கம்பனிடம் இல்லை

கம்பனிடம்  இல்லை



"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் 

கவி பாடும்"

என்று ஒரு பழமொழி உண்டு.


அப்படி இருக்க கம்பனிடம்  என்ன இல்லை என்பதைக் கண்டீர்கள் 

என்ற கேள்விக் கணைகள் என்னை நோக்கி வீசப்படுவது  எனக்குப் புரியாமலில்லை.


பொறுமை...பொறுமை...

நான் சொல்லி முடிக்கும் வரை

பொறுத்திருங்கள்


கம்பனிடம் இல்லாததா?

இல்லை...இல்லை...இல்லையோடு  கம்பன் நடத்திய

கவி விளையாட்டு ஒன்று இருக்கிறது.

வாருங்கள்  நாமும் ஓரமாய் நின்று கம்பரின்

கவி விளையாட்டைக் கண்டு களிப்போம்.


உங்கள் ஊரைப் பற்றிச் சொல்லுங்கள் 

என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?


மலை இருக்கிறது.

காடு இருக்கிறது.

பெரிய பெரிய வீடுகள் இருக்கின்றன.

பள்ளி இருக்கிறது. 

ஆறு இருக்கிறது.

 குளம் இருக்கிறது 

என்று இருக்கிறது இருக்கிறது என்ற சொல்லை அடுக்கிக் கொண்டே போவோம்.


இருக்கிறது என்று சொல்வதில்  பெருமைப்படும் நாம் இல்லை என்ற சொல்லைச் சொல்லத் தயங்குவோம்.

ஏன் இந்தத் தயக்கம்?


ஏனென்றால் இல்லை என்ற சொல் வெறுமைக்கு

மட்டுமே பயன்படுத்தக்கூடிய சொல்

என்பது நமது கணிப்பு.

அதனால் தான் இந்தத் தயக்கம்.



இல்லை இல்லை என்ற சொல்லை வைத்தே

அயோத்தியில் என்னென்ன வெல்லலாம் இருக்கிறது  என்று நம்மைப் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறார் கம்பர். 


அயோத்தி மாநகர் செழுமையாக இருக்கிறதாம்.

அப்படி அயோத்தி செழுமையாக

இருப்பதற்கு

இவை எல்லாம் இல்லாதிருப்பதே

காரணமாம்.

இல்லையோடு இருப்பதை மோதவிட்டு

கம்பர் விளையாட்டுக்காட்டிய

பாடல்  இதோ உங்களுக்காக....

"வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்."



வண்மை - கொடை, 

திண்மை - துணிவு, 

செறுநர் - பகைவர், 

வெண்மை - அறியாமை


கொடை கொடுக்க ஆட்கள் இல்லை.

ஏன் என்கிறீர்களா?

வறுமை இல்லை. வறுமை இல்லை ஆதலால் இரப்பதற்கு  யாருமில்லை.

இரப்பதற்கு ஆள் இருந்தால்தானே கொடுப்பதற்கு ஆள் வேண்டும்.


வறுமை இல்லை ஆதலால் கொடையும் இல்லை.


பகைவர் இல்லை அதனால் துணிவுக்கு வேலை இல்லை.

துணிவோடு  சண்டையிட வேண்டிய தேவை இல்லாது போனதற்குக் காரணம் பகைவர் இல்லை.


பொய்  உரைக்க ஆளே இல்லை.

அதனால் உண்மைக்கு அவசியமில்லை.

எல்லாருமே உண்மையாக இருக்கும்போது

பொய் பேச வேண்டிய அவசியமில்லை.


"பொய்யாமை யன்னப் புகழில்லை எய்யாமை

எல்லா அறமும் தரும் "


 பொய்யாமையைப் போன்று புகழ் தருவது

வேறு எதுவும் இல்லை.

அந்தப் புகழ் அயோத்திக்கு உண்டு.



கேள்வி அறிவுள்ளவர்கள் மிகுந்திருப்பதால் அறியாமை இல்லை.


"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் 

அச்செல்வம்

செல்வதற்குள் எல்லாம் தலை"


அந்தச் செவிச் செல்வம்

அயோத்தியில் இருக்கிறது. அதனால் 

அறியாமை இல்லை.


வறுமை இல்லை வளமை இருப்பதால்...

பகைவர் இல்லை துணிவு இருப்பதால்..

பொய் இல்லை உண்மை இருப்பதால்..

அறியாமை இல்லை கேள்வி அறிவு  இருப்பதால்...

இல்லாமையைப் சொல்லி இருப்பதைப் புரிய வைத்திருக்கிறார்.


என்னவொரு அருமையான விளக்கம்.

யாரால் கூடும் இப்படியொரு கவியாக்கம்?


ஒரு நாட்டிற்குப் பெருமிதம் தருவது எது?


"கல்வி தறுகண் இசைமை கொடையெனச் 

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே."

என்கிறது தொல்காப்பியம்.


இல்லை இல்லை என்ற   சொல்லை வைத்து தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட நான்கு பெருமிதங்களும் அயோத்தி நகரத்தில்

இருக்கிறது என்று  சொல்லி 

இருக்கிறார் கம்பர்.


இதனால்தான் 

கவியரசு கண்ணதாசன் கம்பனை பற்றிப் பாடும்போது,


  " பத்தாயிரம் கவிதை

முத்தாக அள்ளிவைத்த

சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்

வித்தாக வில்லையென்று பாடு!


என்று பாடி வியந்திருப்பாரோ!
















Comments

Post a Comment