ஆற்று பெருக்கற்று அடி சுடும்
ஆற்று பெருக்கற்று அடிசுடும்
"வாழ்வைக் கெடுப்பது வறுமை.
வாழ்வைக் கொடுப்பது வள்ளன்மை"
என்று சொல்வார்கள்.
கொடுக்கிற கை சுருங்காது.
கொடுத்துக்கொண்டே தான் இருக்கும்.
என்னிடம் பணம் இல்லையே எப்படிக் கொடுக்கமுடியும் அப்படி ஓர் எண்ணம் எழவே எழாது. கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது என்ற தேடல் வரும்.
முடிவில் ஒன்றுமே இல்லையா என் தலையைக் கொண்டுபோய்
தம்பியிடம் கொடுத்து பொருள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று குமண வள்ளல் சொன்னதை போன்று
தன்னையே கொடுக்க முடிவெடுக்க
வைக்கும்.
இல்லை என்ற சொல் மேன்மக்கள்
வாயிலிருந்து வரவே வராது.
ஓர் ஆற்றில் மழைக்காலத்தில் நிறைய தண்ணீர் ஓடுகிறது.
மழை இல்லாத காலங்களில்...?
நீருக்கு எங்கே போவது?
வறட்சியான காலகட்டத்தில் ஆறு வற்றிப் போகும்.
ஆற்று மணலில் கால் வைக்க முடியாதபடி
சுடும்.
இனி இங்கு தண்ணீர் கிடைக்க
வாய்ப்பே இல்லை என்று நினைத்திருப்போம்.
கண்முன்னே கானல் நீர் பறந்து பறந்து
பம்மாத்துக் காட்டும்.
ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை.
ஆற்று மணலைத் தோண்டுகிறோம்.
என்னவொரு ஆச்சரியம்.!
நீரூற்று தென்பட மனதிற்குள் மகிழ்ச்சி.
நம் தாகம் தீர்க்கப்படும்.
இது எதனால் நிகழ்ந்தது?
எனக்கு உயிர்களை வாழ வைத்துதான்
பழக்கம். என் கண்முன்னே யாரும்
தாகத்தால் வாடி நிற்பதைக் பார்த்துக்
கொண்டு சும்மா இருக்க முடியாது.
எனக்குள் இன்னும் ஈரம் இருக்கிறது.
இதோ நீரருந்தி தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற நற்பண்பு
ஆற்றுக்கு இருக்கிறது.
இந்தப் பண்புதான் மேன்மக்களிடமும்
இருக்கும்.
தங்களுக்கு வறுமை வந்துவிட்டது என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேன்மக்கள் மனதில் எழவே எழாது என்கிறார் ஔவை.
பாடல் இதோ உங்களுக்காக....
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந்நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து
நல்வழி பாடல் :9
ஆற்றில் நீர் வற்றிப் போனாலும்
உலகுக்கு ஊட்ட
ஊற்று நீருண்டு .அதுபோல
பொருள் இல்லாது போனாலும்
கொடுக்க வேண்டும் என்ற மனம்
மேன்மக்களிடம் உண்டு.
நல்கூர்ந்தார் - இல்லாதவர்,வறியவர்
இசைந்து- விரும்பி
Comments
Post a Comment