இலக்கை நோக்கி....

  இலக்கை நோக்கி.....

இலக்கு இல்லாத பயணம்
துடுப்பு இல்லாத படகு சவாரி போன்றது.

தடுமாறிப் போவோம். 
தலைகீழ்க் கவிழ்ந்து போவோம்.

எங்கே போக வேண்டும் என்று
தீர்மானிக்காமல் பயணத்தைத் 
தொடங்க முடியாது.

போக வேண்டிய இடம் எது என்பது
முடிவு செய்யப்பட்டால்தான் பயணத்திற்கான
அடுத்தக்கட்ட  முயற்சிகளை மேற்கொள்ளமுடியும்.

ஒரு இலக்கை நிர்ணயிக்கும் முன்னர்
பயணத்தைத் தொடங்குவது எந்த ஊருக்குச்
செல்ல வேண்டும் என்பதே தெரியாமல்
பேருந்தில் ஏறி உட்கார்ந்திருப்பதற்கு 
ஒப்பாகும்.

உட்கார்ந்த பின்னர் இந்தப் பேருந்து 
எந்த ஊருக்குப் போகுதோ அந்த ஊருக்கு
ஒரு பயணச்சீட்டு தாருங்கள் என்றா கேட்பீர்கள்?

வேடிக்கையாக இருக்குதல்லவா!
முதலாவது நாம் எங்கே போக வேண்டும்
என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பேருந்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது.

ஒரு தாத்தா  ஒரு ஊருக்குப் போவதற்காக
பேருந்தில் ஏறிவிட்டார்.

"பேருந்தில் ஏறிய பின்னர் எந்த ஊருக்கு
போகணும் என்று பயணச்சீட்டு
கேட்க வேண்டும்?"
நினைத்து நினைத்துப் பார்க்கிறார்.
 ஊர் பெயர் நினைவுக்கு வரவே  இல்லை.
 
நடத்துநர் வந்து "எங்கே
போகணும் பெரியவரே  "என்று 
கேட்கிறார் 
அப்போதும் தாத்தாக்கு நினைவு வரவில்லை.

உடனே சட்டென்று "கொழுந்தியார் வீட்டிற்குப்
போகணும்" என்றார் தாத்தா.

"அதை நான்  கேட்கவில்லை .எந்த ஊருக்குப்
போகவேண்டும்" என்று சிரித்தபடியே
கேட்டார் நடத்துநர்.

"கொழுந்தியார் வீட்டுக்குத்தான் தம்பி
போகணும் " அப்பாவியாகக் கூறினார்
தாத்தா.

"கொழுந்தியார் வீட்டுக்குப் போங்க பெரியவரே. 
நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.
.ஊரைச் சொன்னால்தானே
இந்தப் பேருந்து உங்க கொழுந்தியார்  ஊருக்குப்
போகிறதா என்று என்னால்  சொல்ல முடியும்?"
என்று விளக்கினார்
நடத்துநர்.

"கொழுந்தியார் வீட்டுக்குத்தான்
வீட்டுக்காரி போயிட்டு வரச் சொன்னா....."
தாத்தா மறுபடியும் வீட்டில் பாட்டி
சொன்ன வார்த்தையில் இருந்து
தொடங்கினார்.

"ஐயோ...தலையைப்  பிச்சுடலாம் போல்
இருக்கு..எண்ணே வண்டியை நிறுத்துங்க...."
என்று ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்தச்
சொன்னார் நடத்துநர்.

பேருந்து நிறுத்தப்பட்டது.
அனைவரும் எழும்பி தாத்தாவையே
பார்க்க ஆரம்பித்தனர்.

தாத்தா ஊர் பெயர் தெரியாமல்
திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார்.

இப்போது ஓட்டுநர் தாத்தா
அருகில் வந்து,
"பெரியாள் ...எங்க போகணும்"
.என்று கேட்டார்.

"நம்ம கொழுந்தியார் வீட்டுக்குத்தான் 
தம்பி " என்றார்
தாத்தா மறுபடியும்.

ஊர் பெயர் தெரியாமல் வண்டியில்
ஏறி இருக்கும் வயதானவரை எங்கே இறக்கி
விடுவது?
வயதானவரை நடுவழியிலும் இறக்கிவிட
முடியாது.

"புறப்பட்ட இடத்திலேயே கொண்டு விட்டுவிடுங்கள் "
என்று அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

"வீட்டில் போய் எந்த ஊருக்கு போக
வேண்டும் என்று கேட்டுவிட்டு வாங்க "
என்று சொல்லி ஏறின இடத்திலேயே
இறக்கி விட்டுவிட்டுச் சென்றனர்.

ஒரு சாதாரண பயணத்திற்கே
ஊர் தெரியாவிட்டால் போய்ச்
சேர முடியாமல் போய்விடும்.

செல்ல வேண்டிய ஊர் முடிவு 
செய்யாமல் பயணம்
புறப்பட்டால்....
இப்படித்தான் ஏடாகூடாவாக
ஏதாவது நிகழ்ந்துவிடும்.

ஊரை முடிவு செய்துவிட்டால்
பயணம் பற்றிய மற்ற தகவல்களைத்
திரட்டலாம்.

அந்த ஊருக்குப் போவதற்கான பயணச் செலவு, 
எவ்வளவு  நேரம் ஆகும்?
போய் எங்கே தங்குவது ?
என்னென்ன எடுத்துச் செல்வது ?
என்று எவ்வளவோ யோசிப்போம்.
இந்தப் பயணம் நமக்குச் சாத்தியப்படுமா...
உடல்நிலை ஒத்துக் கொள்ளுமா...
என்ற கேள்விகளும் கூடவே எழும்.

சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்.
முதலாவது நமது தேர்வு இடமாகத்தான் இருக்கும்.
இடத்தைத் தேர்வு செய்து விட்டால்...
அடுத்தது நமது பயணம் அந்த இடத்தை 
நோக்கியதாகவே இருக்கும்.

எங்கே போகணும் என்ற முடிவு எடுத்துவிட்டாலே 
பாதி  பாதை தெரிந்துவிடும்.

சாதாரணமாக ஒரு ஊருக்குப் புறப்படுவதற்கே
இத்தனை கரிசனம் தேவைப்படுகிறது. 

வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக அமைய
இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டாமா?

இலக்கை நிர்ணயித்து வைத்துவிட்டுப்
பயணத்தைத் தொடங்க வேண்டும்.

இந்த ஆண்டில் உங்கள் இலக்கு....
ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.....
தோட்டம் வாங்க வேண்டும் என்பதாகக்கூட
இருக்கலாம்....
தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமாக
இருக்கலாம்....
நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும்
என்ற குறிக்கோளாக இருக்கலாம்...
போட்டித் தேர்வுகள் எழுதி
அரசாங்க வேலைக்குச் செல்வது மட்டுமே
நோக்கமாக இருக்கலாம்....
இப்படி ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து
வைத்துவிட்டு அதை நோக்கிய ஓட்டத்தைத்
தொடங்குங்கள்.

 உங்கள் முழு சிந்தனையும் எப்போதும்
அந்த இலக்கை நோக்கியதாவே 
இருக்கட்டும்.

இப்போது நாம் ஒன்றை நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும்.

நமது இலக்கு சாத்தியப்படக் கூடியதாக
இருக்க வேண்டும்.

என்னால் முடியும் என்று நமது
அறிவுக்கு எட்டாத...நமது திறனுக்கு
அப்பாற்பட்ட ஒன்றை இலக்காக
நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது.

ஆசைப்படலாம் ...ஆனால் பேராசையாகிப்
போனால் எதுவும் கைகூடாமல் போய்விடும்.

உங்கள் சிந்தனைக்கு , திறனுக்கு ,
பொருளாதாரத்திற்கு,
குடும்பச் சூழலுக்கு ஒத்துப் போகக்கூடிய
இரண்டு மூன்று திட்டங்களைக் கையில் எடுத்து
சாதக பாதகங்களை ஆராய வேண்டும்.

யாரையும் சார்ந்திராமல் நம் 
முயற்சியால் அடையக்கூடிய
இலக்கை மட்டுமே நிர்ணயித்துக் 
கொள்ள வேண்டும்.
தன் கையே தனக்கு உதவி.
பிறரைச் சார்ந்து எடுக்கப்படும்
எந்த செயலும் பெரிதாக 
வெற்றியைக் கொடுத்துவிடாது.

இப்போது இலக்கை நிர்ணயித்துக்
கொண்டீர்களல்லா!

இலக்கு உங்கள் அறிவையும் திறனையும்
ஒருமுகப்படுத்தி உங்களை 
 அதை நோக்கிய ஓட்டத்திற்கு
 தயார்படுத்திக் கொண்டே இருக்கும்.
 
எவ்வளவு நாட்களுக்குள்  நமது இலக்கை
அடையவேண்டும் என்பதைப் பற்றிய
கால அளவு நிர்ணயித்துக் கொள்வது
அவசியம். 
காலத்தை நிர்ணயித்துக்கொண்டு
செயலில் இறங்குவது
இன்னும் அதிக வேகத்தைக் கொடுக்கும்.

 ஒவ்வொருநாளும் நாம் எத்தனை அடி எடுத்து 
வைத்தால் குறிப்பிட்டக் காலத்திற்குள் 
அந்த இலக்கை அடைய முடியும்  என்று
மனம் ஒரு கணக்குப் போட்டு
வேலை செய்ய வைக்கும்.

வெறுமனே இலக்கோடு
நின்றுவிடக் கூடாது.

 திட்டமிடல் மிகமிக முக்கியமான ஒன்று. 
ஒரே நாளில் எந்த வெற்றியும் 
வந்துவிடாது.
பல படிகள் ஏறிச் சென்றால்தான்
உயரத்தை அடைய முடியும்.

படிப்படியாக ஒவ்வொரு நாளும்
செய்ய வேண்டியவற்றை
பகுத்து வைத்துக் கொண்டு
செயலில் இறங்க வேண்டும்.
அப்போதுதான் சோர்வில்லாமல்
சலிப்பு ஏற்படாமல் நம் இலக்கை 
அடைய முடியும்.

இடையில் வரும் தடங்கல்களைக் கண்டு
இலக்கை நோக்கிய பயணத்தை
நிறுத்திவிடக் கூடாது.

ஓட்டமும் ஓயா உழைப்பும்
உங்கள் இலக்கை எளிதாக
 எட்டிப்பிடிக்க உந்துசக்தியாக அமையும்.

தன்னம்பிக்கை இழந்து பின்நோக்கித்
திரும்பிப் பார்த்துவிட்டால்
வீழ்ந்து போக நேரிடலாம்.

நாளும் புது வெள்ளப் பாய்ச்சல்
நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

திட்டமிடல், விடாமுயற்சி,
தன்னம்பிக்கை மூன்றும் இருந்தால்
 நாம் நிர்ணயித்த இலக்கை
எளிதில் அடையலாம்.

நம் இலக்கு கைக்கு எட்டும் 
தூரத்தில்தான் உள்ளது.
எட்டிப் பிடிக்கும்வரை ஓயாதிருங்கள்.

புத்தாண்டில் ஓர் இலக்கை நோக்கி
உங்கள் பயணம் தொடங்கட்டும்.

உங்கள் இலக்கு ஈடேறும் நாள்
வெகு தொலைவில் இல்லை.
 வாழ்த்துக்கள்!



Comments

  1. நேர்மறையான கருத்தை அழகாக பதிவிட்டது மிகச்சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts