உழைப்பாளி
"உழைப்பாளி
"சுயம்பு...சுயம்பு"
சுயம்புவ எங்கங்க?
எல்லாரும் சாப்பிட்டுட்டு எழும்பிட்டாவ.
இன்னும் சுயம்புவ காணோம்"
கண்கள் தோட்டத்திற்குள் வெகுதூரம் வரை தேடியபடி
கணவனிடம் கேட்டாள் பாக்கியத்தம்மா.
"வருவான்... வருவான்.
நீ சாப்பிட்டியா?
முதல்ல நீ சாப்பிடு "
"சாப்பிடுவேன். சுயம்பு வந்துட்டான்னா அவனுக்கும் சோறு போட்டு கொடுத்துட்டு
கையோடு சாட்பிட்டுருவேன்.மணி ரெண்டு ஆகப்போகுது இன்னும் சாப்பிட வராம
அவன் அங்கே என்ன செய்றான்?"
"வரப்ப வெட்டிட்டு நின்னான்.
மண்வெட்டிய கீழ்ப் போட்டுட்டு வான்னேன்.
வாரேன்னான்...
அவன் என்னைக்கி ஆளோட இருந்து சாப்பிட்டுருக்கான்?"
"தேரம் ஆவுது...ஒரு எட்டு போய் பார்த்து
கூப்பிட்டுட்டு வாரேன்"
"இந்த வெயிலுல நீ எங்க போறா?
அந்த தென்ன மரத்துக்கு கீழ் செல்லபாண்டி
பய படுத்து கிடக்கான். அவனப்போயி கூட்டிட்டிட்டு வர சொல்றேன். நீ இலையில சோற போட்டு வை"
"வேண்டாம். முதல்லேயே
சோறு போட்டு வச்சா.சோத்துல தூசுகீசு விழுந்துடும் ....அவன் வரட்டும்.
போட்டு கொடுக்குறேன்"
"ஏல...செல்லப்பாண்டி அந்த சுயம்புவ ஒரு எட்டு போய் பார்த்து கூட்டிட்டு வா...
இங்க உங்க முதலாளி அம்மா சாப்பிடாம
உனக்காக காத்திருக்காவன்னு சொல்லி உடனே அவன கூடியா"என்று கத்தினார் மணி அண்ணாச்சி.
"சரி அண்ணாச்சி "என்றபடி..கீழ விரிச்சிருந்த துண்ட தூக்கி தோளுல போட்டுட்டு வாழைக்கு வெட்டுற வயல நோக்கி ஓடினான் செல்லப்பாண்டி.
பாக்கியத்தம்மா அங்கேயே பார்த்துக்கொண்டு நின்றார்.
"அங்க என்ன பாத்துகிட்டு நிக்கா..
அவன் வருவான்..நீ கொஞ்சம் போல தண்ணி
தா.. இந்த அனலுல சுடு சோறு தின்னது நாக்கு வறளுற மாதிரி இருக்கு"
"சவத்துப் பய... மாடு மாதிரி உழைக்கக் தான் தெரியுது. ஒரு கூறு கிடையாது"
என்று சொல்லியபடியே தண்ணீர் செம்பை கொண்டு வந்து நீட்டினார் பாக்கியத்தம்மா.
"கூறு இருந்தாதான் பொண்டாட்டி கூட
இருந்துருப்பாள....தின்கதான்தான் தெரியும் வயித்தாளிப் பயலுக்கு"
"நீங்கவொண்ணு...ஆ...ஊன்னா
அவன் பொண்டாட்டி கதைய இழுத்துருவிய
பேசாம இருங்க..யார் தலையில
என்ன எழுதியிருக்கோ.. அதுதான் நடக்கும்
சும்மா இருங்க "
"உண்மையதான சொன்னேன்..
உனக்கு ஏன் பொசுக்குன்னு கோவம் பொத்து கிட்டு வருது?"
"கோவம் ஒண்ணும் வரல...இல்லாதவன்னா எதுவும் பேசலாமா...
அந்தத் திமிர் பிடிச்சவளுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் ..போயிட்டான்னா
அதுக்கு இவன் என்ன செய்வான்?
வாய பொத்துங்க...வாரான் கேட்டா வருத்தப்படப் போறான்"
"துரைக்கு சோறப்போடு..."என்றபடி
தென்னமரத்துக்குக்கு கீழ் கிடந்த
கட்டுலுல தலைய சாச்சார் மணி அண்ணாச்சி.
சுயம்புவ பார்த்ததும் "ஏல...எத்துன நாளு சொல்றது? ஆளோடு வந்து சாப்பிட்டுட்டு போன்னு"
"மன்னிச்சுகிடுங்கக்கா...அந்த வரப்பு வெட்டுவது கொஞ்சம் கொற கெடந்தது.
கையோடு வெட்டி முடிச்சிட்டு வந்துறலான்னு பாத்தேன்.அதுதான் தேரமாயிட்டு...
நீங்க சாப்பிட்டேளா"
"நான் சாப்பிடுவது இருக்கட்டும்...
நீ வேனா வெயிலுல வேல செய்துட்டு பசியோடு வந்துருப்பா.....பேசிட்டு நிக்காம
அந்தத் தொட்டியில கைய
கழுவிட்டு இலய எடுத்துட்டு
வந்து உக்காரு."
"சரிக்கோ...?" என்றபடி
கை கால் முகமெல்லாம் கழுவிட்டு
தலையில் கட்டியிருந்த துண்டை உருவி
உதறியபடி முகத்தைத் துடைத்தான்.
மண் சரசரவென்று விழுந்தது.
அது எதையும் கண்டுகொள்ளாதபடி
ஒரு இலையை எடுத்துப் போட்டுட்டு உட்கார்ந்தான்.
அகப்பையில் எடுத்தால் கொஞ்சமாக வரும் என்று ஒரு தட்டை எடுத்து சோறு
அள்ளிப் போட்டார் பாக்கியத்தம்மா.
மூன்று தட்டு எடுத்துப் போட்டதும் "போதுங்கக்கோ.... சாப்பிட்டுட்டு வாங்கிக்கிறேன்"
என்றான் சுயம்பு.
"கூட்டாஞ்சோறு நல்லா இருக்குல...
கூச்சப்படாம வாங்கிச் சாப்பிடு"
"சுயம்பு என்னைக்கு கூச்சப்பட்டுருக்கான்...?
என்றார் மணி அண்ணாச்சி.
"நீரு இன்னும் உறங்கலையாக்கும்.
சும்மா கெடவும்...எப்ப பாரு எடக்கு மடக்கா
பேசி கிட்டு...வேலை செய்ற பிள்ளை
இரண்டாப்பை சோறு கூடத்தான் திங்கும்"
என்று சுயம்புக்காக பரிந்து பேசியபடியே பாக்கியத்தம்மா சொம்புல தண்ணி கொண்டு வந்து பக்கத்துல வச்சார்.
சுயம்பு படக்கென்று சொம்பை எடுத்து
மடக்கு மடக்கென்று குடிக்க,
இதுவரை ஏல..ஏல என்ற பாகியத்தம்மா
"தம்பி ...சொம்பை கீழ வை..
இப்படி தண்ணி குடிசேன்னா எப்படி சாப்பிடுவ...முதல்ல சோற தின்று முடி.
கடைசில தான் தண்ணி குடிக்கணும்
தெரியுதா" என்று கரிசனமாக
சொன்னார்.
சுயம்பால் வாயைத் திறந்து பேச முடியல...
கண்கள் பாக்கியத்தம்மாவை ஒரு ஏக்கத்தோடு பார்த்தன.
"ஏன் அப்படிப் பார்க்குற...
ஏதும் தப்பா சொல்லிட்டேனா"
என்ற பாக்கியத்தம்மாவுக்கு
தலையாட்டியபடியே இல்லை என்று
பதிலளித்தான்.
நெஞ்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது.
அடுத்த உருண்டை சோறு எடுத்து
வாய்க்குள் வைக்குமுன்னே தொண்டைக்குள் ஏதோ உருண்டு
கொண்டு வந்தது.
உதடுகள் அழுவதற்கு ஆயத்தமாக
துடித்துக் கொண்டிருந்தது.
மனசு நாலு வருடங்களுக்கு பின்னால்
இழுத்துக் கொண்டு விட்டு
விளையாட்டு காட்டியது.
சோறு...சோறு...சோறு..
இந்தச் சோறு சுயம்புவுடைய வாழ்க்கையோடு
எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறது.
"அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்...
ஒவ்வொருத்தன மாதிரி வேல வெட்டிக்கு
போகாம வீட்டுலேயா மொடங்கி கிடந்தேனா
இல்ல கூலியை வீட்டுல கொடுக்காம
குடிச்சு அழிச்சேனா...
கூட இரண்டு ஆப்ப சோறு தின்பது
தப்பா..."
உரையாடல் உள்ளுக்குள்
வெப்பமாக வந்து வாய்வழியாக வெளியேறியது.
ஏன்...அவள் என்னை விட்டுட்டு ...
ஓடுனா.."
கண்களிலிருந்து கண்ணீர் கைகளில் விழுந்து சோத்தின்மேல் சிதறியது.
தாய் செத்த பிறகு சோறு பொங்கி கொடுக்க
ஆளு இல்லன்னுதான்
ஒரு கலியாணத்த பண்ணி வச்சா
அவன் அக்கா.
பொண்ணு முன்ன பின்ன தெரியாதவதான்.
ஆனா அவளும் ஒரு சம்சாரி வீட்டுப் புள்ளதான்னு சொன்னாவ...
அவ ஒரு உழைப்பாளி சாப்பிடுற
சோத்த காரணம் காட்டி ஓடுவான்னு அவன் அக்காளும் நினைக்கல...
ஒரே மாசத்துல ஒரு வயித்தாளிப் பயகூட
என்னால வாழ முடியாதுன்னு கேவல படுத்திட்டு போயிட்டா.
வேறு என்ன சொல்லிட்டு
ஓடியிருந்தாலும் மனசு இந்த அளவு வலிச்சுருக்காது.
ரொம்ப சோறு தின்கிறான்
பொங்கி போட முடியாது என்று சொல்லிட்டு ஓடிப் போயிட்டத நினைச்சு ரொம்ப
உடைந்து போயிட்டான்.
இதற்கு மேல் ஒரு வாய் சோறு கூட
தின்ன முடியாது என்ற நிலை.
ஆனால் சோத்த தூர போட மனம் வரல
என்ன செய்ய..பிசைந்து கொண்டே இருந்தான்.
இன்னும் ஒரு ஆப்ப சோறு
வைக்கட்டுமா என்று கிட்ட வந்த பாக்கியத்தம்மா
"இந்தா..
இந்த தூக்குவாளில சோறு இருக்கு.
ராத்திரிக்கு சோறு இருக்கு . கொண்டு போய் சாப்பிடு "என்று தூக்கு வாளியைப்
பக்கத்தில் வைத்தபடி இலையைப் பார்த்தார்.
.
"இன்னுமா சாப்பிடல...."
'இல்லக்கா...ஏனோ சோறு இழுக்கமாட்டேங்குது..."
"ஏன்...உடம்புகிடம்பு சரியில்லையா "
"அப்படி எல்லாம் இல்லக்கா"
"அப்புறம் அம்மாவ நினைச்சிட்டியா..?"
சுயம்புவால பதில் சொல்ல முடியல.
"சாப்பிடு...சோத்த முன்ன வச்சுகிட்டு என்ன ரோசன...அவள நினைச்சுட்டியா....விடு சவத்துப் பய புள்ள போனா போகட்டும்...
நீ சாப்பிடு " முதுகில் தட்டிக்கொடுத்து
ஆறுதல் படுத்தினார் பாக்கியத்தம்மா.
பாக்கியத்தம்மா கை பட்டதும் அம்மாவின் நினைவு வர பொலபொலன்னு கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
"எதுக்குல அழுவுறா... யாரும் இல்லன்னு நினைக்குறியா..
அந்த கழுத போனா போகட்டும்
நாங்க இல்ல உனக்கு...
பாக்கியத்த உங்க அம்மாவா
நினைச்சி
தைரியமா இரு" என்றபடி மணி அண்ணாச்சி யும் எழும்பி வந்து கையைப் பிடித்தார்.
வேல செய்துவிட்டு
வயித்துக்கு சோறு திங்க முடியாம
முதலாளி கையைப் பிடித்து விம்மி விம்மி அழுதான் சுயம்பு.
சுயம்பு...சுயம்பு"
Comments
Post a Comment