
எனப்படும்.

எஃகு
அஃது
கஃசு


3 . உயிர்த் தொடர் குற்றியலுகரம்

உயிர் எழுத்தைத் தொடர்ந்து
தன் ஓசையில் குறைந்து வரும்
உகரம்  உயிர்த் தொடர் குற்றியலுகரம் ஆகும்.

உயிர்த் தொடர் குற்றியலுகரம் என்கிறீர்களே
அப்படியானால் அ , ஆ , இ , ஈ ,உ ,ஊ 
எ ,ஏ  ஐ , ஒ , ஓ,  ஔ இந்த பன்னிரண்டு
எழுத்துகளையும் நாம் உயிர் எழுத்துகள் என்கிறோம்.
அந்த  எழுத்துகளின் பின்னர் வருவதுதானே 
உயிர்த் தொடர் குற்றியலுகரம் ஆகும்.
ஆனால் எடுத்துக்காட்டில் வேறுவிதமாக
சொல்லப்பட்டிருக்கிறதே என்ற ஐயம்
எழலாம்.

மிளகு என்ற சொல்லை எடுத்துக் கொள்வோமானால்
குற்றியலுகத்திற்கு முந்தைய எழுத்து
'ள' என்பதாகும்.

ள்  + அ = ள

இதில் 'அ' என்ற உயிர் ஒலியே இறுதியில்
நிற்கிறது.

ஆதலால்   ' அ 'என்ற உயிர் எழுத்தை அடுத்து
உகரம் வருவதாகவே கொள்ளப்படும்.
இங்கே 'அ 'என்ற எழுத்தை அடுத்து
வந்த உகரம் தன் மாத்திரை அளவில்
குறைந்து ஒலித்ததால்
உயிர்த் தொடர் குற்றியலுகரமாக
கொள்ளப்படுகிறது.

பா என்ற எழுத்து ப்  +  ஆ   = பாடு

பாடு ஆகவே பாடு உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
ஆகும்.

உயிர்மெய் எழுத்துகள் இந்த
வகையில் பிரித்து அறிக.

அழகு
அரசு 
பண்பாடு 
உனது
உருபு 
பாலாறு
விறகு
அரிது
மிளகு
அடகு


4 . வன்தொடர்க் குற்றியலுகரம் :

வல்லின  மெய் எழுத்துகள்
க் , ச் , ட் , த் ,ப் , ற் 
என்பனவாம்.

 வல்லின மெய் எழுத்தை அடுத்து
 கு , சு ,டு  , து , பு ,று  என்னும் எழுத்துகளில்
 ஏதாவது ஒன்று வந்தால் அது குற்றியலுகரம்
 ஆகும்.

பாக்கு
தச்சு
பட்டு
பத்து
உப்பு
காற்று
பருப்பு
கொடுக்கு
பேச்சு
மத்து
வேட்டு
நேற்று

 5 . மென்தொடர்க் குற்றியலுகரம் :

மெல்லின மெய் எழுத்துகள் 
ஞ் , ங் , ண் ,ந் , ம் , ன்
என்பனவாம்.

மெல்லின மெய் எழுத்தை அடுத்து
கு  , சு ,ட , து , பு , று என்னும் எழுத்துகளுள்
ஏதாவது ஒன்று வந்தால் அது மென்தொடர்
குற்றியலுகரம் ஆகும்.

சங்கு
மஞ்சு 
மண்டு
பந்து
காம்பு
கன்று

6 . இடைத் தொடர்க் குற்றியலுகரம் :

இடையின மெய் எழுத்துகள் 
ய்,  ர்,  ல்,  வ் , ழ் ,  ள் 
என்பனவாம்.

இடையின மெய் எழுத்தை அடுத்து
கு  , சு , டு ,  து , பு , று  என்னும்
எழுத்தகளுள் ஏதாவது ஒன்று வந்தால்
அது இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

மூழ்கு
கொய்து
மார்பு
பல்கு
சார்பு
சால்பு

 குற்றியலுகர எழுத்துகளை உற்று நோக்கி
 தனித்தனியே வகைப்படுத்தி எழுதி
 வைத்துப் படித்துப் பழகுங்கள்.
 எளிதில் மனதில் பதியும்.
 ஐயம் எழ வாய்ப்பே எழாது.










Comments

Popular Posts