நஞ்சு உடைமைதான் அறிந்து
நஞ்சு உடைமைதான் அறிந்து.....
கரவிலா நெஞ்சத்தவர் யார்?
இப்படியொரு கேள்வி வந்து
மண்டையில் ஏறி உட்கார்ந்து
அப்படிப்பட்ட நபரைத் தேட ஆரம்பித்தது.
அந்தத் தேடலின்போது
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்."
என்ற வள்ளலாரின் வரிகள் வந்து
என்னைத் குறுக்கு விசாரணை செய்ய
ஆரம்பித்தது.
குறுக்கும் நெடுக்கும் நடக்க வைத்தது.
அதன் உண்மை தன்மையை
அறியும் ஆவலில் அதைப்பற்றிய
கூடுதல் கேள்விகள் வந்து விடைகேட்டு
நிறுத்தி வைத்தது.
மனதில் எதையும் மறைத்து வைக்காது
வெளிப்படையாகப் பேசுபவர்கள்
கரவிலா நெஞ்சத்தவர் என்று
முதலாவது கேள்விக்கு எனக்கு நானே விடை எழுதி வைத்துக் கொண்டேன்.
இப்போது வள்ளலாரின் வரிகள் என்னைத்
துரத்த ஆரம்பித்தது. உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுகிறவர்கள்
ஆபத்தானவர்களா?
ஏன் ....ஏன் அப்படியொரு வேண்டுதலை
வள்ளலார் இறைவனிடம் வைத்தார்.?
அவர்கள் உறவு வேண்டாம் என்று
விலகி ஓடும் அளவுக்கு அவர்கள்
கொடுமையானவர்களா?
வள்ளலாரின் வரிகள் துரத்தத் துரத்த
தேடல் அதிகமாகியது
அப்படியானால்...
உள்ளம் நினைப்பதை உதடு
பேசாது என்பதைத்தான் இப்படி சொல்லியிருப்பாரோ?
இருக்கலாம்.
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா?
இதைத்தான்,
"கண்டு ஒன்று சொல்லேல்"
என்று ஔவையும் சொல்லியிருப்பார்.
முகத்திற்கு முன்னால் ஒன்றும்
பின்னால் வேறு மாதிரியும் பேசும் பண்பு
கொண்டோர் நிறைந்தது இவ்வுலகு.
பேசினால் பேசட்டும்.
நாம் பாட்டுக்கு நம்வழியே
செல்ல வேண்டியதுதான்.
அவர்களால் நமக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்
போகிறது
என்று இருக்கவும் முடிவதில்லை.
அப்படி நினைத்து எளிமையாக கடந்து
போய்விடக் கூடாது.
அவர்களால் எந்த நேரத்திலும்
எந்த வடிவிலும் ஆபத்து வரலாம்.
அவர்கள் நாகப்பாம்பை ஒத்தவர்கள்.
நாகப்பாம்பு எந்த நேரத்தில் கடிக்கும்
என்று சொல்ல முடியாது.
அது போன்றவர்கள் நல்லவர்கள் போல
நடித்துக் கொண்டிருப்பவர்கள்.
இப்படி நாகப்பாம்பை நம்கண்முன்
இழுத்து வந்து நிறுத்தி அச்சப்பட
வைத்திருக்கிறார் ஒருவர்.
இப்படி நாகப்பாம்போடு வந்து அச்சப்பட வைத்தவர் யார்?
யாராய் இருந்தால் என்ன?
என்ன சொல்லியிருக்கிறார் என்பதைக்
கேட்போம் வாருங்கள்.
இதோ அவர் உங்களுக்காகப் பாடிய பாடல்...
"நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம்
கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு
நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர்
கரவார்
கரவிலா நெஞ்சத்தவர்
மூதுரை பாடல் : 25
நஞ்சுள்ள நாகப்பாப்பு தான் இருக்கும்
இடத்தை மறைத்துப் புற்றுக்குள்
மறைந்தே வாழும்.
ஆனால் அதிக விஷம் இல்லாத நீர்ப்பாம்பானது
எந்தவித அச்சமும் இல்லாமல்
தண்ணீரில் பலர் காண
நீந்தித் திரியும்.
அதுபோல
வஞ்சகர்கள்
மனதில் உள்ளதை வெளிப்படையாகப்
பேச மாட்டார்கள்.
அவர்கள் நாகப் பாம்பை போன்று
மனதில் உள்ளதை மறைத்து
வெளியில் நல்லவர் போல தங்களைக்
காட்டிக் கொள்வர்.
ஆனால் வஞ்சகம் இல்லாதவர்கள்
எதையும் மனதில் மறைத்து வைத்துப்
பேசுவதில்லை.
வெளிப்படையாகப் பேசுவர்.
அதாவது நீர்ப்பாம்பு
பலரும் அறிய வெளிப்படையாகச்
சுற்றித் திரிந்து போல அவர்கள் பேச்சில்
எந்தவித
ஒளிவு மறைவும் இருக்காது.
வஞ்சகர்கள் விஷமுள்ள நாகப் பாம்பைப்
போன்றவர்கள். நல்லவர்கள் நீர்ப்பாம்பைப்
போன்றவர்கள்.
நாகப்பாம்பு கயவர்களுக்கும்
நீர்ப்பாம்பு நல்லவர்களுக்கும் உவமையாகச்
சொல்லி நம்மை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் யார் என்று இப்போது
கேட்கிறீர்களா?
எல்லாம் நம் ஔவையார்தான்.
வெளிப்படையாகப் பேசுபவர்களை விட
மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசாதவர்கள் ஆபத்தானவர்கள்.
அப்படிப்பட்ட
மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று அழகாக சொல்லித் தந்துவிட்டார் ஔவை.
இனி கவனமாக நடந்து கொள்வது
நம் கையில்தான் இருக்கிறது.
".....கரவுடையார் தம்மைக் கரப்பர்
கரவார்
கரவிலா நெஞ்சத்தவர்"
அருமையான வரிகள் இல்லையா?
Comments
Post a Comment