எல்லாப்படியானும் எண்ணினால்...

எல்லாப்படியானும் எண்ணினால்....



உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பார் திருமூலர் . , உடலை முறையாகப் பேணி வளர்ப்பதன் மூலம், உயிரையும் வளர்க்க முடியும் என்பது இதன் பொருள்


ஆனால் இந்த உடம்பை வளர்த்து என்ன பயன்?

புழுக்களும் நோயும் வாழும் உடம்புக்கு

இத்தனை பராமரிப்பா?

யார் இப்படிச் சொன்னது?

ஏன் இப்படிச் சொல்கிறார்?

எதற்காக உடம்பின்மீது இத்தனை கோபம்?

வாருங்கள். சொல்லியவரிடமே  கேட்டுவிடுவோம்.



வெண்பா : 7

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்

அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்

பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


      நல்வழி பாடல் :7


 குரம்பை- குடிசை வீடு

கமல் நீர் போல- தாமரை இலை நீர் போல




எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடம்பு நிலையில்லாதது.

அதுமட்டுமல்லாமல் புழுக்களும்  நோயும் நிறைந்து வாழும்  ஒரு வீடு இந்த உடம்பு.இதை நல்லவர்கள் நன்கு அறிந்து

வைத்திருப்பார்கள். அதனால்

அவர்கள் உடலை அதிகம் கொண்டாடாமல் தாமரை இலை தண்ணீரில் 

ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வதுபோல வாழ்வர். அதாவது உலகப் பற்றிலிருந்து சற்று விலகியே வாழ்வர். , இந்த உண்மையைப் புரியாத அதாவது உணராதவர்களிடம் பேசி ஒரு பயனும்  இல்லை. அதனால்  அவர்களிடம் எதைப்பற்றியும் பேசாமல்  விலகியே இருப்பர் என்கிறார் ஔவை.


ஊன் உடம்பு நிலையில்லாதது.அதனால்

ஒரேயடியாக கொண்டாடாட வேண்டாம்.

Comments