உள்ளார் கொல்லோ தோழி

உள்ளார் கொல்லோ தோழி....



காதல் நேற்று இருந்தது.

இன்றும் இருக்கிறது.

நாளையும் இருக்கும்.


காதலின்றேல் உயிர்கள் வாழ்தல்

எவ்வாறு?

உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல வாழ்க்கைக்குக் காதல் முக்கியமானது.

காதலில்லாத வாழ்க்கை உயிரற்றது;

உணர்வற்றது;

மகிழ்வற்றது;

அர்த்தமற்றது.

அதனால்தான் இலக்கியங்களில் காதல் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது.


காதல் இயற்கை உணர்வு.

அதைத் தடையிட முடியாது.

கட்டுப்படுத்தலாம்.


ஒரு கன்னிக்குக் காளை மீது காதல் வர

ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

அவனுக்குள் / அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பண்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலே போதும். அது காதலாக மாறிவிடுகிறது.


அப்படி ஒரு காதல் ஒரு தலைவனுக்கும்

தலைவிக்கும் ஏற்பட்டிருக்கிறது.


காதல் காதல் காதல் 

காதலின்றேல் சாதல்

இப்படிச் சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் எதுவரை இப்படியே 

காதலிக்கும் கொண்டிருப்பது.?


திருமணம் செய்ய வேண்டும். குடும்பம் நடத்த வேண்டும். அதற்குப் பொருள் தேட வேண்டும்.

காதலே நான் பொருள் தேடும் வரை ஒளிந்திரு என்று ஒளித்து வைக்க முடியாமல் காதலித்தாயிற்று.

இப்போது பொருள் தேட தலைவன் சென்று விட்டான்.

நாட்கள் கடந்தன.

வருவாரோ மாட்டாரோ 

என்னை நினையாரோ

 என்று புலம்புகிறாள் 

தலைவி.


இப்போது தலைவியை ஆறுதல் படுத்தும் 

இடத்தில் தோழி இருக்கிறாள்.

ஏன் இப்படிப் புலம்புகிறார்? அவர் எப்படி உன்னை மறப்பார்?

மறக்கத்தான் முடியுமா 

அவரைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள்

அவரை மறக்கத்தான் விடுமா?

என்கிறாள்.

தோழியின் கூற்றாக வரும் பாடல்

இதோ உங்களுக்காக....


உள்ளார் கொல்லோ- தோழி! கள்வர்

பொன்புனை பகழி செப்பங் கொண்மார் ,

உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்

செங்காற் பல்லி தன்றுணை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.

                      

       - பாடியவர் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ.

                                   


இவர்  மூவேந்தருள் ஒருவராகச் சிறந்து விளங்கியவர்.

சிறந்த தமிழ்ப் புலமை மிக்கவர் 

என்பதை இவர் பாடல்கள் மூலம் அறியலாம். 





உள்ளார் கொல்லோ-நம்மை  நினையாதிருப்பாரோ


பொன்புனை பகழி-

இரும்பால்செய்யப்பட்ட அம்பு


 செப்பம்-சரி செய்யும்போது 


உகிர் நுதி -விரல் நகம் 


புரட்டும்-நெருடிப் பார்க்கும்


ஓசை போல-ஒலியைப் போல


செங்காற் பல்லி- சிவந்த கால்களையுடைய பல்லி


தன்றுணை - தனது துணையை


 பயிரும்-அழைக்கும்


 கள்ளியங்காடு-கள்ளி செடி நிறைந்த காடு




நம்மை நம் தலைவர்  நினைக்காமல் இருப்பாரோ தோழி!

பாலை நிலத்தில் ஆறலை 

கள்வர்கள். வழிப்பறி செய்ய வருவார்கள் .

அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்க இரும்பால் செய்யப்பட்ட அம்புகளைச் செய்து வைத்திருப்பார்கள்.

அவற்றை அவ்வப்போது சோதனை  அதாவது துருப்பிடிக்காமலிருக்க

சரி செய்வார்கள்.

அப்போது அவர்கள் தங்கள்   விரல்களால் நெருடிப் பார்ப்பார்கள்.


அப்போது எழும் ஓசையானது செங்கால்களை உடைய பல்லியானது தன் துணையை அழைக்க எழுப்பும் ஓசை போன்று இருக்கும்.   கள்ளிக்காட்டைக் கடந்து வரும்போது

அந்த ஒலியானது நம் தலைவன் 

காதுகளில் விழும்.

உடனே தலைவனும் உன் நினைவு வரும்.

விரைவாக வந்துவிடுவான் என்று சொல்லி ஆறுதல் படுத்துகிறாள் தோழி.


செங்காற் பல்லி தன்றுணைப்

பயிரும் கள்ளியங்காடு 

அருமையான உள்ளுறை அமைத்து

 பல்லிப்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து

தலைவியை ஆறுதல்படுத்திய பாங்கு சிறப்பு.

பாலை நிலமும் அதன் கருப்பொருளும்

கண்முன் கவின்மிகு காட்சியாக

வந்து நிற்க வைத்தப் புலமையால்தான்

பாலைப்பாடிய பெருங்கடுங்கோ 

என்று அழைக்கப்பட்டிருப்பாரோ?


உள்ளார் கொல்லோ தோழி....




























Comments