படைப்புப் பல படைத்து....
படைப்புப் பல படைத்து....
சங்கப் பாடல்களில் காதலும் வீரமும்
நிரம்ப இருக்கும்.
புலவர்கள் மட்டுமல்லாது மன்னர்களும்
புலவர்களுக்கு நிகராக பல பாடல்கள் பாடியுள்ளனர்.
வாழ்க்கையை அனுபவித்துப் பாடிய பல
பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணமுடியும்.
அறத்தோடு வாழ வேண்டும் என்று
அறவுரைகளைத் தம் கவிதையில் தந்தனர்.
வீரத்தைப் புகழ்ந்து பாடினர்.
எங்கெல்லாம் அன்பும் அறமும் இருக்கிறதோ அங்கெல்லாம்
பாடல்கள் பாடி பரிசில் பெற பாணர்கள் கூட்டம் நிற்கும்.
புலவர்கள் வாழ்வாதாரமாக
பணம் தேவை. தங்கள் தேவைகளை நிறைவு செய்ய மன்னர்களைத் தேடி சென்று
பாடல்கள் பாடினர்.
அரசர்களுக்கு அந்தத் தேவை இல்லை.
இருப்பினும் அரசர்களிடமும் சிறந்த
புலமை இருந்திருக்கிறது.
பொருளுக்காக பாட
வேண்டிய தேவை இல்லாதபோதும்
தமிழ் மீது கொண்ட காதல்
பாடல்கள் பாடியிருக்கிறனர்.
காணும் காட்சிகளை கவினுற பாடி
மகிழ்ந்திருக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக
சிறுபிள்ளையின் குறும்பை அப்படியே நம்
கண்முன் படைக்கிறார் ஒரு புலவர்.
இல்லை...இல்லை. புலமை மிக்க ஒரு மன்னன். சிறு பிள்ளையை நம் கண்முன்
விளையாடவிட்டு அழகு காட்டியிருக்கிறார்.
சிறு பிள்ளையின் சிறுசிறு
அசைவுகளில் உள்ளம் தொலைத்து நின்ற
நினைவுகளைப் படமாக்கி
கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
பாண்டியன் அறிவுடை நம்பி என்று
ஒரு மன்னன் உண்டு.
அவர் பெயருக்கு ஏற்றபடியே நல்ல அறிவுடையவர்.
அவருக்கு நெடுநாளாக மக்கட்செல்வம்
இல்லாதிருந்தது.
அதனால் அவர் மிகவும் மனம் வருந்தினார்.
அதன்பிறகு ஒரு பிள்ளையைப் பெறும் நல்வாய்ப்பு வாய்க்கப் பெற்றார்.
மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
அந்தப் பிள்ளையின் ஒவ்வொரு அசைவிலும்
இன்பம் கண்டார்.
தன் பிள்ளையின் குறும்புகளில் தன்
மனதைப் பறிகொடுத்தார்.
இதுவல்லவோ உண்மையான இன்பம்
என்று நினைத்து நினைத்து உவகை
கொண்டார்.
எவ்வளவு செல்வம் இருந்தாலும் இந்தப் பிள்ளைச்
செல்வத்திற்கு ஈடாகாது என எண்ணினார்.
பிள்ளையின் பேச்சும் செயலும் கண்ணுக்கும்
செவிக்கும் இன்பம் பயப்பவை என்பதைக்
கண்டு மகிழ்ந்தார்.
தான் பெற்ற இன்பத்தை அப்படியே
வார்த்தையில் வடித்து நமக்கு விருந்து
படைத்து விட்டார்.
குழந்தையின் குறும்புகளை அப்படியே
நம் கண்முன் காட்சிபடுத்திய பாடல் இதோ:
படைப்புப்பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குற இல்லைத் தாம் வாழும் நாளே!
புறநானூறு _ 188
பாடியவர். : பாண்டியன் அறிவுடை நம்பி
" ஏராளமான செல்வம் இருக்கிறது.
பலரோடு சேர்ந்து உண்ணுகின்ற
வாய்ப்பு வசதி உள்ளது.
அப்படி நாம் பலரோடு உணவருந்திக்
கொண்டு இருக்கிறோம்.
இடையினில் குழந்தை குறுகுறுவென நடந்து
வந்து தன் சிறு கையை நீட்டுகிறது .
நீட்டிய கையில் கொடுக்கப்பட்ட
நெய்யுடை சோற்றை வாங்கி அப்படியே வாயில் போட முயற்சிக்கிறது.
சோறு பாதி உடம்பிலும் மீதி
தரையிலுமாய் சிந்தி சிதறிக் கிடக்கிறது.
குழந்தை தரையில் விழுந்த சோற்றை மறுபடியும் எடுத்து உணர்கிறது. கீழே கிடக்கும் சோற்றை
வாயால் கவ்வியும் கையால் அளைந்தும்
விளையாடுகிறது.
அந்தக் காட்சியைப் பார்த்த பெற்றோர்
அப்படியே மயங்கிப் போய் நிற்கின்றனர்.
இப்படி நம்மை தம் செயலால் கட்டிப்போடும்
குழந்தை இல்லாதவர்க்கு
வாழ்தலுக்கான எந்த பயனும் இல்லை.
தாம் வாழும் நாட்கள் பயனற்றதாகவே இருக்கும்"
என்கிறார் அறிவுடை நம்பி.
குழந்தை உணவு உண்ணும் காட்சியை
நம் கண்முன் படைத்து அந்த அழகில்
தான் மெய் மறந்த அனுபவத்தை
நம்மையும் நுகர வைத்து ஒரு அருமையான
காட்சியை நம்முன் கொண்டு வந்து நிறுத்தி,நம்மையும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ வைத்த
மன்னனின் புலமையை என்னவென்பது?
இந்த மன்னன் குழந்தையின் சின்னச்சின்ன
விளையாட்டில் தன்னைப் பறிகொடுத்தது போல வள்ளுவரும் அவர்கள் பேச்சில் தன்னைப் பறி கொடுத்திருக்கிறார்.
அதனால்தான் எந்த இசை காதுக்கு இனிமை தருவது என்று கேட்டால் ஒருவர்
புல்லாங்குழல் இசைதான் இனியது என்பார்.
இன்னொருவரிடம் கேட்டால் இல்லை....இல்லை யாழிலிருந்து வரும்
இசைதான் இனியது என்பார்.
இவர்கள் எல்லாம் தன் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புறாதவர்கள் என்றுதான் சொல்வேன்.
இவை எல்லா இசையை விடவும் இனிமையான இசை எது தெரியுமா?
சிறு குழந்தைகள் பேசும் மழலைச் சொல் மட்டுமே என்கிறார்.
அதனால்தான்,
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர் "
என்று மகிழ்ந்து எழுதியிருக்கிறார்.
மேலும் அமிழ்து தான் மிகவும் இனிதாவது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியொரு
நினைப்பிருந்தால் அதனையும் இன்றே கைவிட்டு விடுங்கள்.
குழந்தைகள் கைவிட்டுச் கலக்கி,சிந்திச் சிதறிப் போடும் உணவு கூழாக இருந்தாலும் அது அமிழ்தினைவிடவும் இனிமையானது என்கிறார் வள்ளுவர்.
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் "
இந்த இரண்டு குறளும் வள்ளுவரும்
குழந்தைகளிடம் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்
என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்....
குழந்தையை நம் கண்முன்னால்
கொண்டு வந்து நிறுத்தி மகிழ வைத்த
அருமையான வரிகள் .
Comments
Post a Comment