பிச்சைக்கு மூத்தகுடி...
பிச்சைக்கு மூத்தகுடி....
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"
"இவ்வுலகில் சிலருக்கு இரந்து உயிர்வாழவேண்டிய நிலையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால், அவனும் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக "என்று கோபமாக எழுதியிருப்பார் வள்ளுவர்.
பிச்சை எடுத்து வாழ்தல் இழிவானது.
இதுதான் நம் அனைவரின் கருத்தாக இருக்கும்.
ஆனால் பிழைப்புக்கு ஏதும் வழியில்லை என்றால் என்ன செய்ய்ய முடியும்?
உழைக்கக் திறன் இருந்தும் இரந்து வாழ்வது வெறுக்கத்தக்கது.
தவறான செயல்.
ஆனால் உழைக்க இயலாதவர்கள்,
மாற்றுத்திறனாளிகள்
என்ன செய்ய முடியும்?
இருந்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இப்படியொரு நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்?
படைத்தவனை அன்றி வேறு யாரை குறை சொல்ல முடியும்.?
வெறுமனே குறை சொல்லிவிட்டுக் கடந்து போக வள்ளுவருக்கு மனம் வரவில்லை.
"ஏன் இப்படிப் படைத்தாய்?" என்று கேள்வி கேட்கிறார்.
இவர்கள் இரந்து வாழ்வதற்கு நீதானே காரணம் ...அப்படியானால் அதற்கான தண்டனை உனக்கும் உண்டு.
தண்டனையிலிருந்து நீயும் தப்ப முடியாது.
நீயும் அவர்களைப்போல அலைந்து திரிந்து கெடுவாயாக என்று கோபத்தின் உச்சத்தில்
கொந்தளித்துக் பேசுகிறார் வள்ளுவர்.
ஆனால் இரப்பவர்கள் வாழ்வு எல்லாம் பரிதாபத்திற்குரியதாக இருப்பதில்லை.
வயிற்றுப் பசிக்காக இரரப்பவர்கள் ஐயோ பாவம் என்று அனைவராலும்
பரிதாபமாகப் பார்க்கப்படுவர்.
அதுதான் உண்மை.
இவர்களைத் தவிர இரப்பவர்களில்
வேறு சிலரும் இருக்கின்றனர்.
அவர்கள் பிடுங்கித் தின்னும் வகையைச் சார்ந்தவர்கள்.ஒருவர் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக தன்வயப்படுத்தி அதாவது பிறரது மனதில் ஆசையைத் தூண்டி அவரிடமிருந்து பொருளைப்பெற்று வயிற்றை வளர்க்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் அப்படி வாழ்வதைவிட
உயிர் விடுதல் சாலச் சிறந்தது.
அதாவது பிடுங்கி தின்று உயிர் வாழ்த்தை விட
சாகலாமே என்று கேட்காமல் கேட்கிறார்.
இப்படி கேட்கும் யாரிவர் ?
சீச்சீ இதெல்லாம் ஒரு பிழைப்பா
உழைத்து வாழய்யா என்று கேட்கிற இவர் யார்?
என்று கேட்கத் தோன்றும்.
வேறு யாரால் இப்படி சட்டென
கோபப்பட்டுப் பட்டென்று போட்டுடைக்க முடியும்?
ஔவையார்தான் தனது நல்வழிப் பாடலில்
இப்படியொரு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாடல் இதோ உங்களுக்காக...
"பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கைபேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம்அழியாது
உயிர்விடுகை சால உறும் "
நல்வழி பாடல் : 14
பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. "அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை
ஒன்று உண்டு. அது எது தெரியுமா? சொல்கிறேன் கேள்.
ஒருவருடைய மனதில் பல்வேறு ஆசைகளைத் தூண்டி
கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்தி
அவர் ஆசை கொள்ளும்படிச் செய்து அவரிடமிருந்து பொருளைப் பெற்று தன் வயிற்றை வளர்த்தல் ஆகும்.
சீச்சீ! இப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கையா? மானக்கேடு.
இப்படி ஒரு மானங்கெட்ட வாழ்க்கை நடத்துவதை விட தன் உயிரை விடுவது மேலானது." என்பது பாடலின் பொருள்.
சரியான கேள்வி.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட
ஒருவருக்கு மட்டுமே சமூகத்தின் மீது கோபப்படும் உரிமையும் உண்டு.
இந்தப் பாடலின் மூலம் தான் ஒரு சமூகப்
போராளி என்பதை ஔவையார் மெய்ப்பித்துள்ளார்
"இச்சை பல சொல்லி இடித்துண்கை - சிச்சீ"
என்னவொரு கோபம்!
Comments
Post a Comment