நாற்பது வயதில் நாய்க்குணம்
நாற்பது வயதில் நாய்க்குணம்
"நாற்பது வயதில் நாய் குணம்
அறுபது வயதில் பேய் குணம்"
என்பார்கள்.
"பன்றி பண்பாடிழக்கலாம்
நாய் நன்றி மறக்கலாமா?"
என்றும் கேட்பார்கள்.
"நாற்பது வயதில் நாய் குணம் அதை
நாம் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம் அப்ப
அனுசரிச்சு நாம் அணைக்கணும்
நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில்
எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்"
இது கவிஞர் வாலியினுடைய பாடல்.
நாற்பது வயதில்
நாய்க்குணம் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
அறுபது வயசில் சேய் குணம்.
அதாவது சிறுபிள்ளை போன்று மாறி
விடுவராம் . அது உண்மை தான்.
சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போமே!
நா குணம் என்பதைத்தான்
நாய்க்குணம் என்று
சொல்லி இருப்பார்களாக இருக்கலாம் .
பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம்
வந்துவிடும்.
அதாவது எந்த இடத்தில் பேச வேண்டும். எந்த இடத்தில் பேசக்கூடாது என்று
சூழ்நிலை பார்த்து
ஆள் பார்த்துப் பேசும்
பக்குவம் வந்துவிடும்.
உலக அனுபவங்களை முழுதாக
தெரிந்து கொண்ட வயது நாற்பது வயது.
அதனால்தான் நாற்பது வயதில் நா குணம்
என்று சொல்லி இருப்பார்கள்.
அதைத் தவறுதலாக நாய்க் குணம்
என்று புரிந்து வைத்திருக்கிறோம்.
இது சரியான விளக்கமாகத்தான்
தெரிகிறது இல்லையா?
.ஆனால் நாய்க் குணம் என்பது
நாயினுடைய குணம் என்று பொருள்
கொண்டாலும் தப்பில்லை என்றும்
தோன்றுகிறது.
இது பெருமைப்பட வேண்டிய ஒரு ஒப்புமை தான்.
நாய் என்ன வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய
விலங்கா...என்ன?
நாயைப் போன்று நன்றியுள்ள பிராணி
வேறு எதுவும் இல்லை.
ஆனால் கொஞ்சம் அதிகமாக குரைக்கும் .
அதனால் தான்
கத்தி பேசிவிட்டால் போதும்
ஏன் நாய் மாதிரி கத்துற.... என்று
நாயைப் பிடித்துக்கொண்டு வந்து நிற்போம்.
அதுவும் நாற்பதுக்கு மேலே
அப்படி கத்திவிட்டால் போதும்
நாற்பதுக்கு மேல நாய்க்குணம்
என்று சும்மாவா சொன்னார்கள்
இதுக்குத்தான் சொல்லியிருப்பார்கள்.
என்று நாயோடு கட்டிப்போடும் பார்ப்போம்.
இந்த நாய்க்குணம் ஆண்களுக்கு மட்டுமே இருப்பதாக நினைத்துக்
கொண்டு ஆண்களையே குறி வைத்துப்
பேசுவர்.
அதென்னவோ ஆண்கள் மட்டுமே
கத்துவது மாதிரியும் பெண்கள் எல்லாம்
அமைதியானவர்கள் என்பது மாதிரியும்
அப்படி ஒரு பிரம்மையை ஏற்படுத்தி
வைத்துள்ளனர் சில பெண்கள்.
இப்படி ஆண்களையே குறி வைத்து
சொல்லப்படும் குற்றச்சாட்டு
சரியானதுதானா....?
"பிறகு என்னங்க...எப்பவும் வள்ளு... வள்ளு
என்று கத்தினால்...
அப்படித்தான் சொல்வாங்க..."
இது பெண்கள் தரப்பு முன் வைக்கும் புகார்.
"நீங்க சும்மா இருந்தா நாங்க ஏன் கத்தப் போறோம்..."பாதிக்கப்பட்டவர்கள்
பக்கமிருந்து வரும் பதில்.
எனக்கு என்னவோ இரண்டு பக்கமும்
நியாயம் இல்லாதது போல்தான்
தோன்றுகிறது.
பெண்களுக்கும் உடல் ரீதியான சில
மாறுதல்கள் நடைபெறும்போது கோபம்
வரத்தான் செய்யும்.
அதை ஆண்கள்தான் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும்.
ஆண்களும் வேலையில் இருந்து
மன அழுத்தத்தோடு வீட்டிற்கு வருவார்கள்.
வீட்டிற்கு வந்ததும் சற்று அமைதியை
எதிர்பார்ப்பது இயல்பு.
அதைப் புரிந்து கொள்ளாமல் அது இல்லை..
இது இல்லை என்று பட்டியல் வாசிப்பது
கோபத்தைத்தான் உண்டாக்கும்.
நேரம் பார்த்துப் பேசத் தெரியாததால்
வரும் சிக்கல்கள் நமக்குள் இருக்கும்
நாய்க் குணம் வெளிப்பட காரணமாக அமைந்துவிடுகிறது.
இப்போது இந்தப் பழமொழிக்கு
வருவோம்.
அதென்ன நாய்க் குணம்....?
நாய்க்கு குரைக்க மட்டும்தான் தெரியுமா....?
நாய் நன்றி உள்ள விலங்கு.
வீட்டைக் காக்கும் கடமையும் பொறுப்பும்
தனக்கு இருக்கிறது என்ற கடமை உணர்வோடு
வீட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கும்.
தூங்குவதுபோல் கிடக்கும்.
ஆனால் தூங்காது.
தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒன்று
என்றால் விட்டுக் கொடுக்காது.
துரத்தித் துரத்திக் குரைக்கும்.
இதுதான் நாயினுடைய குணம்.
இந்தப் பக்குவமும் பொறுப்பும் ஒரு
மனிதனுக்கு வருவது
நாற்பதாவது வயதில் தான்.
தூங்கினால் தூக்கம் வராது.
பிள்ளைகள் பற்றிய நினைப்பு மனதுக்குள்
வந்து தூங்கவிடாது.
இது நாள்வரை பொறுப்பில்லாமல்
இருந்திருப்போம்.முழு கடமையை
உணரும் வயதும் நாற்பதாவது வயதுதான்.
இதுதான் இந்த பழமொழிக்கான
பொருளாக இருக்கும்.
இருந்திருக்க வேண்டும்.
பிள்ளைகள் கடைக்குள் சென்றால்
நாயாக கடை வாசலிலேயே காத்துக் கிடப்போம்.
பள்ளி வாசலில் காத்துக் கிடப்போம்.
வெளியில் சென்று விட்டால் வீட்டு
வாசலிலேயே காத்திருப்போம்.
இந்தக் காத்திருப்பும் கடமை உணர்வும்
மிகுந்திருக்கும் வயது நாற்பது வயது.
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
இப்படியொரு நற்பண்பு நமக்குள் வந்திருப்பதைச் சுட்டிக்காட்ட நாய்க்குணம் என்று எத்தனை முறை சொன்னாலும் தப்பில்லை என்கிறார் ஒரு நாற்பது வயதுக்காரர்.
உண்மையை அழகாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.
"நாற்பது வயதில்
நரை வந்து எட்டிப் பார்க்க
முட்டிப் பார்த்துவிட
முழு குடும்பமும்
எதிரில் நிற்க
எட்டி நின்று எதிரிபோல்
பார்த்த பிள்ளைகள்
குட்டியாய் முணுமுணுத்து
சட்டிப்பானை உருட்டும்
குருட்டுப் பூனையெனப்
பெயர் தந்து
துரட்டெடுத்து விரட்டாமல்
நாய்க் குணம் என்றதில்
பெருமை எனக்குண்டு
மக்களுக்காய்
நாயாய்க் காத்துக் கிடப்பதால்
கிடைத்து இந்தச்
சிறப்புப் பட்டம்
பட்டம் கிடைத்ததில்
பெரும் மகிழ்ச்சி
குடும்பத்திற்கு
நான்என்றும்
நாய்தான்
நாற்பதில் என்ன !
எப்போதுமே நாயாய்
வாழ்வதில் மகிழ்ச்சி உண்டு" பெருமையாக கூறுகின்றார்
நாற்பது வயதுக்கார அப்பா.
இந்தப் பெருந்தன்மை நாற்பது வயதுக்காரரைத் தவிர
வேறு யாருக்கு வரும்?
Comments
Post a Comment