துணிந்தவனுக்குத் துக்கமில்லை

     துணிந்தவனுக்குத் துக்கமில்லை


"துணிந்தவனுக்கு சமுத்திரமும்
முழங்கால் மட்டம் "என்பார்கள்.

ஒரு காரியத்தில் இறங்கி செயல்பட வேண்டும்
என்ற துணிவு வந்துவிட்டால்
எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும்
மலைப்பாக இருக்காது.
அப்படிப்பட்ட துணிச்சல்காரர்கள் பூ...

இவ்வளவு தானா..?. என்று முனைப்போடு
களத்தில் இறங்கி வேலை செய்வார்கள்.
இடையில் எந்த சக்தியாலும் அவர்களைத்
தடுத்து நிறுத்திவிட முடியாது.

இதைத்தான் 

"துணிந்தவனுக்குத் துக்கமில்லை"

என்று சொல்வார்கள்.

பறந்தால் கீழே விழுந்துவிடுவோமே என்ற

 அச்சமிருந்தால் எந்தப் பறவையும்

 கூட்டிலிருந்து வெளிவர முடியாது.
விழுந்தாலும் பரவாயில்லை என்ற துணிச்சலோடு

பறக்க முற்படும்போதுதான் பறவையால்
பறக்க முடிகிறது.
பறவை தன் இறக்கைமீது உள்ள
ஒரே நம்பிக்கையில் துணிந்து
பறக்க முற்படுகிறது.

ஏதோ ஒரு துணிச்சலில் மரத்தில் ஏறி விடுவோம்.
இறந்கும் போது கால் நடுங்கும்.
வியர்த்து விறுவிறுத்து அண்ணே கொஞ்சம்
இறக்கிவிடுங்களேன்.....
அக்கா ஒரு கை பிடியேன்.....
என்று மன்றாடிக் கொண்டிருப்போம்.

பல நேரங்களில் நம் துணிவு

இப்படித்தான் இருக்கும்.

கீழே விழுந்தால் என்ன ?

 விழமாட்டோம் என்ற நம்பிக்கையில்தானே

துணிந்து யாருக்கும் தெரியாமல்

மரத்தில் ஏறினோம்.

இறங்கும்போது மட்டும் அக்காவும்

அண்ணனும் துணைக்கு எதற்கு?

ஏறும்போது இருந்த துணிச்சல் இறங்கும்போது

எங்கே காணாமல் போனது?

தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே

 துணிச்சல் வரும்.

விழுந்தாலும் எழும்பிவிடலாம்

என்ற நம்பிக்கை இருக்கும் குழந்தைதான்
மறுபடியும் மறுபடியும் துணிச்சலோடு

நடக்க முயற்சி செய்யும் .

துணிச்சல் இருந்தால்தான் நீச்சல்
அடிக்க முடியும்.
இல்லை என்றால் முட்டளவு தண்ணீர்
இருந்தாலும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு
எட்ட நின்று தண்ணீருக்குள் வட்டமடிக்கும்
சிறுவர்களைப் பார்த்துக் கொட்டாவி விட்டுக்
கொண்டு நிற்க வேண்டியதுதான்.

நீச்சலடிக்கும்முன் அனைவருக்குமே இந்த 

அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

இன்னும் ஒரு சிலருக்கு வேறு விதமான
அனுபவம் கிடைத்திருக்கும்.
குளத்தங் கரையில் நின்று
குளிக்காமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்போம்.
நம்மைவிட சின்ன பிள்ளைகள் எல்லாம்
நீச்சல் அடித்துக் கொண்டிருப்பார்கள்.
நமக்கு தண்ணீருக்குள் இறங்கவே
அச்சம்.
திடீரென்று யாரோ வந்து தண்ணீருக்குள்
தள்ளி விட்டுவிட்டார்கள்.
இப்போது நீச்சல் அடித்தே ஆக வேண்டும்
என்ற நிர்ப்பந்தம்.

துணிந்து கையைக் காலை அடித்து

மூச்சுத்திணற நீச்சலடித்துக் கரையேறிவிடுவோம்.
இதுவரை இல்லாத இந்தத் துணிச்சல் 

எங்கிருந்து வந்தது ?

வேறு வழியே இல்லாதபோது ஒரு
துணிச்சல் வரும் பாருங்க...
அந்தத் துணிச்சல் ஆரம்பத்திலேயே இல்லாமல்
போனதற்கான காரணம் என்ன ?

நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாததால்தான்

துணிந்து தண்ணீருக்குள் இறங்க முடியாமல்

தயங்கித் தயங்கி நின்றிருப்போம்.

இப்படி யாரோ தள்ளிவிட்டு அதனால் வரும்

துணிச்சல் தற்காலிகமானதுதான்.
மறுபடியும் அந்தப் பக்கமே போகக் கூடாது
என்ற வைராக்கியத்தைத்தான்  அது கொடுக்கும்.
அந்தப் பக்கம் போனாலே கால் கை
எல்லாம் உதறல் எடுக்கும்.மனதிற்குள் ஒரு
பயம் இருந்து கொண்டே இருக்கும்.

செயலில்  உறுதியாக இருக்க மனதில்
துணிவு வேண்டும்.
சொன்னதைச் சொன்னபடிச் செய்யவும்
எண்ணியதை எண்ணியபடி அடையவும்
மன உறுதியே முதன்மையானது.


ஒரு செயலில் இறங்கினால்  இன்பம் 

வருமோ இல்லை  
துன்பம்தான்  வந்து விடுமோ என்ற
ஐயம் சிறிதும் இல்லாமல் துணிவோடு
செயலாற்றும்போதுதான் செயலில்
வெற்றி காண முடியும்.

  "சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
  தாழ்ச்சியுள் தங்குதல் தீது"

என்றார் திருவள்ளுவர்.
"ஒரு செயலைப் பற்றிய முடிவு எடுப்பதற்கு
துணிவு வேண்டும்.
அந்தத் துணிவும் காலம் தாழ்ந்து
வந்தால் அதுவும் நல்ல பலன் தராது"

என்கிறார் வள்ளுவர்.

பல இடங்களில் துணிவோடு ஒரு செயலில்
ஈடுபடாததால்தான் நாம்  பின்தங்கிப்
போயிருப்போம்.
எத்தனையோ இடங்களில் ஒதுங்கி
ஒதுங்கி நின்று நம் உண்மை முகத்தைத்
தொலைத்திருப்போம்.

எப்போதுமே ஒரு செயலில் இறங்கும்போது

ஆயிரம் கேள்விகள் நம் முன் வந்து
நிற்கும்.
சாதாரணமாக ஒரு கடையில் துணி 

எடுக்கச் சென்றால்கூட
இந்தத் துணியை எடுக்கலாமா?

அந்தத் துணியை  எடுக்கலாமா?
என்ற குழப்பம் ஏற்படும்.

ஒரு செயலைச் செய்ய வேண்டும்
என்றால் இப்போது செய்துவிடலாமா.... இல்லை
நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா...
அல்லது  செய்யாமல் அப்படியே
விட்டுவிடுதல்தான்
நல்லதாக இருக்குமா ..என்ற
குழப்பமான கேள்விகள்
வந்து குமைய வைக்கும்.

இப்படிப்பட்ட தேவையில்லாத
மன ஓட்டத்திற்குத் தடையிட்டு விட்டு
துணிந்து செயலில் இறங்க  வேண்டும்.

அந்தத் துணிச்சல் வரவில்லை என்றால்
காலம் மட்டும் எண்ணி எண்ணி....
எண்ணி எண்ணி  என்று
எண்ணிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அதற்குள்  காலம் ஓடிவிடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு "

என்பார் வள்ளுவர்.

ஏன் வள்ளுவர் துணிக கருமம் என்று

எழுதியிருக்கிறார்?

எண்ணிச் செய்க கருமம் என்றுகூட

எழுதியிருக்கலாமே!

துணிந்து செயலில் இறங்குக என்பதுதான்

வள்ளுவரின் கருத்து.

துணிந்து செயலில் இறங்கிவிட்டால்
தேவையில்லாத எந்தவித சிந்தனைகளும்

வந்து நம்மை திசை திருப்பி விடாது.
அதைத்தான் துணிந்தவனுக்குத்
துக்கமில்லை என்று சொல்வார்கள்.

 துணிந்தவனுக்குத் துக்கமில்லை

பணிந்தவனுக்குக் கேடு இல்லை.


Comments

  1. வள்ளுவரின் கருத்தை பதிவிட்டு துணிவுடன் செயல்பட தூண்டியமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. The main idea of doing things courageously is well explained in this article. Unless and until you have no self confidence and courage you cannot do or learn anything new in your life. Superb.

    ReplyDelete

Post a Comment