சித்திரமும் கைப்பழக்கம்

சித்திரமும் கைப்பழக்கம் 


ஒரு செயலை நாளும் செய்தால் அது

பழக்கமாகிப்  போகும்.  பழக்கம்  

தொடர்ந்து நடைபெற்றுக்  கொண்டே 

இருந்தால் அது நாளடைவில் 

வழக்கமாகிவிடும்.

பழக்கம் என்றாலே பழகுதல் ,

பயிற்சி செய்தல் என்பதுதான் பொருள்.


அப்படியானால் பழக்கம் என்பது கற்கும் 

செயல் என்றுதான் கொள்ள வேண்டும்.

பழக்கத்தின் தொடர்ந்த நிலையே பழக்கவழக்கம்.

பழக்க வழக்கம் நாளடைவில்  மரபாக

கடைபிடிக்கப்படும் ஒரு செயலாக மாறிவிடுகிறது.


பழக்கம் இல்லாவிட்டால் எந்த செயலையும் 

எளிதாகச் செய்ய முடியாது.

பிறந்த கன்று எழும்பி நடக்க முயற்சி செய்யும்.

கால்கள் தடுமாறி கீழே விழும். 

நடப்பதற்கான முயற்சி எடுத்துக் கொண்டு

நடக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறது.    

 

சைக்கிள் ஓட்ட வேண்டுமா....

பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி 

எடுத்துக் கொள்கிறோம்.

சமையல் செய்யும் கலையும் பழக்கத்தால் 

வாய்க்கப் பெறுவதுதான்.

பயிற்சி என்கிறோமே அதுதான் பழக்கம்

என்பது இப்போது புரிந்து போயிருக்கும்.

நீச்சல் பழகிக் கொண்டால் எவ்வளவு 

ஆழமான கிணற்றிலும் நீந்த முடியும்.


பள்ளியில் அன்னா ஆவன்னா எழுத 

எத்தனைமுறை எழுதி எழுதிப் பழகி இருப்போம்.

தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து 

அலுங்காமல் குலுங்காமல் நடப்போமே 

அது பிறந்தது முதலே நமக்குத் தெரிந்த ஒன்ற இல்லையே.

எல்லாம் ஒரு பயிற்சியால் வந்ததுதான். பயிற்சியும் முயற்சியும்

இருந்தால் வெற்றி சாத்தியமாகும்.   


ஏதாவது ஒரு தொழில் செய்ய பயிற்சி வேண்டும்.

பயிற்சி தொடர்ந்து நடைபெற்றால் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி விடலாம். 


 ஆனால் குணத்திற்கு பயிற்சி சாத்தியமா?


அது முடியாது என்கிறார் ஔவை.

எவற்றை எல்லாம் பழக்கப்படுத்திக்கொள்ள 

முடியும் என்று சொன்ன ஔவை பிறவிக் குணத்தால்

வாய்க்கப்பெறுவனவும் சில உண்டு என்கிறார்.

         

                     

      " சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

 கொடையும் பிறவிக் குணம் "


என்று  கூறுகிறார்.

சித்திரம் வரைய வேண்டுமா

நாளும் நன்றாக வரைந்து பாருங்கள்.

நல்ல தமிழ் பேச வேண்டுமா

சொற்களை அதன் உச்சரிப்புக்கு

ஏற்றபடி நாளும் சொல்லிச் சொல்லி  பழகுங்கள்.

கல்வி கற்க வேண்டுமா

திரும்ப திரும்ப படித்து மனப்பயிற்சி    

எடுத்துக் கொள்ளுங்கள்.

நல்ல பழக்க வழக்கங்களைக் 

கற்றுக்கொள்ள வேண்டுமா

அவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

எல்லாவற்றையும் பழக்கத்தால் ஏற்படுத்திக் 

கொள்ளலாம்.

இவை எல்லாம் பழக்கப்படுத்தி க் கொள்வதால் வரும்.

ஆனால் நட்பு , இரக்கம், கொடை போன்ற 

 நற்பண்புகள் அவரவர் பிறவிக் குணம். 

அதனைப் பழக்கத்தால் ஏற்படுத்திவிட முடியாது

என்கிறார் ஔவை. 


வள்ளல் தன்மை என்பது இயல்பாகவே 

ஒருவரிடம் இருக்கக்கூடியது.  இயற்கையாகவே 

ஒருவரிடம் அமைந்த குணம்தான்

பிறவிக்குணம் என்கிறார் ஔவை.

பிறவியிலேயே வருவதுதான் தயாளகுணம்

என்னும் நற்பண்பு.

 

இரக்கம் மனதில் இருந்தால்தான்

கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழும்.


எல்லா செல்வந்தர்களுக்கும் ஈயும் பண்பு

வந்துவிடுவதில்லை.

ஒரு சிலர் மட்டுமே கொடுக்கும் பண்பு உள்ளதற்குக்

காரணம் பிறவிக்குணம்தான் என்கிறார்

ஔவை.


சித்திரம் கைப்பழக்கத்தால் வரும்.

ஆனால் நட்பும் தடையும் கொடையும்

பிறவிக் குணத்தால் வருவது.

அருமையாகச் சொல்லியிருக்கிறார் இல்லையா?


     

      

              

      

          


Comments