கல்லாதான் கற்ற கவி

கல்லாதான் கற்ற கவி


ஒருநாள் காட்டுவழியாக வந்து 

கொண்டிருக்கிறார் ஔவை.


மழை மேகம் திரண்டு வர

மழை வந்துவிடுமோ என்று

ஒதுங்குவதற்காக அங்குமிங்கும்

பார்க்கிறார்.

அங்கே ஓர் அழகிய காட்சி.

மயில் ஒன்று

மழை மேகம் கண்டு தன்

தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

கண்கள் விரிய அந்த காட்சியைக்

கண்டு மகிழ்கிறார்.


திடீரென்று மறுபக்கத்திலிருந்து

ஒரு சலசலப்பு.

அங்கே இன்னொரு காட்சி

அவரது கவனத்தை ஈர்க்கிறது.


வான்கோழி ஒன்று  தனது உடலைச்

சிலுப்பிக் 

கொண்டிருக்கிறது.

உனக்கு மட்டும் தான்

தோகை இருக்கிறதா?

இதோ பார். எனக்கும்தான் 

தோகை இருக்கிறது

நானும் தோகையை விரித்து 

ஆடுகிறேன் பார்

என்று மயிலுக்குச் சவால் விடுவதுபோல்

தோகையை  விரிப்பதற்காக

உடம்பு முழுவதையும் அசைத்து அசைத்து

 ஆட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

முடியவில்லை. எத்தனை முயற்சி

செய்தும் வான்கோழியால் மயிலைப்

போன்று தோகையை

விரித்து ஆட முடியவில்லை.


மயிலைப் பார்த்துதான் இப்படி

ஆட்டிக்கொண்டு நிற்கிறாயா?

என்று நினைத்ததும்

ஔவைக்கு

உள்ளுக்குள் சிரிப்பு.

கூடவே மற்றொரு நினைவு



இந்த வான்கோழியின் செயல் 

 அவனை நினைவுபடுத்துகிறதே.

யாரவன்...யாரவன்...நினைவுபடுத்திப் பார்க்கிறார். 


ஆம்  ...அவனேதான் .

அன்றொருநாள் அரங்கில் கவி பாடினானே

அவனேதான்..


அன்றொருநாள்...

கல்வி கற்காத ஒருவன்

கவிபாட ஆசைப்பட்டு மேடையேறி வந்து நிற்கிறான்.

கையில்

அடுத்தவன் எழுதிக் கொடுத்த கவிதை.

கவிதையை தான் எழுதியதாக

சொல்லிக்கொண்டு வாசிக்க ஆரம்பிக்கிறான்...தடுமாற்றம்.

சொற்களைப் பிரித்து சேர்த்து வாசிக்கத் தெரியவில்லை.

பிழைபட உச்சரிப்பு. அதனால் பொருள் 

மாறுகிறது.

திக்குகிறான்.

திணறுகிறான்.

திண்டாடுகிறான்.

அனைவரும் நகைக்கின்றனர்.


அதே திணறலும் திண்டாட்டமும்

இந்த வான்கோழியிடமும் இருக்கிறது

என்று நினைக்கிறார்.

நினைத்ததை நினைத்த இடத்தில்

நினைத்தபடியே பாடுவது ஔவையின்

இயல்பாயிற்றே ...சும்மா இருப்பாரா?



ஔவையின் இந்த நினைப்பு 

பாடலாக வெளிவருகிறது.



பாடல் இதோ உங்களுக்காக...


கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் -

தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து

ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி"


               - மூதுரை



கல்வி அறிவில்லாத ஒருவன்

பிறர் எழுதிய கவிதையைத்

தான் எழுதியதாகப்  பாவித்து

வாசிப்பது எப்படி இருக்கிறது என்றால்

 மயில் ஆடுவதைப்பார்த்து

 வான்கோழியும் தோகை விரித்து

 ஆட நினைப்பது போன்று இருக்கிறது.


அருமையான கருத்து.

அழகிய காட்சி.

காட்சியைக் கண்முன் கொண்டுவந்து

நிறுத்திய நேர்த்தி.

அதன்மூலம் சொல்ல வந்த கருத்தை மனதில்

புதிய வைத்தப் பாங்கு!

அத்தனையும் மயில் ஆடுவதை விடவும்

அழகோ அழகு.

ஔவையின் பாடல் என்றால் சும்மாவா?

Comments