தவறவிட்ட தருணங்கள்
தவறவிட்ட தருணங்கள்
மழை பெய்ததும் கலப்பையை எடுத்துச்
செல்லாத உழவன்....
படிக்கும் காலத்தில் புத்தகத்தை மூடி
வைத்துக் கொண்டு தூங்கும் மாணவன்...
வேலையின்போது சிரத்தை எடுத்துக்
கொள்ளாத ஊழியக்காரன்....
பணம் வரும்போது சேமிக்கத் தவறிய
மனிதர்கள்......
நல்ல வேலைவாய்ப்புகள் வந்த போது பயன்படுத்தத்
தவறிய இளைஞர்கள்....
இவர்கள் எல்லாம் கிடைத்த நல்ல தருணத்தைத்
தவற விட்டவர்கள்.
இவர்கள் மட்டுமல்ல...
அனைவர் வாழ்விலும் தவறவிட்ட தருணம்
கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும்.
என் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும்.
உங்கள் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும்.
அதை நினைத்து நினைத்து மருகி இருப்போம்.
எல்லாவற்றையும் இழந்தது போன்ற
விரக்தியில் இருந்திருப்போம்.
இனி எனக்கு நல்லதே நடக்காதா என
எண்ணி எண்ணி வெதும்பியிருப்போம்.
இளமையில் காதலைச் சொல்ல முடியாமல்
தவறவிட்டுவிட்டு
இன்றுவரை அந்த நினைவில்
தவித்துக் கொண்டிருப்பவர்கள்
நிறையபேர் உண்டு.
அதற்கான தருணம் வாய்த்திருக்கும்.
இருப்பினும் ஏதோ ஒரு பயம்....
ஒரு தயக்கம்....
உங்கள் காதலைச் சொல்ல விடாமல்
தடுத்திருக்கும்.
அதனால் உங்கள் காதல் நிறைவேறாமலேயே
நிராசையாய் நின்று போயிருக்கும்.
தேர்வுக்குச் சரியாகப் படிக்காமல்
தேர்வு முடிவுகள் வந்ததும் ஐயையோ...இன்னும்
கொஞ்சம் நன்றாகப் படித்திருக்கலாமோ
நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கலாமே...
என்று புலம்பி இருப்போம்....
நேர்முகத் தேர்வின்போது கேட்கப்பட்ட
கேள்விகளுக்குச் சரியான
பதில் சொல்லமுடியாமல்
வேலை வாய்ப்பைத் தவறவிட்டிருப்போம்.
வெளியில் வந்த பின்னர்தான் ஆஹா...
நல்ல தருணத்தை தவற விட்டுவிட்டோமே...பதில்
இப்போது நினைவுக்கு வருகிறது...
அந்த நேரத்தில் மறந்துவிட்டோமே என்று...
நமது மண்டையிலேயே குட்டிக்கொண்டு
நம் தவறை நாமே ஒத்துக் கொண்டிருப்போம்.
நல்ல மழை பெய்திருக்கும்.
விதைகள் தயாராக இருந்திருக்காது.
விதைகள் இருந்தாலும் உழவுக்குக்
கொடுக்க போதுமான பணம் கையிருப்பில்
இருந்திருக்காது.
இவை இரண்டும் கையில் இருந்தாலும்
சரியான பருவத்தில் நாற்று நட
ஆட்கள் கிடைக்காத நிலை. அதனால்
பருவம் தப்பி விவசாயம் செய்து
நல்ல பருவத்தை விட்டுவிட்டோமே
என வயலைப் பார்த்து பார்த்து கண்ணீர்
வடித்திருப்போம்.
நல்ல வருவாய் வந்திருக்கும்.
சேமிக்க வேண்டும் என்ற எண்ணம்
சிறிதுகூட இல்லாமல் தாறுமாறாக
செலவழித்திருப்போம்.
வருவாய் நின்று போனதும்
என்ன செய்வது? ஏது செய்வது
என்று தெரியாமல் கையைப் பிசைந்து
கொண்டு நின்றிருப்போம்.
இப்படி எல்லோருடைய வாழ்விலும் ஏதோ
ஒன்றைத் தவற விட்டுவிட்ட நிகழ்வு
நடந்திருக்கலாம்.
இப்படிப்பட்ட தருணங்கள் என் வாழ்வில்
நிகழவே இல்லை என்று யாரும்
நிஜத்தை மறைத்து முகமூடி போட்டுக்கொண்டு
அலைய முடியாது.
நீங்கள் மறைத்தாலும் உங்கள்
மனசாட்சி உங்களோடு பேசும்.
இப்போதே அதன் நினைவுகள் உங்களை
அந்தக் காலத்திற்கு இழுத்துச் செல்லும்.
சில நினைவுகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
தவற விட்டு விட்டோமே என்ற எண்ணம்
வரும்போது மட்டும் மனது வலிப்பது
இயல்புதான்.
எல்லோருக்கும் எல்லாம் தாம் விரும்பியபடி
கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆமாங்க...ஏதோ ஒன்றை நினைத்தேன்.
ஆனால் நடந்தது வேறு என்ற விரக்தி
கொஞ்சநாள் வரை இருக்கும். அதன் பின்னர்
எல்லாவற்றையும் துடைத்துப் போட்டுக் கொண்டு
நகர்ந்து விடுவோம்.
நகர்ந்து விடுவதுதான் புத்திசாலித்தனம்.
ஐயையோ போச்சே...போச்சே என்று
புலம்பிக் கொண்டிருந்தால் இருப்பதையும்
தவறவிட்டு விடுவோம்.
இது நமக்கு மட்டும் நிகழ்ந்துவிடவில்லை.
நம்மைப் போன்று எத்தனையோ லட்சம் பேர்
நல்ல தருணங்களைத் தவற விட்டவர்கள்தான்
என்ற உண்மையை மனதில் பதிய வைத்துக்
கொண்டாலே போதும்.
தவற விட்ட தருணம் ஒரு நினைவாக
இருந்துவிட்டுப் போகட்டும் தப்பே இல்லை.
அதை ஒரு சுமையாக சுமந்துகொண்டு
அலைவோமானால் வாழ்க்கை முழுவதும்
நிம்மதி இருக்காது.
நிலவில் காலடி வைத்த முதல் மனிதன்
யார் என்ற கேள்வி கேட்டதும்
நீல் ஆம்ஸ்ட்ராங் என்று பட்டென்று
சொல்லிவிடுவோம்.
அவர் முதன்முதலாக நிலவில் காலடி வைத்ததில்
ஒரு சுவாரசியமான கதை உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் இணை விமானியாகத்தான்
விண்வெளிக்குச் சென்றார்.
தலைமை விமானியாகச் சென்றவர்
எட்வின் கால்வின் என்பவர்.
விண்வெளிக்குச் செல்லும்போது
முதன்முதலாக தலைமை விமானிதான்
நிலவில் கால் வைக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி விண் ஓடத்திலிருந்து இறங்குவதற்காக
பூமியிலிருந்து பைலட் பஸ்ட் என்ற அறிவிப்பு
வந்தது. அதன்படி எட்வின் கால்வின்தான்
நிலவில் இறங்க வேண்டும்.
ஆனால் அவருக்குள் ஒரு தயக்கம்.
நிலவில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம்.
அப்படியே கீழே இழுத்துவிட்டால்....
புதை மணல் இருந்து
மணலுக்குள் புதைந்து போனால்....
வெப்பமாக இருந்து வெந்துபோனால்....
இப்படி பல்வேறு சிந்தனைகள்
வந்து அவரை உடனடியாக
செயல்பட விடாமல் முட்டுக்கட்டையிட்டு
நின்றிருக்கலாம்.
அதனால் எழுந்த அச்சத்தில்
சற்று தயங்கி நின்றுவிட்டார்.
அதற்குள் இணை விமானி இறங்கும்படி
தகவல் தரப்பட்டது.
இணை விமானியாகச் சென்ற ஆம்ஸ்ட்ராங்
எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.
அவருக்காக கொடுக்கப்பட்ட நேரத்தைச்
சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
யோசிக்காமல் நிலவில் தன்
காலடி எடுத்து வைத்து வரலாற்றைத்
தன்பக்கமாகத் திருப்பி எழுதிவிட்டார்.
நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் என்று
உலக வரலாற்றில் தனக்கான நிரந்தர
இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
எட்வின் கால்வின் தனக்கு கொடுக்கப்பட்ட
நல்ல தருணத்தை தவற விட்டுவிட்டார்.
கிடைத்த நல்ல தருணத்தைத் தவற
விட்டுவிட்டோமே என்று எத்தனையோ முறை
எண்ணி எண்ணி வருந்தியிருப்பார்.
கடந்து போன காலத்தை எண்ணி
அழுது என்ன பயன் ?
இது எட்வின் கால்வின் வாழ்க்கையில்
மட்டும் நிகழ்ந்திருக்கும் நிகழ்வல்ல.
எல்லாப் பருவத்தினரிடையேயும்
ஏதாவது ஒரு நேரத்தில்
இப்படி தவற விட்ட தருணங்கள் கண்டிப்பாக
நடைபெற்றிருக்கும்.
ஆண்டாண்டு அழுது புரண்டாலும்
மாண்டவர் திரும்ப வருவதில்லை. அதுபோல
தவற விட்ட தருணங்களும் மறுபடியும்
நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் மறுபடியும்
மறுபடியும் நமக்கு வாய்க்காது.
கிடைத்தபோதே அதனைச்
சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள்
புத்திசாலிகள்.
ஆனால் எல்லோராலும் இது சாத்தியப்படாது.
காரணம் அந்த நேரத்தில் இருக்கும் மனநிலை,
முதிர்ச்சியின்மை ,கையாளும் திறன் இல்லாமை
பொருளாதாரச் சிக்கல்கள், கைதூக்கிவிட
சரியான ஆள் இல்லாமை என்று பல காரணங்கள்
நம்மை சரியானப் பாதையைத்
தேர்ந்தெடுக்கவிடாமல் தடுத்திருக்கும்.
செயல்படவிடாமல் முடக்கிப் போட்டிருக்கும்.
இன்று நினைத்தாலும் நல்ல வாய்ப்பை
நழுவ விட்டிருக்கின்றோமே என்று தோன்றும்.
பெரும்பாலான வாய்ப்புகள் கைவிட்டுப் போவதற்குக்
காரணம் துணிச்சல் இல்லாமையாககூட
இருக்கலாம்.
முதிர்ச்சி இல்லாத காலத்தில் கையில்
பணம் இல்லாத நேரத்தில் எதைத் தேர்வு
செய்வது என்று பக்குவம் இல்லாமல்
தவறு நிகழ்வது இயல்பு.
அதில் கிடைத்த அனுபவ பாடத்தை
எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை
நோக்கி நகர்ந்துவிட வேண்டும்.
அதுதான் புத்திசாலித்தனம்.
நடந்ததையே நினைத்து அங்கேயே
நின்றுவிடுவோமானால் ...
ஒருகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டுவிடும்.
கடலில் தூக்கிப் போடப்பட்டவன் கட்டுமரம்
வரும் தன்னைக் காப்பாற்ற என்று நினைத்தால்
கடலில் மூழ்கி சாக வேண்டியதுதான்.
கையில் சிறு கட்டை அகப்பட்டாலும் அதனைப்
பிடித்து வெளியில் வர முயல்பவன்தான்
புத்திசாலி.
அந்தத் தருணத்தில் நமக்கு எது வாய்ப்பாக
அமைகிறதோ அதனைப் பயன்படுத்தத்
தெரிந்திருக்க வேண்டும்.
களத்தில் இறங்கி விளையாடும் அனைவருக்கும்
வெற்றிக் கோப்பை கிடைப்பதில்லை.
வெற்றிக் கோப்பையை மயிலிழையில்
தவறவிட்டவர் பலர் உண்டு.
இழந்த பின்னர் அப்படி செய்திருக்கலாமோ ....
இப்படி செய்திருக்கலாமோ ...என்று நம்மைப் போன்று
புலம்பியிருப்பர்.
மறுபடி கிடைக்கும் சந்தர்ப்பத்தைத் தனக்குச்
சாதகமாக்கி கோப்பையைத் தனதாக்கிக்
கொள்வதில்லையா?
கிடைத்த தருணங்களைத் தவறவிட்டுவிட்டோமே
என்று முதற்படியிலேயே நின்று
முனங்கிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை.
தவறவிட்ட தருணங்களை நினைத்து
தடுமாறுவதிலும் ஞாயம் இல்லை.
பேருந்தைத் தவற விட்டுவிட்டோம்.
அடுத்தப் பேருந்தைப் பிடித்துக் கொண்டு
நாம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குச்
செல்லவில்லையா!
அதுபோன்றுதான் தவற விட்ட தருணங்களையே
எண்ணிப் புலம்பி அங்கேயே
நின்றுவிடாமல்.....
கிடைத்த சந்தர்ப்பத்தை நமக்குக்
கிடைத்த மற்றுமொரு தருணமாக
எண்ணி மகிழ்ச்சியாக வாழ்க்கைப்
பயணத்தைத் தொடர வேண்டும்.
நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைய
கிடைத்த வாய்ப்பைச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்வதுதான்
புத்திசாலித்தனம்.
இன்னொரு தருணம் வராமலா போய்விடும்?
ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் சில தருணங்களை மறுபடியும் நினைக்கத்தூண்டிய பதிவு.மிகவும் இயல்பான கருத்துக்களை அழகாக பதிவிட்டது மிகச்சிறப்பு. பாராட்டுக்கள்.
ReplyDelete