ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும்
ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும்...
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு "
என்பார் வள்ளுவர்.
நேற்று இருந்தவர் இன்று இல்லை.
அத்தகைய பெருமை உடையது இந்த உலகு.
யாரும் இந்த உலகு எனக்குச் சொந்தம்.நான் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்வேன்.
அதற்காக ஏராளமாக பொருள் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.
எவ்வளவு பொருள் சேர்த்து வைத்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு
ஒருநாள் செல்ல வேண்டியதுதான்.
இந்த உண்மை புரியாது
நான் பெரியவன் நீ பெரியவன்
என்று பெருமிதம் கொண்டு திரிவதால் யாருக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது. அதனால் உலகில் இருக்கும் வரை நல்லது செய்து வாழுங்கள்.
இதைத்தான் அனைத்துப் பெரியோர்களும்
சொல்லி வருகின்றனர்.
இந்தக் கருத்தைக் கொண்டுள்ள நல்வழிப் பாடல் இதோ உங்களுக்காக...
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டாநமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்எமக்கென்னென் றிட்டுண் டிரும்"
நல்வழி. பாடல் 10
"இப்பெரிய உலகத்திலுள்ள மனிதர்களே,
ஆண்டு முழுவதும் அழுதுபுரண்டாலும் இறந்தவர் உயிரோடு திரும்பி வருவாரோ?
வரமாட்டார்.ஆதலால் அவருக்காக அழுவதில் எந்தப் பலனுமில்லை.
ஒருநாள் நமக்கும் அதே மரணம்
நிகழும்.
யாரும் நிரந்தரமாக இந்த உலகில் தங்கிவிடப் போவதில்லை.
உயிரோடு இருக்கும் காலம் முழுவதும்
பிறர்க்குக் கொடுத்து நீங்களும் நல்லபடியாக உண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்" என்கிறார் ஔவை.
இறப்பைத் தள்ளிபோடலாம்.
ஆனால் தவிர்க்க முடியாது.
அனைவர்க்கும் இறப்பு உறுதியானது.
"இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே- ...."
என்பார் பட்டினத்தார் .
அதனால் தான் கண்ணதாசனும்
'போனால் போகட்டும் போடா
இந்தப் பூமியில் நிலையாய்
வாழ்வது யாரடா....
.... ...... .... ......
...... ..... .... .....
இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா,
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவா..னா,
கூக்குரலாலே கிடைக்காது
இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது,
போனால் போகட்டும் போடா,"
என்று பாடியிருப்பாரோ?
Comments
Post a Comment