ஆசிரியப்பா வகைகள்



                  ஆசிரியப்பா வகைகள்

நான்கு வகைப் பாக்கள் உண்டு.

1. வெண்பா

2. ஆசிரியப்பா

3. வஞ்சிப்பா

4. கலிப்பா

நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பா பற்றி
இக்கட்டுரையில் காண்போம்.

                         ஆசிரியப்பா

இலக்கணக் கட்டுக்கோப்பு
குறைவாக உள்ள ஒரு பா வகை என்றால்
அது ஆசிரியப்பாகும்.ஆசிரியப்பாவில்
கவிபாடுவது மிக எளிது.


ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்:

அடிதோறும் நாற்சீர்களைப் பெற்றிருக்கும்.
இடையிடையே குறளடி, சிந்தடிகள்
வருதல் உண்டு.
ஆனால் முதலடியும் ஈற்றடியும்
அளவடிகளாக இருத்தல் வேண்டும்.
அதாவது நான்கு சீர்கள் கொண்டவையாக
இருக்கும்.


 ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவல் ஓசை.
                  
  அகவல் என்பது அழைத்தல் 
என்னும் பொருள் உடையது.
ஒவ்வோர் அடியும் தனித்தனியே 
அழைக்கும் வகையில்
அமைந்திருப்பதுதான் அகவல் 
என்பதற்கான காரணம்.

ஆசிரியற்பாவினை அகவற்பா
என்றும் அழைப்பர்.

முதலாவது ஆசிரியப்பாவில் சீர் எப்படி
அமைந்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.

சீர்  :

1.முதலடியும் ஈற்றடியும் 
நான்கு சீர்களைக் கொண்ட
அளவடியாக இருக்க வேண்டும்.

2. இடையில் வரும் அடிகள்
மூன்று சீர்கள் கொண்ட
சிந்தடியாகவோ
அல்லது இரண்டு சீர்களைக்
கொண்ட குறளடியாகவோ 
இருக்கலாம்.

3. ஆசிரிய உரிச்சீர் எனப்படும் 
ஈரசைச் சீர்கள்
மிகுந்து வரும்.

4. பிற சீர்களும் சில இடங்களில்
    வருதல் உண்டு

5. நிரை நடுவாக வரும் வஞ்சியுரிச்சீராகிய
    கருவிளங்கனி, கூவிளங்கனி 
     வரவே வராது.

நேர் நேர்  _ தேமா
நிரை நேர் _ புளிமா
நிரை நிரை _ கருவிளம்
நேர் நிரை _ கூவிளம்

இவை ஆசிரிய உரிச்சீருக்கு உரிய சீர்களாகும்

 நேர் நேர் நேர்   -   தேமாங்காய்
  நிரை  நேர் நேர் - புளிமாங்காய்
  நிரை நிரை நேர் -கருவிளங்காய்
  நேர் நிரை நேர்  -   கூவிளங்காய்

என்ற வாய்பாட்டால் அமையும் நான்கு
சீர்களும் வெண்பா உரிச்சீருக்கு
உரியது.

ஆசிரிய உரிச்சீரோடு வெண்பா உரிச்சீரும்
ஆசிரியப்பாவில் வரலாம்.

 நேர் நேர் நிரை -  தேமாங்கனி
  நிரை நேர் நிரை- புளிமாங்கனி
  நிரை நிரை நிரை -கருவிளங்கனி
  நேர் நிரை நிரை - கூவிளங்கனி

என்ற வாய்பாட்டால் அமையப்பெறும்
நான்கு சீர்களுள் நிரை இடையில்
வந்துள்ள கருவிளங்கனி,கூவிளங்கனி
ஆகிய இரண்டு கனிச்சீர்களும்
ஆசிரியப்பாவில் வராது
என்பதை மனதில் பதிய வைத்துக்
கொள்ளுங்கள்.



                 ஆசிரியப்பாவின் வகைகள் 

ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.

1. நேரிசை ஆசிரியப்பா
2.  இணைக்குறள் ஆசிரியப்பா
3.  நிலைமண்டில ஆசிரியப்பா
4.  அடிமறிமண்டில ஆசிரியப்பா

1. நேரிசை ஆசிரியப்பா:

ஆசிரியப்பாவின் இலக்கணம் பெற்று
ஈற்றயலடி முச்சீராகவும் அதாவது கடைசி
அடிக்கு முந்தைய அடி முச்சீராகவும் 
ஏனைய அடிகள்
நாற்சீராகவும் அமைவது 
நேரிசை ஆசிரியப்பா எனப்படும்.

எடுத்துக்காட்டு:

நிலத்தினும் /பெரிதே  /வானினும்/ உயர்ந்தன்று
நீரினும்/ ஆரள  /வின்றே /சாரல்
கருங்கோல் /குறிஞ்சிப்/ பூக்கொண்டு
பெருந்தேன்/ இழைக்கும்/ நாடனொடு /நட்பே!
              
                               - குறுந்தொகை

ஈற்றயலடி  மூன்று சீர்களை மட்டுமே
கொண்டுள்ளது.
மற்ற அடிகள் நான்கு சீர்களைக்
கொண்டுள்ளன.

ஈற்றடி ஏகாரத்தில் முடியும்.

நட்பே -என்று ஏகாரத்தில் முடிந்திருப்பதைக்
காண்க.


2. இணைக்குறள் ஆசிரியப்பா :

ஆசிரியப்பாவின் இலக்கணங்களைப் பெற்று
முதல் அடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைக்
கொண்ட அளவடியாகவும் இடையிடையே குறளடி,
 சிந்தடிகள் விரவியும் வருவது இணைக்குறள்
 ஆசிரியப்பா எனப்படும்.

அளவடி என்றால் நான்கு சீர்கள்.
குறளடி என்றால் இரண்டு சீர்கள்.
சிந்தடி  என்றால் மூன்று சீர்கள்.

எடுத்துக்காட்டு:

"நீரின்/ தண்மையும் /தீயின் /வெம்மையும்
சாரச் /சார்ந்து
தீரத் /தீரும்
சாரல்/ நாடன்/ கேண்மை
சாரச் /சாரச்/ சார்ந்து
தீரத் /தீரத்/ தீர்பொல் /லாதே"

(  யாப்பருங்கலக் காரிகை உரை மேற்கோள்)

முதலடி நான்கு சீர்கள்.
அடுத்த இரண்டு அடிகள் குறளடி
அதாவது இரு சீர்கள்.
நான்காம் ஐந்தாம் அடிகள்
சிந்தடி  அதாவது மூன்று சீர்கள்.
ஈற்றடி அளவடி அதாவது 
நான்கு சீர்கள் என்று வந்துள்ளமையைக்
காண்க.


3.நிலைமண்டில ஆசிரியப்பா :

ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
அனைத்து  அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டு
அமைவது நிலைமண்டில ஆசிரியப்பா.


வட்டம் எவ்வாறு தொடங்கிய இடத்திலேயே
மறுபடியும் வந்து முடியுமோ அதுபோல
நாற்சீரடியாகத் தொடங்கி எந்தவித
மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து
நாற்சீரடியாகவே முடிவதால் இது
நிலைமண்டில ஆசிரியப்பா எனப் பெயர்
பெற்றுள்ளது.

மண்டிலம் என்றால் வட்டம்
என்று பொருள்படும்.

"இளையோர் /சூடார் /வளையோர் /கொய்யார்
நல்யாழ்/ மருப்பின் /மெல்ல /வாங்கிப்
பாணன்/ சூடான் /பாடினி /அணியாள்
ஆண்மை/ தோன்ற /ஆடவர்க் /கடந்த
வல்வேற் /சாத்தன் /மாய்ந்த /பின்றை
முல்லையும் /பூத்தியோ /ஒல்லையூர் /நாட்டே!"

                                   - புறநானூறு

எல்லா அடிகளும் நாற்சீர் கொண்ட
அளவடிகளாக வந்துள்ளமை காண்க.



4.அடிமறிண்டில ஆசிரியப்பா :

ஆசிரியப்பாவின் இலக்கணங்களைப் பெற்று
அனைத்து அடிகளும் நான்கு சீர்கள்
கொண்டு அமைவதோடு பாடலில் எந்த அடியை 
எவ்விடத்தில் மாற்றினாலும் ஓசையும் 
பொருளும் மாறாமல் வருவது
அடிமறி மண்டில ஆசிரியப்பா.

எடுத்துக்காட்டு:

"சூரல் /பம்பிய /சிறுகான்/ யாறே
சூரர/ மகளிர் /ஆரணங்/ கினரே
வாரல்/ எனினே /யானஞ் /சுவலே
சாரல்/ நாட நீவர /லாறே "

  -  (  யாப்பருங்கல மேற்கோள் பாடல்)

ஒவ்வொரு அணியின் ஈற்றுப் சீரும்
ஏகாகரத்தில் முடிவது அடிமறி மண்டில
ஆசிரியப்பாவின் சிறப்பு.

அடி வரையறை இல்லை.
ஆனால் எந்த அடியை 
எப்படி மாற்றிப் போட்டு
பொருள் கொண்டாலும் 
பொருள் மாறுபடாது வருவது
அடிமறி மண்டில ஆசிரியப்பாவின்
மற்றொரு சிறப்பு.



ஆசிரியப்பாவின் ஈற்றசை  பெரும்பாலும்
ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய் , அய்  என்னும்
அசைகளுள் ஒன்றாக இருக்கும்.



ஆசிரியப்பாவிற்கு உரிய தளைகள்: 

நேரொன்றாசிரியத்தளை
நிரையொன்றாசிரியத்தளை ஆகிய
தளைகளே மிகுதியாக வரும்.
மற்ற தளைகள் ஒரு சில இடங்களில்
வரலாம்.

இருவகை வஞ்சித் தளைகளும்
அதாவது ஒன்றிய வஞ்சித் தளை 
மற்றும் ஒன்றா வஞ்சித்தளை இரண்டும்
வரவே வராது.

நேரொன்றாசிரியத் தளை:

1.தேமா, புளிமா இரண்டும்
மாச்சீர் எனப்படும்.

நின்ற சீர் மாச்சீராக 
இருந்து வரும் நீரின் முதலசை
நேர் என இருந்தால் அங்கு பிறப்பது
நேரொன்ராசிரியத்தளை.

அதாவது மாமுன் நேர்வரின்
நேரொன்றாசிரியத்தளை.

நிரையொன்றாசிரியத் தளை

2. கருவிளம் கூவிளம்
என்னும் ஈரசைச்சீர்கள் இரண்டையும்
விளச்சீர்கள் என்று சொல்லுவோம்.

நின்ற சீர் விளச்சீராக இருந்து
வரும் சீரின் முதலசை நிரை என
இருந்தால்  அங்கு பிறப்பது
நிரையொன்ராசிரியத் தளை.

அதாவது விளம் முன் நிரை
வந்தால் நிரையொன்ராசிரியத்தளை.


:நினைவூட்டலுக்காக:

அசை பிரிக்கும் முறைகள்:

1.நேரசை

நேரசை  நான்கு வழிகளில் பிரிக்கப்படும்.

1. குறில் தனித்து வரும்    -  ப
2. குறில் ஒற்றுடன் வரும்  - பல்
3. நெடில் தனித்து வரும்    - பா
4.  நெடில் ஒன்றுடன் வரும் - பால்

2. நிரையசை 

 நிரையசை நான்கு வழிகளில் பிரிக்கப்படும்.

1. இருகுறில் எழுத்துகள் சேர்ந்து வரும் - பட
2. இருகுறில் எழுத்துகளோடு ஒற்றும்
    சேர்ந்து வரும்  -  படம்
3.  குறில் நெடில் இணைந்து வரும்- பலா
4.  குறில் நெடில் ஒற்றுடன் 
      இணைந்து வரும்  -    வடாம்

நினைவில் கொள்க:

நெடில் குறில் என்று பிரிக்கக் கூடாது.
அப்படி நெடில் குறில் என்று வருமானால்
நெடிலையும் குறிலையும்
தனித்தனியாக பிரித்து
நேரசையாகக் கொள்ளலாம்.

குறில் நெடில் இணைந்து வந்தால்
நிரையசை.

நெடில் குறில் என்று பிரித்தால் எந்த
அசையிலும் வராது. 
அப்படி பிரிப்பது பிழையாகும்.



Comments

Popular Posts