செம்புலப் பெயல் நீர் போல....
செம்புலப் பெயல் நீர் போல...
சங்க இலக்கிய நூல் வரிசையில் எட்டுத்தொகை
நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
காதல் பாடல்களுக்கும் பஞ்சம் இருக்காது.
குறுந்தொகைப் பாடல்களைப் பல புலவர்கள் பாடியிருந்தாலும்
அதனைத் தொகுத்தவர்
பூரிக்கோ என்ற புலவர் என்று
சொல்வார்கள்.
குறுந்தொகையில் வரும்
" யாயும் ஞாயும் யாராகியரோ "
என்ற பாடல் எல்லா இடங்களிலும்
பேசப்படும் ஒரு பாடல்.
காதலர்களுக்கான பாடல்.
காதலர்களுக்கு மட்டுமல்ல
கணவன் மனைவிக்கும்கூட
பொருந்துவதாக எழுதப்பட்டிருப்பது
இந்தப் பாடலின் சிறப்பு.
காதலைப் பற்றிப் பேசும்போது கண்டிப்பாக
அதில் இப்பாடல் இருக்கும்.
இந்தப் பாடலை இயற்றியவர்
யார் என்றே தெரியவில்லை.
" செம்புலப் பெயல் நீர் போல "
என்ற அருமையான ஓர்
உவமையைக் கையாண்டதின்மூலம்
அவர்
" செம்புலப் பெயனீரார் "என்று
அழைக்கப்படுகிறார்.காதல் இருக்கும்வரை
காதலர் உள்ளங்களில் செம்புலப் பெயல் நீரார் இருந்து கொண்டே இருப்பார்.
அவர் பாடிய பாடல்
இதோ உங்களுக்காக...
" யாயும் ஞாயும் யார் ஆகியரோ ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எம்முறை அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ."
குறுந்தொகை.
பாடல் எண் : 40
தலைவன் ஒருவன் தலைவியைச் சந்திக்கிறான்.
இருவரும் ஒருவர்மீது ஒருவர் காதல்
கொள்கின்றனர்.
ஆனால் இதற்குமுன் இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்ததுகூட
கிடையாது.
முன்பின் தெரியாத இருவரும்
காதல் வயப்படுகின்றனர்.
காதல் வளர்கிறது.
தனிமையில் சந்தித்துக் கொள்கின்றனர்.
இப்போது பெண்ணுக்கே எழும் இயல்பான
அச்சம் வர தலைவி சற்று விலக
நினைக்கிறாள்.
யாரோ முன்பின் தெரியாத
ஒருனிடம் மனதைப் பறிகொடுத்து விட்டோம்.
இது சரியாக இருக்குமா?
ஒருவேளை
இவன் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டால்
என்ன செய்வது என்ற அச்சம் எழ
தடுமாறி நிற்கிறாள்
சற்று விலகிப் போக நினைக்கிறாள்.
அவளுடைய கலக்கத்தை அவளின்
முகக்குறிப்பிலிருந்தே தெரிந்து
கொண்ட தலைவன்,
நீ ஏன் கவலைப்படுகிறாய்?
என்று அவளைத் தேற்றுவதுபோல்
அமைந்துள்ளது இந்தப் பாடல்.
காலங்காலமாக காதலர் கொண்டாடி
மகிழும் பாடல் இது.
யாயும் ஞாயும் அதாவது
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும்
யார் யாரோ எனக்குத் தெரியாது.
எந்தையும் நுந்தையும் அதாவது
என்னுடைய அப்பாவும்
உன்னுடைய அப்பாவும்
எந்தவிதத்தில் உறவினர் என்பதும்
எனக்குத் தெரியாது.
எந்த உறவுமுறையை வைத்து
நாம் இருவரும்
ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்
என்பதும் தெரியவில்லை.
இப்படி நாம் இருவரும் தனித்தனியாக
எங்கோ பிறந்ததோம்.
எங்கோ இருந்தோம்.
எந்த உறவுமுறையும்
நமகுகுள் இல்லை.
செம்மண்நிலத்தில் மழைநீர் விழுகிறது.
அவ்வளவுதான்.விழுந்த மறுநிமிடத்தில்
செம்மண்ணோடு செம்மண்ணாக இரண்டற கலந்து
நீரும் செம்மண்ணும் தனித்தனியாகப்
பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிடுகிறது.
இது எப்படி நிகழ்ந்தது?
அதுதான் இயற்கை.
அதுபோல
நாம் இருவரும்
ஒருவர்மீது ஒருவர் அன்புகொண்டோம்
இப்போது யாராலும் பிரிக்க முடியாதபடி
ஒன்று கலந்துவிட்டோம்.
இனி நாம் நினைத்தாலும் பிரிந்து செல்ல முடியாது. நீரின் நிலைதான் நமது நிலையும்.
என்று
உண்மை நிலையை அருமையான
உவமைமூலம் கூறி
தலைவிக்கு பிரியேன் என்று உறுதியளிக்கிறான்
தலைவன்.
நம் பெற்றோர் வேண்டுமானால்
ஒருவருக்கு ஒருவர்
உறவு இல்லாதவர்களாக இருக்கலாம்.
நாமும் யார்யாராகவோதான் இருந்தோம்.
ஆனால் அன்பால் இணைக்கப்பட்டு
விட்டோம்.
மழைநீர் மண்ணோடு மண்ணோடு
கலப்பது போல உன்னோடு நான்
கலந்துவிட்டேன்.
இனி பிரிவு என்பது
நமக்குள் இல்லை.
நீ வேறு நான் வேறு என்ற நிலை
உன்னைப் பார்த்தபோதே
காணாமல் போய்விட்டது என்கிறான்.
இதைவிட ஒரு காதலிக்கு வேறு உறுதி அளித்து விடக் கூடுமா என்ன?
நச்சென்று மனம்
கொள்ளும்படி உணர்த்த வேண்டும்.
அதற்கு இந்த இடத்தில்
" செம்புலப் பெயல் நீர் போல "
என்ற உவமைத் தவிர வேறு எதுவும்
பொருத்தமாக இருக்காது என்ற
நினைத்தார் புலவர்.
காதலிக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அந்த வரியையே தன் பெயராகவும் கொண்டு நம்மோடும் "செம்புலப் பெயல் நீர் போல" கலந்துவிட்டார்.
"யாருக்கு மாப்பிள்ளை யாரோ _ அவர்
எங்கே பிறந்திருக்கிறாரோ"
இதைத்தானே செம்புலப் பெயல் நீரார்
சொல்லி இருக்கிறார்.
அருமையான பாடல் இல்லையா?
Comments
Post a Comment