கைமை உய்யாக் காமர் மந்தி
கைமை உய்யாக் காமர் மந்தி
அந்தக் காலத்தில் கைம்பெண்கள் உலகில் வாழ்தல் என்பது கடினமானது . அதைவிட உடன்கட்டை ஏறுதலே மேல் என்று நினைத்தப் பெண்களும் உண்டு.
கைம்பெண்களுக்கு மூன்றுவிதமான தடைகள் விதிக்கப்பட்டன.
உடை
உணவு
உறக்கம்
மூன்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டன என்று சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
அதனால் கைமை நிலை வந்துவிடக்கூடாது
என்று பெண்கள் நினைத்தனர்.
அதனால்தான் கணவன் இருக்கும்போதே
போய் சேர்ந்துவிட வேண்டும் என்று
பெண்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்வராம்.
மனிதர்கள் வாழ்வில் மட்டும்தான்
கைம்பெண் நிலையா?
இந்த நிலை வேறு எங்கே இருக்கப் போகிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.
இதோ ஒரு மந்தி தன் வாழ்விலும்
கைமை நிலை வந்துவிடக்கூடாது
என்று நினைக்கிறதாம்.
மந்திகள் வாழ்விலும் கைம்பெண்
நிலையா?
எல்லா விலங்குகளுக்கும் ஒரே நிலையான
வாழ்க்கைநிலை இருப்பதில்லை.
மாறுபட்ட வாழ்க்கை நிலையை அமைத்துக்
கொள்கின்றன.
அவற்றுள்ளும் மந்திகள் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது.
அதனை குறுந்தொகைப் பாடல் ஒன்று
சொல்லிச் செல்கிறது.
பாடல் இதோ உங்களுக்காக....
கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றெனக்
கைமை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்புறழ் கிளை முதற் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப்
பாய்ந்து உயிர் செடுக்கும்
சாரல் நாட நடு நாள்
சாரல் வாழியே வருந்தும் யாமே !
குறுந்தொகை
பாடியவர்:கடுந்தோட் கரவீரனார்.
தாவித் திரியும் கருங் கண்களைக் கொண்ட
ஆண் குரங்கு ஏதோ ஒரு சூழலில் இறந்து
விடுகிறது. மந்தியால் கடுவனின்
இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அரற்றுகிறது.அழுது புலம்புகிறது.
கடுவன் இல்லாமல் என்னால் எப்படி
வாழ்ந்திட முடியும் என்ற
கேள்வி எழுந்ததும் அருகில் இருக்கும்
குட்டியைப் பார்க்கிறது.
அருகில் இன்னும் கிளைக்குக் கிளை
தாவ அறிந்து கொள்ளாத குட்டி.
தன் தலைவன் போய்விட்டான்.
இனி நான் இருந்து என்ன பயன்?
ஆனால் இந்தக் குட்டியை இப்படியே விட்டுவிட்டுப் சென்றால்?
குட்டியின் நிலைமை என்னாவது? அதற்கு ஒரு பாதுகாப்பு
வேண்டுமே!
என்ன செய்வது?
எனவே ஒரு பாதுகாப்பான இடத்தில்
ஒப்படைத்து விட்டு குன்றிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறது.
கடுவனை இழந்தால் மந்தி
உயிரோடு வாழாது.
அப்படிப்பட்ட நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இவை எல்லாம் தலைவனுக்கும் தெரியும்.
எனினும் தலைவன் இன்னும் வரவில்லை.
தலைவனுக்கு அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால் என்னாலும் உயிர் வாழ முடியாது.
ஆதலால் விரைந்து வந்து திருமணம் முடித்துக் கொள்ளச் சொல் "என்று தோழியிடம் தலைவி கூறுவதாகப் பாடல்
அமைந்துள்ளது.
"கைமை உய்யாக் காமர் மந்தி "என்கிறார்
புலவர்
அது என்ன கைமை உய்யாக் காமர் மந்தி
என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால்
கைம்பெண் ஆகிப் போகும் நிலைமையைத் தாங்கிக்கொள்ள முடியாத மந்தி எனப்
பொருள்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இது மனிதர்களுக்கு மட்டும் கைம்பெண் நிலைமை இல்லை.
விலங்கினங்களுக்கும் கைம்பெண் நிலைமை உண்டு .
அவையும் தங்கள் இணையின் இழப்பைத் தாங்கிக் கொள்ளாது உயிரை மாய்த்துக் கொள்ளும் என்று புலவர் அன்றே கூறியிருக்கிறார்.
நல்ல பாடல்.
மந்தியின் வாழ்க்கை முறையை
உற்று நோக்கி உள்ளதை உணர்வுப்பூர்வமாக நம் கண் முன்னர்
கொண்டு வந்து நிறுத்திய பாடல்.
Comments
Post a Comment