சுமை

               சுமை

கதவைத் திறந்து மெதுவாக வெளியில்
எட்டிப் பார்த்த நான் படக்கென்று கதவை
சாத்திக் கொண்டு
கதவின் பின்னால் சாய்ந்து நின்று கொண்டேன்.

"என்ன...யாரும் வாராங்களா?.".

பதறியபடி ஓடிவந்தாள்  அக்கா ரமணி.

உஷ்....வாயில் கையை வைத்து
மெதுவாகப் பேசும்படி எச்சரித்துவிட்டு
கதவிடுக்கு வழியாக வெளியிலேயே பார்த்துக்
கொண்டிருந்தேன்.

கையில் ஆளுக்கொரு பையோடு 

பின்னால் நின்றுகொண்டிருந்த

அனைவரும் என்னாயிற்று என்பதுபோல

என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கொஞ்சம் பொறுங்க...கையால்

 சைகை காட்டிவிட்டு கதவிடுக்கு வழியாக

வெளியில் தலையை நீட்டி 

யாராவது வருகிறார்களா என்று நோட்டம் பார்த்தேன்.

அடுத்து நான் என்ன சொல்லப்

போகிறேன் என்று ஒரு கலவரத்தோடு

அனைவரும் என் முகத்தையே 

பார்த்துக்கொண்டு

நின்றனர்.

அம்மா மட்டும் மறுபடியும் ஒருமுறை 

சமையலறைப் பக்கம் சென்று ஏதாவது 

விட்டுவிட்டு வந்தோமா என உறுதி

 செய்வதற்காக உள்ளே சென்றார்.

அப்பா எந்தவித சலனமும் இல்லாமல்

அப்படியே நின்றிருந்தார்.

அவரின் கண்களில் ஏதோ ஒன்றைத்

தொலைத்துவிட்டது போன்ற வெறுமை

 தெரிந்தது.

"சீக்கிரம் பாருடா...நேரம் ஆகிடப் போவுது..".அவசரப்படுத்தினான்

கடைக்குட்டித் தம்பி ரமேஷ்.

அவனுடைய குரலில் சுற்றுலா செல்லும்

சிறுவனின் உற்சாகம் இருந்தது.

கையில் கோலிக்காயோடு சதா ஊர்

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு

 இன்று பேருந்தில் செல்லும் வாய்ப்பு

கிடைத்திருக்கிறது. 

நேற்றிலிருந்தே எப்போ போகணும்..?..எப்போ

 போகணும் என்று கேட்டு நச்சரித்துக்கொண்டே

 இருந்தான்.அந்த மகிழ்ச்சியில்தான் இப்போதும்

 புறப்பட்டு நிற்கிறான்.அறியாப்பிள்ளை...வேறு

எப்படி இருப்பான் ?

பழைய நினைவுகள் என்

நெஞ்சைத் தட்டி 

எழுப்பியது.ஒருமாதத்திற்கு முன்பு

இப்படித்தான் அதிகாலையில் 

எல்லோரும் பெட்டியோடு நின்றிருந்தோம்.

அதிகாலை நேரத்தில் பட்பட்டென்று 

கதவு தட்டும் ஓசை.

அக்கா ரமணிதான்  ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.

கீழத் தெரு மாமா வாசலில் நின்றார்.

அப்படியே எல்லோருக்கும் பேயறைந்ததுபோல்

இருந்தது.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்

கொண்டிருந்தோம்.

அம்மாதான் சுதாகரித்துக் கொண்டு" தம்பி,

என்ன காலையிலேயே வரமாட்டியே ஏதாவது

அவசரமா..?".என்று கேட்டு வைத்தார்.

"அதை எப்படி சொல்ல....நல்லாதான்

தூங்க போனா...திடீரென்று மேல்மூச்சு

கீழ்மூச்சு வாங்கிகிட்டு கிடக்கா..."

என்றார் மாமா மொட்டையாக.

"யாரு..."பதறிப்போய் கேட்டார் அம்மா.

"வேறு யாரு நம்ம அம்மதான்..".என்றார் மாமா.

அவ்வளவுதான் . ஓவென்று ஒப்பாரி வைத்தபடி

 மாமா வீட்டை நோக்கி ஓடினார் அம்மா.

நாங்களும் கையில் வைத்திருந்த பெட்டிகளை

 அப்படி அப்படியே போட்டுவிட்டு அம்மா

 பின்னாலேயே மாமா

வீட்டை நோக்கி ஓடினோம்.

அங்கே...பாட்டி

மேமூச்சு கீமூச்சு வாங்கி இழுத்துகிட்டு 

கிடந்தாங்க.அம்மா ஓவென்று ஒப்பாரி

வைத்துவிட்டு பாட்டி பக்கத்திலேயே

 உட்கார்ந்துவிட்டார்.

பாட்டியை இந்த நிலைமையில் பார்த்துவிட்டு

எங்களுக்கும் எங்கேயும்

 செல்ல மனமில்லை.

அதனால் எங்கள் முதற்பயணம் 

தோல்வியில் முடிஞ்சு போச்சு..

தோல்வியில் முடிஞ்சு  போச்சு என்பதைவிட

 தேதி குறிப்பிடப்படாமல்  ஒத்தி வைக்கப்பட்டது

என்றுதான் சொல்ல வேண்டும்.

நல்லவேளை பாட்டி பிழைத்துவிட்டார்.

கடைசி நேரத்தில் அப்பாவும்

"ஏதோ தடங்கல் மாதிரி இருக்கு.

இன்னும் ஒரு மாசம் இருந்து பார்ப்போம்.

கடவுள் நம்ம தலையில் என்ன எழுதி

வச்சிருக்காரோ...அது நடக்கட்டும் "

 என்று கடவுள் தலையில்

பாரத்தைப் போட்டுவிட்டு உட்காந்துவிட்டார்.

எனக்கும் அப்பா சொன்னதில் ஏதோ

ஒரு உண்மை இருப்பதுபோல் இருந்தது.


ஆனால் அப்பா உடம்புதான்

 பாதியா வத்தி போச்சே தவிர எந்த

வழியும் பிறந்தபாடில்லை.


பாவம் ...எங்க அப்பாவைப்

பார்க்க எனக்கே பாவமா இருக்கு.

ஒவ்வொரு சமயத்துல கடவுள் மேலகூட

கோபம் வந்து "உனக்கு கண்ணே இல்லையா?"

என்று கன்னாபின்னான்னு திட்டிபுடுவேன்.

வேறு என்னங்க செய்ய முடியும்? 

எங்க இயலாமையை கடவுளுகிட்டதானே

காட்ட முடியும்.மனுஷங்க கிட்ட

காட்ட முடியுமா என்ன ?


மழை பொய்த்துவிட்டது.

 காடுகண்ணியில் ஒத்த விளைச்சல்

இல்லை. நாளைக்கு  நல்லது நடந்திடாதா..

நாளன்னைக்கு நல்லது நடந்திடாதா....

என வானம் பார்த்து காத்திருந்ததுதான்

மிச்சம்.

அங்கேயும் இங்கேயும் கடனவுடன வாங்கி

இதுவரை சமாளித்தாயிற்று.

எத்தனை ஆட்களிடம்தான் கடன் வாங்குவது?

கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்க

தோட்டத்திலிருந்து வருமானம் வரணுமே?

கடன் தந்தவங்க  எல்லாம் மூஞ்சு சுழிக்க

ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு சிலர் வாங்கின கடனை திருப்பித் தர

வக்கில்லை என்று முகத்துக்கு நேராக கேட்க

தொடங்கிட்டாங்க.

சாரல் மழை காலத்தில் நாலுத் துள்ளி

போட்டதுதான் மிச்சம்.புழுதி அடங்கினதோடு

சரி. மறுபடி கொஞ்சம் மழை உரப்பா

பெய்தால் உழவு செய்து ஏதோ காட்டுப்

பயிராவது போடலாம்ன்னா

மழை ஒரேயடியாக கீழே விழுவேனா

என்று அடம் பிடிக்குது.

பூமி குளிர ஒரு மழை பெய்தால்

போதும்.

எங்க கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும்.

நானும் அப்பாவுக்கு ஒத்தாசையா

என்னால இயன்றதை செய்வேன்.

நாலு வீட்டுக்கு ஊத்துத் தண்ணி

மொண்டு வந்து கொடுப்பேன்.

ஒரு குடத்துக்கு ஐம்பது காசு கொடுப்பாங்க.

ஏதோ நம்மால முடிஞ்சது ஒரு உப்பு

மிளகாய் வாங்கேயாவது ஆகுமே 

என்றுதான் கீழ்வானம் சிவக்குமுன்னே

குடத்தைத் தூக்கிட்டு ஊற்றுக்கு 

ஓடுவேன். இப்போ எல்லாம் இரண்டு

குடம் தண்ணீர்கூட ஊற மாட்டேங்குதுங்க.

அதுவும் தண்ணீர் கலங்கலா இருக்குன்னு

ஐம்பது பைசா தருவதற்கு முன்னர்

ஆயரம் கேள்வி கேட்பாங்க...

எங்கேயாவது செங்கல் சூளையில்

வேலைக்குப் போகலாம் என்றால்

பதினொரு வயசு பிள்ளைகளை வேலைக்கு

வைக்க மாட்டாவளாம். அப்பாவுக்கும்

நான் வேலைபார்ப்பதில் உடன்பாடில்லை.

"நான்தான் படிக்காமல் மண்ணை நம்பி

வாழ்ந்து ஏமாந்து போனேன். நீயாவது

படிச்சிடணும்பா" என்பார்.

எனக்கும் படிக்கத்தாங்க ஆசை.

புத்தகம்தாராங்க....மதிய உணவு

தாராங்க...சீருடைதாராங்க

எனக்கு ஒரு குறைச்சலில்லை.

என் அப்பா ஒரு வேளை சோறுகூட

சாப்பிடாமல் பட்டினியாய்க் கிடக்கும்போது

எனக்கு எப்படிங்க சாப்பிட மனம் வரும்?

நீங்களே சொல்லுங்க...

ஒவ்வொருநாள் ஆசிரியருக்குத்

கொஞ்சம்போல சோறு ஒளிச்சி

எங்க அப்பாவுக்கு எடுத்துவந்து

கொடுப்பேங்க. அதையும் நீ சாப்பிடாமலா

எனக்கு எடுத்து வந்தாய்? ஆசிரியருக்குத்

தெரியாமல் எதுவும் எடுக்கக்கூடாது

என்று கோபித்துக் கொள்வார்.

அப்பா  வெளியில் இறங்கி

 எங்கெங்கலாமோ வேலை கேட்டுப் பார்த்தார்.

உடம்பு வலிக்க எந்த வேலையும்

 செய்து விடமாட்டார் அப்பா.

அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி.

 மிராசு மாதிரி சொந்தமா ஒரு குளத்துக்குச் சொந்தமான மொத்த நிலத்தையும்

கையில் வைத்திருந்தவருக்கு 

இப்படி ஒரு நிலைமை வரும் 

என்று யாரும் எதிர்பார்த்திருக்கவே

மாட்டார்கள்.பத்துஆளுக்கு நாளும்

கூலி கொடுத்தவரு நமக்கு ஒரு

கூலி வேலை கிடைக்காதா என்று

தெருவில் போய் நிற்கும்படியாயிற்று.

யாருமே கூலி வேலைக்குகூட

கூப்பிட மாட்டேன்னுட்டாவ...எங்க அப்பா

மத்தவங்க மாதிரி இழுத்து பிடுச்சு

வேலை செய்துகிட மாட்டாவளாம்.

ஆனாலும் எங்க அப்பா எங்க தோட்டத்தில் 

வேலை பார்த்த சுயம்புவிடம்கூட உன்கூட

என்னையும் வேலைக்கு கூட்டிட்டுப் போ தம்பி

என்று வெட்கத்தைவிட்டு சொல்லி

 வச்சிருந்தாங்க.


அவனும் "அண்ணாச்சி உங்களை எப்படி

கூலி வேலைக்கு கூட்டிட்டுப் போக முடியும் ? 

இப்போ அவ்வளவு வேலையும் இல்லை..

மண்வெட்ட...வரப்பு இழுத்துப்போடுவது

மாதிரியான

கடுத்த வேலை எல்லாம் நீங்க செய்துகிட
மாட்டீங்க "என்று சொல்லி

வேலை இல்லை என்று கையை விரிச்சுட்டான்.

அவனும் மனுஷன்தானே...

..நம்ம அண்ணாச்சியைப்

போயி கூலி வேலைக்கு கூட்டிட்டுப் போகணுமான்னு

நினைச்சிருப்பான்.

கடுத்த வேலைச் செய்ய முடியாது என்றால்

 வேறு எந்த வேலைக்குத்தான் போவது.?

ஆபீஸ் வேலைக்கா போகமுடியும்?

ஊரும் ஊரில் உள்ள நிலத்தையும் சுத்திச் சுத்தி
வந்தவருக்கு இந்த மண் வேலையைத்

 தவிர வேறு என்னங்க தெரியும்?

இருந்து இருந்து பார்த்துட்டுத்தான் 

அப்பா இந்த முடிவு எடுத்தார்.

அம்மாவின்  நச்சரிப்பு வேறு அவரை

நிம்மதியாக இருக்கவிடவில்லை.

அம்மாவின் ஒவ்வொரு பேச்சும் அப்பாவின்
வறுமையைக் குத்திக் காட்டுற 

மாதிரியே இருக்கும்.

எங்க வீட்டு நிலைமையை நினைச்சாலே

 கண்ணீருதான் வருது.

வாழ்ந்து கெட்ட குடும்பத்துக்கு

உதவ உலகத்துல யாருமே முன்வர மாட்டாங்க


பத்து பதினோரு மணிவரை தெருவிலேயே

யாராவது வேலைக்கு கூப்பிட மாட்டாவளா

என்று தெருவிலேயே எங்க அப்பா காத்துக் கிடப்பாங்க...காலையில் இருந்து

பச்ச தண்ணி பல்லுல பட்டுருக்காது....

ம்கூம்....எவரும் கூப்பிட மாட்டாங்க...

மறுபடியும் தலையைத் தொங்கப்

 போட்டபடி வீட்டிற்கு வருவாங்க.

வந்ததும் வராததுமாக "இன்றைக்கும் வேலை

கிடைக்கலியா? 

அப்போ... எங்களை என்னதான்

பண்ணணும்னு நினைக்கிறீரு...

குடும்பத்தோடு தூக்குப் போட்டுச் சாக

 வேண்டியதுதானா? "என்று

குதர்க்கமாக கேட்பார் எங்க அம்மா.

எங்க அம்மா நேரம் காலம் தெரியாமல்

 வாயில் வந்தபடி பேசிப்புடுவார்.

ஒட்டிய வயிறும் பல நாட்கள் 

தாடி எடுக்காத முகமும்

குழி விழுந்த கண்களும் 

அப்பாவை பார்ப்பதற்கே

பரிதாபமாக இருக்கும்.

இந்த அப்பாவை பார்த்து கண்டபடிபேச

எப்படித்தான் எங்க அம்மாவுக்கு மனம் வருதோ ?

ஒவ்வொரு நேரம் இதுக்காக  நான் அம்மாகிட்ட 

சண்டை கூட போட்டிருக்கேன்.

பட்டணம் கிட்டணம்போயி

ஒரு காப்பி கடையில பெஞ்சு தொடச்சாவது

நாலு காசு வீட்டுக்கு அனுப்பணும்னு

ஆசைதான்.

வீட்டை விட்டுட்டுப் போக தைரியம்

வரணுமில்லியா....?


அப்பாவின் பாரத்தை கொஞ்சமாவது

 சுமக்க முடியவில்லையே என்ற கவலை

மனசுக்குள்ள  குமைஞ்சுகிட்டே இருந்தது.

என் வயசுக்கு நான் 

இப்போதைக்கு வேறு என்னங்க செய்ய முடியும்.? 


மழை கீழே விழுவனா என்று

ஒரேயடியாக அடம்பிடிக்கும்போது

ஏழை விவசாயியால் என்ன செய்ய முடியும்?

நீங்களே சொல்லுங்க...


இப்படி எத்தனை நாள்தான் ஈரத்துணியை

வயிற்றில் கட்டிவிட்டு பட்டினி கிடப்பது.?

 

தீபாவளி என்றால் ஒன்றுக்கு நாலு டிரவுசர்

வாங்கித் தருவார் அப்பா.

இப்போ கிழிந்த டிரவுசரை துவைத்துப்போட

சோப்பு வாங்க கையில்  கால் காசு இல்லை 

என்றால் பார்த்துக்கிடுங்களேன்.

கண்ணீர் விட முடியவில்லை.

தண்ணீர் விட்டால்தானே கண்ணீர் வரும்.

தண்ணீருக்குப் பஞ்சமாகியபோது

கண்ணீர் எங்கிருந்து வரும் ?

இருந்தாலும் இந்த மழை ஒரேயடியாக 

 வஞ்சனை  செய்துவிடும் என்று

 யாருமே எதிர்பார்க்கலை.

கூலி வேலை செய்தவர்களுக்கு இதனால்

பெரிய பாதிப்பு இல்ல...

இந்த மடம் இல்லன்னா சந்த மடம் 

என்பதுபோல

இன்னொரு வேலையைத் தேட முடிந்தது.

இதுவரை வயல் வரப்புகூட வெட்டிப்

பழக்கமில்லாத  எங்களை மாதிரி குடும்பத்தால்

நிலைமையைச் சமாளிக்க முடியாமல்

தடுமாறிப் போனோம்.


ஒருநாள் மேல தெருவில் இருக்கும்

மூத்த அத்தை  வீட்டுல போய்

ஏதாவது கிடைக்குமா என்று

பார்த்துட்டு வருவோம் என்று அப்பா என்னையும்

கூட்டிக்கொண்டு போனார்.

எங்க  குடும்பத்தில்  மூத்த அத்தை மட்டும்

கொஞ்சம் வசதியாக இருக்கிறார்.

மோட்டார் தோட்டம்.... ஒரு இரண்டு மணி நேரம்

மின் மோட்டார் ஓடும் அளவுக்கு

நீரூற்று உள்ள கிணறு.

அதனால் ஏதோ இந்த பஞ்சத்திலும் அத்தைக்கு

குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம்

வந்து கொண்டிருந்தது.

ஒன்றிரண்டுமுறை அத்தையிடமும்

கடன் வாங்கியிருக்கிறோம்.

இந்தமுறை அத்தையும் 

கைவிரித்துவிட்டார்.

இப்படி ஒரேயடியாக மழை

 வஞ்சித்தால் யார்தான் உதவுவார்கள்?

எல்லோருக்கும் நாளைக்கு என்ன

நடக்குமோ என்ற பயம் உள்ளுக்குள்

இருக்கத்தானே செய்யும்.?

யார் ....யாருக்கு கொடுத்து உதவ முடியும்?

ஒன்றிரண்டு குடும்பத்தில் பிள்ளைகள்

படிச்சி வேலை பார்த்ததால் சாப்பாட்டுக்கு

மாசாமாசம் பணம் வந்துடும்.

மத்தவங்க பாடெல்லாம் எங்களை மாதிரி

படுதிண்டாட்டம் தான்.

யாரை குத்தம் சொல்ல?

"

"கடவுள் கண்முழிச்சிப் பார்த்தா போதும்.

நம்ம தோட்டத்தில் விளைவதே நீ தின்னு..

நான் தின்னு ....என்று காலுக்குள்ளும்

கைக்குள்ளும் கிடக்கும்....

கடவுள்கண் முழிச்சி பார்த்திருந்தா

எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.


கடன் கேட்டுப் போகிற வீட்டில் எல்லாம்

இப்படியேயா கடவுள் விட்டுருவாரு ....
பழையபடி முந்தைய மாதிரி ஊரு
செழிக்கும் என்று ஏதேதோ பேசி
ஆறுதல் படுத்தி அப்பாவை
வெறுங் கையோடு திருப்பி
அனுப்பி வைத்து விடுவாவ..

வயிற்றுப் பசி இருப்பவனுக்கு வார்த்தையை
அள்ளிக் கொடுத்தால்....
பசி தீருமா?

ஒருநாள் அத்தை வீட்டுக்குப்

போயிட்டு நானும் அப்பாவும் வருத்தத்தோடு

திரும்பி வந்துகிட்டு இருந்தோம்.

அப்போது எதிரில் வந்த பெரியசாமி மாமா

"என்ன ஓய் ... பார்த்தும் பார்க்காத மாதிரி

போறீரு....ஒரேயடியா ஆளு  ஒடிஞ்சு
போயிட்டீரு..."
என்று விசாரித்தார் .

" அதெல்லாம் இல்ல...சும்மா தங்கச்சி
  வீட்டு வரை போயிட்டு வர்றேன்..."
என்று சொல்லி சமாளித்துப் பார்த்தாவ 

எங்க அப்பா.

"என்ன முகமெல்லாம் வாட்டமா இருக்கு...

கஞ்சிகிஞ்சி குடிச்சீரா இல்லையா? " 

என்றார் மாமா.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை....ஏதோ
நினைச்சுகிட்டே வந்ததால் எதிரே வந்த

 உங்களை பார்க்கல...
 ஆமா...மவன் வீட்டுக்கு தூத்துக்குடிக்குப்
போயிட்டு எப்போ வந்தீரு...."
என்று கேட்டு வைத்தார் அப்பா.

"வந்து இரண்டு நாள் ஆவுது.."

"மவன் பிள்ள குட்டி எல்லாம் சுகமா..."

"அதெல்லாம் நல்ல சுகம்..."

"வேலை கீலை இருக்கா...அங்கேயும் இப்படித்தானா.."

"என்ன இப்படி கேட்டுட்டீரு...
அவன் உப்பளத்தில் வேலை பார்க்கிறான்...
அவனுக்கு எதுக்கு மழை..."

"அப்போ மவனுக்கு நல்ல 

வேலைன்னு சொல்லும்..."

"இங்க கிடந்தான்னா...இந்தப் பஞ்சத்தில
பய ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்பான்.
இப்போ கடனில்லாம வயித்துப்பாட்டுக்கு
ஓடுது...பேசாம நானும் அவன்கூட போயி
இருந்துடலாம் என்றுதான் பார்க்கிறேன்.
என் வீட்டுக்காரி  எண்ணைக்கி என்
சொல்லை கேட்டா...
ஒத்தப் பசுவை கட்டிகிட்டு அழுதுகிட்டு கிடக்குறா..."

"பால் கறக்குதா..."

"பச்சைப்புல் தின்னாம பாலு 

எப்படி கறக்கும்..?

ஏதோ ஆழாக்கு பால் கறக்கும்.
வீட்டுக்கு மட்டுமாவது விலைக்கு வாங்காமல்
ஒப்பேத்தலாம்  இல்லையா?"

"பையன் வீட்டுக்கு இனி எப்போ போவீரு."
அப்பா மனதில் ஏதோ ஒரு எண்ணம்
தோன்ற மறுபடியும் மறுபடியும்
வலிய பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாங்க.

"ஒரு மாசத்துல  போவணும்...

சவம் பச்சபுள்ளைகள்
தாத்தா தாத்தான்னு காலை 

கட்டிகிட்டே கிடந்துச்சி..
கண்ணுக்குள்ளேயே நிக்குது...
புள்ளைகள் மேல ஒரே தேட்டமா
இருக்கு...
மறுபடியும் இந்த மாதத்தில் ஒரு எட்டு போய்
பார்த்துட்டு வந்துடணும்....
ஊருல இருக்கிறவரை அரைவயிறும்
கால்வயிறும் கஞ்சி குடிச்சி வளருற புள்ளைகள்
வம்பா போச்சி..
இப்போ புள்ளைகள் எல்லாம்

 நல்லா தெளிச்சலா
இருக்கு."
என்று மகன்பாடு பரவாயில்லை என்பதை
ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் 

பெரியசாமி மாமா.

"மருமவ எதும் வேலைகீலை பார்க்கிறாளா..."

"ஆமாம். அவளும் வீட்டுல சும்மாதானே
இருக்கேன் என்று கையாளாட்டம் உப்பளத்தில்
வேலை பார்க்குறா...
நல்ல சம்பளம் கிடைக்கு ..
நீரும் இங்க கிடந்து ஏன் கஷ்ட படுறீரு...
தூத்துக்குடி ஈத்துக்குடி போய்
பொழைக்கிறத பாரும்...."
என்று அப்பாவுக்கும் தூத்துக்குடியில்
பிழைக்க வழி இருக்கு என்பதை சொல்லிக்
காட்டினார் பெரியசாமி மாமா.

"போனா எனக்கும் வேலை கிடைக்குமா?

வேலை கிடைக்குமாவா .? 

நம்ம சனம் எல்லாம் இந்தப் பஞ்ச

காலத்துல அங்கேதான் நிக்குறாங்க.."


"போனால் எங்க தங்குறது...எங்கப் போயி
வேலைத் தேடுறது...சும்மா எப்படி 

பொசுக்குன்னு போகமுடியும்."

என்றார் அப்பா..

"ஏன் ...நம்ம புள்ள முத்து இல்ல....
அவன் நீர் போனீருன்னா பொதடிய புடுச்சி
வெளியில தள்ளிடுவானாக்கும் ...
இங்க கெடந்து
நாலு பிள்ளைகளை வச்சுகிட்டு
நீர் படுற பாட்ட பார்க்க முடியல...
எத்தனை நாள்தான் வானத்தை பாத்துகிட்டே
கஞ்சி குடிக்காம கெடப்பீரு...
நீரு கெடப்பீரு ...பச்சப்புள்ளைகள் கெடக்குமா...
நீரும் தூத்துக்குடிக்குப் புறப்புடுறதப் பாரும்...

இனி பழைய மெப்ப நினைச்சுகிட்டு

இருந்தா பிள்ளைகள் வம்பா போயிடும்.

சொல்லிபுட்டேன்.ஊரு சோறு போடாது.

பேசாம ஊரைவிட்டு வெளியில்

போறதைப் பாரும் "
பெரியசாமி மாமா கறாராக

சொல்லிவிட்டுச் சென்றார்.

வீட்டுக்கு வந்ததும் அன்னப்பழத்து கிட்ட

பெரியசாமி மாமா சொன்ன அத்தனையையும்
ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார் அப்பா.

அன்னபழம் வேறு யாருமல்ல....எங்க அம்மா.

அப்பா சொன்னதும்
"நீங்க என்ன நினைக்குறீக...போகணுமா..
இல்ல இப்படியே பட்டினி கிடந்து சாகணுமா.?."குறுக்குக் கேள்வி போட்டார்

எங்க  அம்மா.

இருக்கும்வரை எங்க வீட்டுக்காரருக்கு
காணாது என்று தலையில் தூக்கி வச்சு
ஆடுனவாதான்  எங்க அம்மா.

இப்போ அப்பா கையில காசு இல்ல... அப்பாவ
ஒரு ஆளா கூட அம்மா மதிப்பதில்லை...

ஒரு துணிவோடு தூத்துக்குடி போவது

என்று முடிவு எடுத்தார் அப்பா.

அப்போதுதான் தாத்தாவை யார்  

பார்த்துக் கொள்வது?
என்ற கேள்வியும்  கூடவே எழுந்தது.

"உங்க தம்பியிடம் தள்ளிட்டு வாங்க."
என்று ஒற்றைவரியில் தாத்தாவுக்கு முடிவுரை
எழுதிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார் அம்மா.

அப்பா மனம் கேட்கல...
தாத்தா சாப்பிட்டால்தான் அப்பா

சோத்துலேயே கை வைப்பாங்க...

எப்படி தாத்தாவை விட்டுட்டுப்

போக மனம் வரும்?

தயங்கி தயங்கி  சித்தப்பாவிடம் போய்

விசயத்தைச் சொன்னாங்க...

"ஊரைவிட்டு போறீயாயாக்கும்..."

மறுபடியும் சித்தப்பா ஒன்றுமே பேசல.

பொசுக்கென்று ஊரைவிட்டுப் போறேன் என்றதும்

தாங்க முடியல...கண்ணுகலங்கி சித்தப்பா

அப்படியே நின்னாங்க....

அப்பாதான் "சரி ஆறுமாதம் போயிட்டு

வாறேன் மழைதண்ணி வந்து கொஞ்சம்

செழிப்பானதும் வந்துடுறேன் "

என்று சித்தப்பாவுக்கு

சமாதானம் சொன்னாவ.


"சரி...போயிட்டு வா...
நம்ம குடும்பத்துக்கு இப்படி ஒரு
கஷ்டம் வருமுன்னு நான் நினைச்சே பார்க்கல...

ஐயாவைப் பத்தி கவலைப்படாம  போயிட்டுவா..

ஐயாவை நான் பார்த்துகிடுறேன்" என்று
அப்பா தாத்தாவை பார்த்துக்க என்று சொல்லும்

முன்னே தாத்தாவை பொறுப்பா பார்த்துகிடுவேன்

என்று சித்தப்பா சொல்லிட்டாவ.

எங்க அப்பா தாத்தாவை ஐயா என்றுதான்

கூப்பிடுவாங்க.

"தம்பி. பால்தங்கம் சம்மதிப்பாளா?..."
என்று அப்பா கேட்டாங்க...

பால்தங்கம் சித்தி கறாரான ஆளு.
ஒரு மாசத்துக்கு மேல ஒரு நாள் அதிகமாக
வைச்சு தாத்தாவ பார்க்க மாட்டாவ....

"அவ கிடக்கா...அவளை நான் பாத்துகிடுறேன்...

நீயும் நாலு புள்ளைகளை வச்சுகிட்டு

எத்தனைநாள்தான் பட்டினி கிடப்பா...

எனக்கு என்ன பேச என்றே தெரியல"

சித்தப்பாவுக்கு வாயில் இருந்து வார்த்தை

வர தடுமாறியது.கடைசியாக

ஏதோ சித்தப்பா கொடுத்த நம்பிக்கையில்

ஐயாவை  சித்தப்பா கையில் ஒப்படைத்துவிட்டு

அங்கிருந்து  ஐயா படுத்திருந்த கட்டில்

பக்கம் போய் கையைப் பிடிச்சாவ அப்பா.

கையெல்லாம் நடுங்கியது...வார்த்தைகள்

தொண்டைக்குழியைவிட்டு வர மறுத்தன.

ஐயாவின் தொண்டைக்குழி நரம்புகள்

ஏதோ பேச முயற்சிபண்ணி போராடி

தோற்றுப்போய் நின்றன.

கண்களிலிருந்து கண்ணீர் வற்றலான மேடுபள்ளங்களைத் தாண்டி வீழ்ந்து

கொண்டிருந்தது. அதற்குமேலும்

தாத்தாவ பார்க்க முடியாமல் அப்பா திரும்பி

நின்னுகிட்டாவ.

ஒற்றைக் கையால் இடுப்பு வேட்டியில்

சுத்தி வைத்திருந்த ஒரு பத்து ரூபாவை எடுத்து

என் கையில்  வைத்தாவ எங்க தாத்தா.

வேண்டாம் தாத்தா என்று சொல்ல மனம்

இல்லாமல் தாத்தா கையைப் பற்றிக்

கொண்டு அழுதேன்.தாத்தா உதடுகள்

துடித்தன.

நெஞ்சுக்குழி மேலும் கீழும் ஏறி இறங்கி

போராடிக் கொண்டிருந்தது.


இந்தப் பாசத்தை இப்படியே கட்டிலோடு

விட்டுவிட்டு

எப்படி எங்களால் போக முடியும்?

எத்தனை நிமிடம் இந்தப் பாசப் போராட்டடம்

நடந்ததோ.....சித்தப்பா கையைப்

பிடித்து என்னையும் அப்பாவையும்

வெளியில் கூட்டிட்டு வந்தபின்னர்தான்

சுய நினைவுக்கே வந்தோம்.

அப்பாவுக்கு தாத்தாவை சுமையாக

நினைத்து மொத்தமாக சித்தப்பா

வீட்டில் இறக்கி வைத்துவிட்டு போகிறோமே
என்ற நினைப்பு இருந்ததால்

மனம் வெம்பிப் போயிட்டாவ...

என் ஐயா  பத்து வயசு வரை தோளில்

தூக்கி வைத்துதான் எங்கேயும் கூட்டிட்டுப்

போவாவ...கடைசி காலத்துல

அந்த ஐயாவை...பாரம் என்று சுமக்காம

போறோமே என்ற வருத்தம் அப்பா மனசை போட்டு

வாதிச்சுகிட்டு கிடந்தது.


மனசுக்குள்ள ஒரு போராட்டம்.

வீட்டில் வந்து ஒருவாய்

தண்ணீர்கூட வாங்கிக் குடிக்கல...

விட்டத்தைப் பார்த்தபடி அப்படியே

 படுத்திருந்தாவ...
விழி ஓரத்தில் கண்ணீர் நிறைந்து நின்றது.

"அப்பா  நம்ம ஐயாவை  அடுத்த மாசம் வந்து

நாம கூட்டிட்டு போயிடலாம்பா...".என்று கூறி

அப்பாவின் கண்ணீரைத் துடைத்து விட்டேன்.

"என் ஐயா...."என்று கையைப் பிடித்துக் கொண்டு

என் முகத்தையே பார்த்தபடி அப்பா அழுததை

நினைச்சா என் ஈரக்குலையை 

அப்படியே கசக்கி வெளியில் தூக்கி போட்டமாதிரி

இருந்தது.

அன்றுதான் நான் ரொம்ப  நொறுக்கி

போய்விட்டேன்.

அப்பாவின் கண்களில் உன்னைதான் 

மலைபோல நம்பி

இருக்கிறேன் தம்பி என்ற கெஞ்சல்  

இருப்பதைக் கண்டேன்.

அப்பவே ஒரு முடிவுக்கு வந்தேன்.

"அப்பா...உங்க சுமையை நான் சுமப்பேம்பா..

.நீங்க கண்கலங்கபிடாது....".என்று

அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

இனி பேச என்ன இருக்கிறது?

பெத்த அப்பா கண்ணீர் விட்டு அழுவதைப்

பார்த்ததும் சும்மா இருப்பதற்கு நான்

ஒன்றும் கல் நெஞ்சுகாரன் இல்லியே...

நடக்கக்கூடாத நாடகத்தை நடத்திக்

கொண்டிருந்து மழை.

மழை நடத்திய நாடகத்தில் முதல்

பலிகடாவாக்கப்பட்ட

நாங்கள் கிராமத்துக் காட்சியிலிருந்து மறைந்து

 போக நினைத்த நாள் இன்று.

ஊருல ஒருத்தருக்கும் தெரியாம 

ஊரைவிட்டு போயிரணும் என்று தான்

 நினைத்தோம்.

அதற்காகத்தான் விடியக்காலையிலேயே

புறப்பட்டோம்.

"ஏய்...என்ன இது...?

பேயறைஞ்ச மாதிரி நிற்கிறா" என்று

உலுக்குவிட்டாள் அக்கா.

 பழைய நினைவுகளை உதறித்

தள்ளியபடி மறுபடியும் கதவைத்திறந்து 

யாராவது தெருவில் வருகிறார்களா என்று 

நோட்டமிட்டேன்.

"யாருமில்லை....வாங்க...வாங்க..."
அவசரப்படுத்தினேன்.

ஆளுக்கு ஒரு பொட்டலத்தைத் தூக்கியபடி
எல்லோரும் கிளம்பினோம்.

ஓடிப்போய் அப்பா கையில் இருந்த
தகரப் பெட்டியை
வலுக் கட்டாயமாக இழுத்தேன்.

"நீ சுமந்துகிட மாட்டாப்பா..".என்று
சொல்லியபடி தர மறுத்தார் அப்பா.

"நான் சுமப்பேம்பா....நீங்க சும்மா வாங்க.

அது போதும்" உரிமையோடு அப்பா 

கையில் வைத்திருந்த பெட்டியை வாங்கி

தலையில் வைத்தபடி முன்னால் நடந்தேன்.

தூத்துக்குடியை நோக்கிய

எங்கள் பயணம் தொடங்கியது.

தெருவைக்  கடக்கும் வரை யாராவது

பார்த்திட கூடாதே என்று பதுங்கி பதுங்கி

மெதுவாக காலெடுத்து வைத்தோம்.

யாரும் பார்க்காமல் ஊரைக் கடந்து 

நாலுவழிச் சாலையை வந்த பின்னர் தான் முழுசா மூச்சு விட்டோம்.

இப்போது எதையோ பறிகொடுத்துவிட்டது போன்ற

 உணர்வு. சொல்ல முடியாத ஏதோ ஒன்று

இதயத்தை அமுக்கி பின்னால் இழுப்பது போல

இருந்தது.

 மெதுவாக திரும்பி பார்த்தேன்....

அப்பா கண்களில் கண்ணீர் மல்க

ஊரையே திரும்பிப் பார்த்தபடி அங்கேயே

நின்று கொண்டிருந்தார்.

"வாங்கப்பா....."

கையைப் பிடித்து இழுத்தேன்.

எங்கள் விழிகளில் இருந்த கடைசி சொட்டு

நீரை மட்டும் வாங்கிக் கொண்ட ஊர்

தனது  கடைசிக் காட்சியைக்  கொஞ்சம்

கொஞ்சமாக  மறைத்துக் கொண்டிருந்தது.





Comments

  1. இயற்கையின் விளையாட்டால் சீரழிந்த குடும்பத்தின் காட்சியை தத்துருவமாக பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts