காக்கைப்பாடினியார்
காக்கைப்பாடினியார்
தலைவன் ஒருவன் வெளியூருக்கு பொருளீட்ட சென்று விட்டான்.
தலைவி தலைவனை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கிறாள்.
தலைவன் வந்தபாடில்லை..
தலைவனைப் பற்றிய எந்த செய்தியும் இல்லை.
என்ன ஆனதோ ஏதானதோ புலம்புகிறாள்.
வருவானோ வரமாட்டானோ
என்று ஏக்கத்தோடு வழிமேல் வழிவைத்துக்
காத்துக் கிடக்கிறாள்.
அப்போது ....
காக்கை ஒன்று கரைகிறது.
ஆ....இது காக்கையின் குரலல்லவா!
காக்கைக் கரைந்தால் விருந்து வரும் என்று
சொல்வார்களே!
அப்படியானால் .....
அப்படியானால்....
என் வீட்டிற்கு விருந்து வரப்போகிறதா?
எங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக
யார் வரப்போகிறார்?
வேறு யார் வரப்போகிறார்கள்?
ஒருவேளை ....அவராக இருக்குமோ.
என் தலைவன்
வரப் போவதைத்தான்
இந்த காக்கை கரைந்து அறிவித்துவிட்டு செல்கிறதோ...?
இருக்கலாம்... இருக்கலாம்.
அந்த நம்பிக்கையில் தலைவி
முகத்திலிருந்த கவலை
காணாமல் போயிற்று.
நம்பிக்கையோடு காத்திருக்கிறாள் தலைவி.
அவள் எதிர் பார்த்தது போலவே
தலைவன் வந்து விட்டான்.
தலைவிக்குக் கையும் ஓடவில்லை.
காலும் ஓடவில்லை.
என்ன செய்யலாம்... என்ன செய்யலாம் என்று
அங்குமிங்கும் நடக்கிறாள் .
காக்கை கரைந்ததினால்தானே
என் தலைவன் வந்தான்.
காக்கை எனக்க எவ்வளவு பெரிய உதவி
செய்திருக்கிறது.
காக்கை எனக்குச் செய்த இந்தஉதவிக்குக் கைமாறாக நான்
என் செய்வேன் . ?
அந்த காக்கைக்கு இன்று நல்ல உணவூட்ட வேண்டும் என்று நினைக்கிறாள்.
அதனைத் தோழியிடம் சொல்கிறாள்.
அதற்கு தோழி,
.
"திண்தேர் நள்ளிகானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே"
குறுந்தொகை - 210
வலிய தேரையுடைய நள்ளி
ஆட்சிக்குட்பட்ட காட்டில் இடையர்கள் இருக்கின்றனர்.
அவர்களிடம் ஏராளமான பசுக்கள் உள்ளன. அந்தப் பசுக்களில் இருந்து கரக்கும் பாலிலிருந்து நல்ல
நெய் கிடைக்கும்.
அந்த நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் நன்றாக விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய சுவையான சோற்றை அந்தக் காக்கைகளுக்கு
ஏழு பாத்திரங்களில்
ஏந்தி நீ கொடுக்கலாம் .
இப்படியொரு சுவையான
உணவை நீ கொடுத்தாலும் தலைவியாகிய உன்னுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டு, விருந்தினர் வருவார் என்பதற்கு அடையாளமாகக் கரைந்த
காக்கைக்கு நீ வழங்கும்
இந்த உணவு சிறிதளவே ஆகும்.
காக்கைக்கு நீ நெய்சோறு கொடுத்துச் செய்ய விரும்பும் உதவியை விட
காக்கை உனக்குச் செய்த உதவி மிகப்
பெரியது என்கிறாள் தோழி.
தலைவன் வருவானா மாட்டானோ
என்று தவித்துக் கொண்டிருந்த தலைவிக்கு
உன் தலைவன் வருகிறான் என்று முன்னறிவிப்பு செய்த உதவி
உரிய காலத்தில் செய்த உதவி.
அந்த உதவிக்கு எதுவும் ஈடாகாது என்பது
தோழியின் கூற்று.
காக்கை கரைந்து விருந்து வருமா?
வராதா?
இதில் உண்மை இருக்கிறாதா?
இல்லையா?
இது நம்பிக்கையா ?
மூட நம்பிக்கையா?
இப்படி ஓராயிரம் கேள்வி எழலாம்.
இந்த ஆய்வு தேவையில்லாத ஒன்று.
அந்த நேரத்தில் அது ஒரு நம்பிக்கை.
அவ்வளவே.
அதனால் கிடைத்தது ஆறுதல்.
சற்று மனநிம்மதி.
இதுதான் அவளுக்கு இப்போது தேவையாக
இருந்தது.
இதுதான் இங்கு முக்கிய செய்தியாக
வைக்கப்பட்டுள்ளது.
காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கை கொடுத்த புலவர் யாரப்பா
என்ற கேள்வி எழாமல் இல்லை.
வேறு யாராக இருக்கும் .
காக்கையைப் பாடினவர்
காக்கைப் பாடினியார் என்ற பெண்பாற் புலவர்.
விருந்துவரக் கரைந்த காக்கை
அருமையான வரி இல்லையா?
Comments
Post a Comment