உன்னோடு வாழ்தல் அரிது

உன்னோடு வாழ்தல் அரிது



"வாய் வாழ்த்துகிறதோ இல்லையோ

வயிறு வாழ்த்தும்'"

 என்பது பழமொழி.


வயிறார உண்டால் 

மனமார வாழ்த்து வரும்.


"எண்சாண் உடம்புக்கு

சிரசே பிரதானம்

என்ற நிலை மாறி

எண்சாண் உடம்புக்கு 

ஒரு சாண் வயிறே பிரதானம்" என்ற

நிலைக்கு வந்து விட்டோம்.


வயிற்றுக்காகத்தானே இந்த

ஓயா உழைப்பும் ஓட்டமும்.


அன்றொரு நாள் ...

நடந்த களைப்பு தீர 

ஒரு மரத்து நிழலில் அமர்ந்திருந்தார் ஔவை.


நாவறள 

கண்கள் கானல் பின்னால் ஓட

வயிறு தா தா என்று 

தாவா நடத்த

காது கருங்குயிலின்

கானம் கேட்க 

தடாயிட்டு மறுத்து 

மல்லுகட்டி நிற்க

ஏன் ஏனென்ற கேள்வியோடு

மனசு பதில் கேட்டு நிற்க

உன்னாலே எல்லாம் உன்னலே

வயிறே 

உன்னாலே

எல்லாம் உன்னாலே


ஒருநாள் ஒழியென்றால்

ஒழியாய்

இருநாளுக்கு ஏல் என்றால்

ஏற்க மறுக்கிறாய்

என் நோவறியா

 வயிறே!

உன்னாலே 

எல்லாம் உன்னாலே


கூழுக்குப் பாடிய 

கூனக்கிழவி என்றார் 

கூனிக்குறுகிப் போனேன்

உப்புக்கும் புளிக்கும் பாடுவேனென

 ஒப்புதல் வாக்குமூலம் அளித்து

மனதை ஆற்றியிருந்தேன்

வயிறே!

உன்னாலே 

எல்லாம் உன்னாலே


நாளும் துன்பம் தரும்

என் வயிறே

உன்னோடு வாழ்தல்

எனக்கினி அரிது

உன்னாலே 

எல்லாம் உன்னாலே


உள்ளுக்குள் கனன்று 

கொண்டிருந்த ஔவையின்

உதடுகள் விரிய

பாடலொன்று என் 

காதுவரை வர

வறுமையிலும் 

சொல் வளமை

கண்டுவந்தேன்

இசைவாய் இங்கே

கொண்டுவந்தேன்



பாடல் இதோ உங்களுக்காக...



"ஒருநாள் உணவை ஒழியென்றால்ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர்என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது. "


‌                 நல்வழி பாடல்: 11


என் வயிறே! இன்று உணவு கிடைக்கவில்லை. இன்று ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடாமல் இரு என்று சொன்னால் இருக்கமாட்டேன் என்கிறாய். 

 இன்று நிறைய உணவு கிடைத்திருக்கிறது. இரண்டு நாளைக்குச் சாப்பிட்டுகொள் என்று சொன்னாலும் சாப்பிடமாட்டேன் என்கிறாய். உணவுக்காக  ஒவ்வொரு நாளும் நான் படும்பாட்டை அறியாதிருக்கிறாய்.

எனக்கு மேலும்  மேலும் துன்பத்தைக் கொடுக்கும்

 வயிறே!  உன்னோடு என்னால் இனி

நிம்மதியாக வாழவே முடியாது "

என்கிறார் ஔவை.


உன்னாலே எல்லாம் உன்னாலே

வயிறே 

உன்னாலே எல்லாம் உன்னாலே


இதயம் கனக்கிறது இல்லையா?


இதனால்தான்,

"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்"

என்று ஔவை சொல்லியிருந்தாரோ? 



ஏலென்றால்- ஏற்றுக்கொள் என்றால்

இடுப்பை - துன்பம்

அரிது-  கடினம்(எளிதானதல்ல)


Comments