ஈஸ்டர் முட்டை
ஈஸ்டர் முட்டை
கிறிஸ்துமஸ் என்றால் கேக் .
பொங்கல் என்றால் கரும்பு.
தீபாவளி என்றால் விளக்கு.
ஹோலி என்றால் வண்ணம்.
இப்படி சில அடையாளங்களைக்
கொடுத்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம்.
ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது
எது என்றால் கிறிஸ்து கல்லறையில் இருந்து
உயிர்த்தெழுதல் என்று சட்டென்று
சொல்லி விடுவோம்.
கிறிஸ்துமஸ் கேக் போலவே
ஈஸ்டருக்கும் ஏதாவது
ஒரு பொருள் சிறப்பானதாக
இல்லாமலா இருந்திருக்கும்?
அந்தத் தேடலில் கையில் வந்து
அகப்பட்டது ஒரு முட்டை.
ஆஹா....அழகியதொரு முட்டை
அந்த முட்டையைக் கையில் எடுத்தபடி
ஈஸ்டர் நாட்களை நோக்கிப் பயணித்தேன்.
இந்த வருடம் ஈஸ்டர் கொண்டாட்டம்
முட்டையோடு தொடங்கட்டும்
என்று மனக்கணக்குப் போட்டு வைத்தேன்.
இந்த வருடம் என்ன எல்லா வருடமும்
ஈஸ்டர் என்றால் முட்டைதான் நினைவுக்கு வரும். வர வேண்டும் .
கிறிஸ்துமஸ் நாட்களில் எப்படி
கேக் முக்கியத்துவம் பெறுகிறதோ
அதுபோல ஈடஸ்டர் நாளில் முட்டை
சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
அதற்கான வரலாற்றுத் தேடலில் அகப்பட்டது
முட்டை.
முட்டையைக் கையில் கொடுத்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று வாழ்த்துச் சொல்ல காரணம் என்ன?
முட்டைக்கும் கிறிஸ்து உயிர்தெழுதலுக்கும்
நெருங்கிய தொடர்பு
இருந்ததாக ஹீப்ரு மொழி கதைகள் கூறுகின்றன.
மறுபிறப்பின் அடையாளமாக முட்டை
இருந்து வந்திருக்கிறது.
ஆனால் இந்த ஈஸ்டர் முட்டையைப் பற்றி
நாட்டுக்கு நாடு மாறுபட்ட கதைகள்
உலா வந்து கொண்டிருக்கிறது.
பாஸ்ட்ஓவர் செடர் என்ற பண்டிகை
யூதர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாக
இருந்து வந்திருக்கிறது.
வேக வைக்கப்பட்ட முட்டைகள் உப்புநீரில்
முக்கப்பட்டு பண்டிகைக்கால
சிறப்பு காணிக்கையாக தேவாலயங்களில்
வைப்பது இந்தப் பண்டிகையின்
சிறப்புகளில் ஒன்று.
அதுபோல பஸ்கா பண்டிகை
வாழ்த்து கூறும்போதும்
முட்டைகளைத் தந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
என்று வாழ்த்தும் வழக்கமும் ஒரு சில நாடுகளில்
நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.
இந்த ஈஸ்டர் முட்டையில் சிவப்பு முட்டை
பற்றிய கதைகள்
கேட்பதற்கு ஆவலைத் தூண்டுவதாக
உள்ளன.
இயேசு மரித்த மூன்றாம்நாள்
அதிகாலையிலேயே இயேசுவைக் காண
மகதலேனா மரியாள்
மற்றொரு பெண்ணுடன் கல்லறைக்கு
வருகிறார். வரும்போது உண்பதற்காக
கையில் வேக வைத்த முட்டைகளையும் ்
கொண்டு வந்திருக்கிறார்.
கல்லறைக்கு வந்த மகதலேனாவிடம்
மரித்த இயேசு உயிர்த்தெழுந்த
நற்செய்தி சொல்லப்படுகிறது .
அவர் இயேசுவைக் காண வேண்டும் என்று
அங்கிருந்து திரும்பிச் செல்கிறார்.
போகும் வழியில் இயேசுவைப்
பார்த்துவிடுகிறார்.
நம்பமுடியவில்லை.
அதன் பின்னர் தான்
கொண்டு வந்த முட்டைகளை எடுத்துப்
பார்க்கிறார்.
முட்டைகள் அனைத்தும் சிவப்பு நிறமாக
மாறியிருந்ததாம்.
அவருக்கு ஒரே ஆச்சரியம்.
"எப்படி இந்த முட்டைகள் சிவப்பாக
மாறின.?
இதுதான் இறைவன் உயிர்த்தெழுந்தார்
என்பதற்கான அடையாளமாக
இருக்குமோ?"
என்று நினைத்தார்.
ஆம்...அதுதான் உண்மையாக இருக்கக்கூடும்.அப்படியே
நம்பினார். அந்த நாள் முதல் சிவப்பு
முட்டை கிறிஸ்து உயிர்த்தெழுந்ததின்
அடையாளமாகிப் போயிற்று என்கின்றனர்.
இப்படி ஒரு கதை இருக்க
மற்றுமொரு சாரார் வேறுவிதமான
இன்னொரு கதையைக் கூறுகின்றனர்.
மகதலேனா மரியாள், இயேசு உயிர்த்தெழுந்து
விண்ணுலகுக்குச் சென்றுவிட்டார்
என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவரிடமும்
சொல்லிவிட வேண்டும் என்று
அங்குமிங்கும் ஓடுகிறார்.
யாரிடம் சொல்வது?
யார் நம்பப் போகிறார்கள்?
நேரே அரசனிடம் ஓடுகிறார்.
ரோம மன்னனிடம் போய் மூச்சிரைக்க நின்று"என் இயேசு
உயிர்த்தெழுந்தார். நான் அவரை உயிரோடு
பார்த்தேன் "என்று
உற்சாகமாகச் சொல்கிறார்.
மன்னனுக்கு பேரதிர்ச்சி.
அது எப்படி முடியும்? ஒரு வேளை உண்மையாக இருக்குமோ? உள்ளுக்குள் உதறல்.
எப்படியோ சமாளித்துக்கொண்டு,
" அது எப்படி மரித்தவர் உயிரோடு எழும்பி
இருக்கமுடியும் ? அதை நான் எப்படி
நம்புவது? நீ பொய் சொல்கிறாய்
"என்கிறார்.
" கல்லறையில் ஏசு இல்லை .நான் வழியில் ஏசுவைப் பார்த்தேன்....ஆனால்
இந்த மன்னர் நம்ப மறுக்கிறாரே...
இதனை நான் எப்படி மெய்ப்பிப்பது ?"
என்ற குழப்பத்தோடு
மகதலேனா மன்னன் முகம்
பார்த்துக்கொண்டு நிற்கிறார்.
மன்னனுக்கு நம்பமுடியவில்லை.
நம்பாமலிருக்கவும் முடியவில்லை.
என்ன செய்வது என யோசிக்கிறார்.
தன் வேலைக்காரரிடம்,
"ஒரு முட்டையை எடுத்துவந்து
மேசைமேல்
வை" என்கிறார் .
அனைவரும் ஆச்சரியத்தோடு
என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்று
கொண்டிருக்கின்றனர்
"ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதை
நம்ப வேண்டுமானால்
இந்த வெள்ளை முட்டை சிவப்பாக
மாற வேண்டும்.
இந்த வெள்ளையான முட்டை சிவப்பாக
மாறும்வரை நான் இயேசு உயிர்த்தெழுந்தார்
என்பதை நம்பப் போவதில்லை!
இது நான் உன்முன்
வைக்கும் சவால்"
என்கிறார் மன்னர்.
மகதலேனா மரியாளுக்கு
என்ன செய்வதென்று புரியவில்லை .
கையைப் பிசைந்தபடி முட்டையைப்
பார்க்கிறார். மன்னனைப் பார்க்கிறார்.
மன்னன் முகத்தில்" என்னையா
ஏமாற்றப் பார்க்கிறாய் ?"என்ற நக்கல்
தெரிகிறது.
எல்லோரும் என்ன நடக்க போகிறதோ
என்று பயத்தோடு முட்டையைப் பார்த்தபடி நின்றிருக்கின்றனர்.
என்ன ஆச்சரியம்!
முட்டை சற்று நேரத்தில் சிவப்பாக
மாறிப் போனது.
மன்னர் அதிர்ந்து போனார்.
மன்னர் கேட்ட சாட்சி கண்முன்
சிவப்பு நிறத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
அப்படியானால்.....அப்படியானால்.
...
இயேசு உயிர்த்தெழுந்து விட்டாரா?
மன்னனுக்குள் ஒரு நடுக்கம்.
கலக்கம். ஏதோ ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
இனி நம்பாமல் இருக்க முடியுமா?
நம்பித்தானே ஆக வேண்டும்
அதன்பிறகுதான் மன்னர் இயேசு
உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதையே
நம்பி இருக்கிறார்.
எது எப்படியோ முட்டை இயேசு
உயிர்த்தெழுந்தார் என்பதின் அடையாளமாக
இருந்து வந்திருந்திருக்கிறது என்பது மட்டும்
உண்மை.
முட்டையைப் புதிய வாழ்வுக்கான
அடையாளமாகவே
மேற்கத்திய நாடுகளில் பார்க்கின்றனர்.
முட்டையோடு சேர்ந்து முயலும்
இந்த ஈஸ்டர் முட்டை அட்டைப்படத்தில்
இடம் பிடித்தது எப்படி?
கிறிஸ்துவுக்கு முன்பு
சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர்
இயோஸ்டர் எனப்படும் வசந்த கால
தேவதையை வணங்கி வந்திருக்கிறார்கள்.
இந்தத் தேவதைக்கு
சம இராப்பகல் நாளான மார்ச் 21 ஆம்
நாள் விருந்து படைத்து மகிழ்வது
அவர்களது வழக்கம்.
அந்த விருந்தில் முட்டை
கண்டிப்பாக பரிமாறப்படுமாம்.
இந்த தேவதையின் விருப்பமான விலங்கு
முயல் .
இப்படி படையல் வைத்து வழிபடும்போது
உண்மையான முயலை அருகில்
கொண்டு வந்து நிறுத்தி விடுவார்களாம்
முட்டையைப் பார்த்த
முயலுக்குச் சும்மா இருக்க முடியாதில்லையா?
தந்திரக்கார முயல்
அந்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து
மறைத்து வைத்துவிடுமாம்.
காணாமல் போன முட்டைகளை கண்டு கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருந்திருக்கிறது.
இப்படி முட்டையோடு முயலுக்கும்
தொடர்பு இருந்திருக்கிறது.
அதனால்தான் இன்றும் ஈஸ்டர் வாழ்த்து
அட்டைகளில் முட்டைகளோடு
முயலும் இருப்பதைக்
காணலாம்.
முட்டைகளை உயரமான மலையிலிருந்து
உருட்டிவிட்டு விளையாடுவது ஈஸ்டர் விளையாட்டுகளுள் ஒன்று.
வட இங்கிலாந்தில் முட்டை அமுக்குதல்,
முட்டை தட்டுதல்
முட்டை ஜார்ப்பிங் போன்ற பல முட்டை
விளையாட்டுகள் ஈஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.
இந்த விளையாட்டில் கடைசிவரை
முட்டையை உடையாமல் பாதுகாத்து
வைத்திருப்பவரே வெற்றியாளராவார்.
தோல்வியடைந்தவர்கள் உடைந்த
முட்டையை உண்ண வேண்டும்.
நல்ல விளையாட்டாக இருக்கிறதே!
விளையாட்டு இருக்கும்போது நடனம்
இல்லாமலா?
முட்டை நடனமும் உண்டு.முட்டைகளுக்கு நடுவே
முட்டைகள் உடையாதபடி
நடனம் ஆடுவதுதான் இந்த நடனத்தின்
சிறப்பு.
மேற்கத்திய நாடுகளில் லெந்து நாட்களில்
முட்டை தடை செய்யப்பட்ட
உணவாக இருந்து வந்திருக்கிறது.
லெந்துகாலம் தொடங்குவதற்கு முந்தைய
செவ்வாய்க்கிழமை கடைசியாக
முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வார்களாம்.
அதன் பின்னர் நாற்பது நாட்கள்
முட்டையைக் கையில் எடுப்பதில்லை.
அதன் பின்னர் ஈஸ்டர் நாளில்
வாழ்த்து சொல்வதற்காகத்தான்
முட்டையைக் கையில் எடுப்பார்களாம்.
முட்டையானது கல்லறையின் குறியீடாகவும்
அதனை உடைப்பதன்மூலம் வாழ்க்கை
புதுப்பிக்கப்படுகிறது அல்லது
மீட்டெடுக்கப்படுகிறது என்பதும்
குறிப்பாக உணர்த்தப்படிருக்கிறது என்பதுதான் உண்மை.
அடேங்கப்பா... முட்டைக்கும் ஈஸ்டருக்கும்
இத்தனை தொடர்பா?
வியப்பாக இருக்கிறதல்லாவா!
இதோ இந்த முட்டையோடு இயேசு
உயிர்த்தெழுந்த நாள்
வாழ்த்து உங்கள் இல்லம்தேடி வருகிறது.
பண்டிகைநாள் மகிழ்ச்சி
உங்கள் இல்லங்களிலும்
உள்ளங்களிலும் நிரம்பி வழியட்டும்.
அனைவருக்கும் ஈஸ்டர்நாள்
நல்வாழ்த்துகள்!
Comments
Post a Comment