பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் 


வீரம் விளை நெல்லை சீமையில்

வீசு பொருநைத் தென்றல் நடக்கும்

வீதியெங்கும் சில்வண்டு 

வீவீயென மெட்டிசைக்கும்

 எழில் நகர் இலவங்குளத்தில்

வீச்சறுவாள் மீசை மிடுக்கு நாயகன் 

ஐயா சவரிமுத்து நாடார் 

பாக்கியம் அம்மாள் இணையர் 

மெத்தை மடியில் முத்தமிழ்ப் பயில

முகம் பார்த்துத் தாலசைத்தார்

நாயகன் மார்கண்டேய தாசன் !



அமைதியான நதியின் ஓடமாய்

 உமாவோடு நடந்தது நல்வாழ்க்கை

 பிள்ளை இருவர் கிடைத்த நல்வரம்

கோநகர் மும்பையின் அடையாளம்

கொள்கை பிடிப்பில் தனியாழம்

தாய்த் தமிழின் சுவையாழம்

தரணியெங்கும் தமிழ்தான் ஆளும்

தணியாக் காதல் தமிழோடு நாளும்

தமிழ் வளர்க்க வேண்டுமென்ற தாகம்

தமிழ்ச் சங்கமாய்ப் பாண்டூப்பில் உதயம்!




அறப்பணி பொதுப்பணி நலப்பணி

ஆசிரியப்பணி  எப்பணி ஆற்றிடினும்

களப்பணியாளன் என்பெயர்

கணினியின் பதிவாய் 

கற்றவர் கற்பவர்  நினைவாய்

கல்மேல் எழுத்தாய்க் 

காண்பவர் உச்சரிப்பாய் 

கவனம்கொள் நிலைக் களனாய் 

கருத்தியல் உருவாகிட வேண்டும் என்ற

கனலும்  அனலாம் மந்திரம் கனன்றிட

கடினஉழைப்பின் அடையாளமாயினார் தாசன்!



உழைப்புக்கு ஏது எல்லை?

உரைத்தவர் எவரோ 

ஓய்வு என்ற சொல்லை

ஓயா அலைக்கு விடுமுறை இல்லை

உழைப்புக்கு எல்லைக்கோடு வரைபவரில்லை

உழைப்பாளிக்கு வானமே எல்லை

களப்பணிக்குத் தடையிடுவார் எவருமில்லை

கனவுகள் நனவாகும் 

கவின்மிகு நாட்கள் 

தொலைவில் இல்லை

கடவுள் அருளோடு நடத்துக செயலை!


                        -  செல்வபாய் ஜெயராஜ்









                   


           

          

Comments