ஆற்றங்கரையின் மரமும்...

ஆற்றங்கரையின் மரமும்...


வாழ ஆசை .

ஆனால் முடியவில்லை.

வாழ்க்கை எங்கெங்கோ கொண்டு 

நிறுத்தி வேடிக்கை காட்டுகிறது.

கையேந்தி நிற்க வைத்து

கண்ணாமூச்சி விளையாடி

கலங்க வைக்கிறது 

என்னடா பொல்லாத வாழ்க்கை

புலம்புகிறேன்

புவியில் யாருக்கும் 

கவலையில்லை

 எதைப்பற்றியும்

புரிதலில்லை.

இறைவனிடம் கையேந்துங்கள்.

அவன் இல்லை என்று 

சொல்வதில்லை

என்று சொன்னார்கள்

யார் இறைவன் என்று மட்டும் 

சொல்லித் தரவில்லை 

தந்திருந்தால் அவரிடம் மட்டும் கையேந்தியிருப்பேன்

அவர் என்னை வாழ வைத்திருப்பார்

யாரையெல்லாமோ கும்பிட்டுத் திரிந்தேன்

யார் தொழத்தக்கவர் யார்

என்று தெரியாமல்" என்று

புலம்பினேன்.


"அட போடா....

யார் தொழத்தகக்கவர் என்று நான் சொல்லட்டுமா?

யார் இந்த உலகில் வாழ்கிறாரோ 

யார் பிறரை வாழ வைக்கிறாரோ

அவர்தான் தொழத்தக்கவர்"

என்ற குரலோடு வள்ளுவர் என்முன்

வந்து நின்றார்.


"தானும் வாழ்ந்து 

பிறரையும் வாழ வைக்கும் 

நல்லுள்ளம் படைத்த மனிதர்

இந்த உலகில் உளரோ?"என்றேன்.


"ஏனில்லை.....உழவர் இல்லையா"

என்றபடி


 “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 

தொழுதுண்டு பின் செல்பவர்”  

என்று சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட்டார் வள்ளுவர் .


உழவர் மட்டும்தான் தன் உழைப்பால் விளைந்த பொருட்களை உண்டு வாழ்கிறார்.

நாமெல்லாம் அவரைத் தொழுதுண்டு வாழ்கிறோம் என்று உழவர் மட்டுமே தொழத்தக்கவர் என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.


இப்போது மற்றுமொரு கேள்வி


பணிகளில் முதன்மைப் பணியாளர்கள் என்றோம் முதல் குடிமகன் என்கிறோம்.

யாருக்கெல்லாமோ முதன்மை என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்து வைத்திருக்கிறோம்.

அவர்களுள் யார் முதன்மையானவர்

என்ற கேள்வி  அடுத்ததாக எனக்குள் எழுந்தது.

இதற்கும் விடை தேட வேண்டும் 

என்ற தேடலில் கண்கள் 

எங்கெங்கோ அலைபாய...


"முதன்மைத் தொழில் 

முடிவுறாத் தொழில்

வீழ்ச்சி காணாத் தொழில்

பழுதில்லாத் தொழில் 

ஒப்பில்லாத் தொழில்

ஒன்றுண்டு

பாரீர் பாரிலுள்ளோரே "என்று

இன்னொரு குரல் காதில் வந்து விழ...

இன்ப அதிர்ச்சியில் நாவாடாது

நின்றிருந்தேன்.


"கேள்வி கேட்டாய்...பதில் கொடுத்தேன்.

செவிகேளா நிலையில் நிற்கின்றாய்"

என்றார்.


"கேட்டேன்....கேட்டேன்

என் கேள்விக்கான 

விடையைக் கேட்டேன்"

என்றேன்.


நான் கேட்ட அந்தப் பாடல்

இதோ உங்களுக்காக....


ஆற்றங் கரையின் மரமும் அரசறியவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே- ஏற்றம்உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்பழுதுண்டு ஓர் பணிக்கு”


           நல்வழி பாடல்:12


" ஆற்றங்கரையிலே வளர்ந்திருக்கும் மிகப் பெரிய மரமானது பெருவெள்ளம் வரும்போது சாய்ந்து விடும்.

அவ்வாறே எந்தப் பெரிய அரசுப் பணியில் இருப்பவரும் குறிப்பிட்ட அகவை அடைந்தவுடன்  பணிஓய்வு  கொடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவார். அரசனுடைய

ஆட்சி காலமும் ஒருநாள் முடிவுக்கு வரும்.

இப்படி  எல்லாத் தொழிலிலும் முடிவு உண்டு ஆனால் உழவுத் தொழி்ல் செய்பவர்க்கு  ஓய்வும் இல்லை. அவர் செய்யும் 

வேலையில் பழுதும் இல்லை என்று முடித்திருக்கிறார்  "ஔவையார். 

உழவுத்தொழிலுற்கு ஒப்பானதொரு தொழில் இந்த உலகத்திலே இல்லை 

என்று நற்சான்றிதழ் எழுதி கையில் தந்துவிட்டார் ஔவை.


ஔவைக் கருத்துக்கு மறுப்பேதும் உளதோ?


"....உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்பழுதுண்டு ஓர் பணிக்கு”


அருமையாக சொல்லியிருக்கிறார் இல்லையா?

Comments