கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் 


"கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் 

கவி பாடும்"

என்று சொல்வார்கள்.

அது என்ன  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் ?

காரணம் இல்லாமல் எந்தவொரு  பழமொழியும் சொல்லப்படுவதில்லை.

அதற்கென்று ஒரு வரலாறோ 

ஓர்  உண்மையான பின்புலமோ இருக்க வேண்டும்.

அது என்ன வென்று அறிய வேண்டும் என்ற

வேட்கை என்னுள் எழ 

அதற்கான  தேடலில் ஈடுபட்டேன்.


தேடலில் வலையில் அகப்பட்டார் ஒரு பெண்.

யாரிவள் ...யாரிவள் என்று அறிந்து கொள்ள

அவன் பின்னணியை அலசி ஆராய

அவள் பின்னாலையே மனம் ஓட 

அவளோ அருகிலுள்ள 

ஒரு வீட்டினுள் சென்று மறைந்து போனாள்.


எப்படி இவளைப் பிடிப்பது?

தெரியாத வீட்டினுள் சென்று எட்டிப் பார்ப்பது

நாகரிகம் அல்லவே என்று

கையைப் பிசைந்தபடி தெருமுனையில் நின்றிருந்தேன். மறுபடியும் அதே பெண்

காட்சிக்கு வந்தாள்.


இப்போது நான் அவளை விடுவதாக இல்லை. 

அப்போது இன்னொரு புலவர்

அங்கு வர காட்சி மாறியது.கதை சூடுபிடிக்க

தொடங்கியது.


அவளிடம் அங்கு வந்தப் புலவர்

ஏதோ கேட்டார்.

காதுகளைக் கூர்மையாக்கி

அவர்களுக்குள் நடந்த உரையாடலை 

உற்றுக் கேட்க ஆரம்பித்தேன்.


வந்தவர் "கம்பர் எங்கே ?" என்று

அதிகாரத் தொனியில்   கேட்டார்.


அந்தப் புலவரை ஏற இறக்கப் பார்த்தாள்

அந்தப் பெண்.


"தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா ?என்றாள் .

புலவர் பெருமையாக "புலவர் சோமாசி வந்திருக்கிறேன் 

என்று சொல் "என்றார் .


,"யாராய் இருந்தால் எனக்கென்ன?.?இங்கே உங்களுக்கு முன்னரே நிறையபேர்

வந்து காத்திருக்கிறார்கள்.நீங்களும் காத்திருங்கள் "

என்றாள் அந்தப் பெண்.

புலவருக்குச் சட்டென்று கோபம் 

வந்துவிட்டது .

"என்ன நீ ஒரு சாதாரண பணிப்பெண்.

பணிப்பெண் என்று கூட சொல்ல மாட்டேன். சாணி தட்டும் பெண்.

கேட்ட கேள்விக்கு  உண்டு இல்லை .

இருக்கிறாரா இல்லையா என்று

ஒற்றைச் சொல்லில் பதில் சொல்வதை

விட்டுவிட்டு நிறைய பேசுகிறாயே.

நீ என்ன கம்பரிடம் தமிழ் படித்தவளோ" என்று நக்கலாகக் கேட்டார்.


"நான் சாதாரண பணிப்பெண்.

எனக்கு எதற்குப் படிப்பு?

படிப்பதற்கு எனக்கு நேரமும் கிடையாது."

என்றாள் அலட்சியமாக.


'ஆனால் பேச்சில்  மெத்தப் படித்தவள் என்ற

நினைப்பு இருப்பது போல் தெரிகிறது "


"அது உங்கள் பார்வை.

அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய

விடுகதை ஒன்று போடுகிறேன். உங்களால் விடுவிக்க முடியுமா என்று பாருங்கள்" என்று 

சொல்லி மடக்கினாள் அந்தப் பெண்.


இவள் அப்படி என்ன பெரிய விடுகதை போட்டு விடுவாள் என்ற அலட்சியம் 

புலவரிடம் இருந்தது.


"நீ விடுகதை போடுமளவுக்குத் தமிழில் புலமை 

மிக்கவளோ?" என்றார் அலட்சியமாக.


"அப்படிச் சொல்லவில்லை."


"பிறகு எப்படி விடுகதைப் போடுகிறேன் என்கிறாய்?"


"என்னால் முடிந்தத் தமிழில் விடுகதையைச் சொல்கிறேன். 

முடிந்தால் விடுவியுங்கள் "

என்றாள்.


"கூறு.கூறித்தான் பாரு"  என்றார் புலவர்.


" வட்ட வட்டமாக இருக்கும் .

வன்னி கொடியில் தாவும் 

தட்டுபவர் கையில் கூத்தாடும் 

எரித்தால் சிவசிவ என்பர் 

அது என்ன ? "

என்றாள்.


என்னவாக இருக்கும்?

என்னவாக இருக்கும்?சற்று நேரம் யோசித்துப் பார்த்தார்.

ஒன்றும் புரியவில்லை.


இதென்ன ...இப்படியொரு விடுகதையை இதுவரை கேட்டதே இல்லையே.

இப்போது என்ன செய்வது?

தெரியாது என்றால்...?.கூடாது... கூடாது. ஒரு பெண்ணிடம் தோற்றுப்போகக் கூடாது.

தோல்வியை ஒப்புக்

கொள்ள மனம் ஒத்துக்கொள்ளவில்லை..

விடை காணவும்  இயலவில்லை.

விழிபிதுங்கி நின்று கொண்டிருந்தார்

புலவர்.


அந்தப் பெண்ணுக்குப் புலவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.


உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

இன்று போய் நாளை வா என்பதுபோல

"உடனே விடுகதைக்கான விடையைச் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.

நாளைகூட பதில் சொல்லலாம்.

காத்திருக்கிறேன் "என்று சொல்லியவள்

அவர் பதிலுக்குக் கூட காத்திராமல் உள்ளே சென்று விட்டாள்.


புலவருக்குப் பெருத்த அவமானமாகப் 

போய்விட்டது.

அப்போது கம்பர் வெளியே வந்தார். புலவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.


புலவரின் கண்கள் வீட்டுக்குள் 

யாரையோ தேடின.


"யாரைக் தேடுகிறீர்கள் ?"என்றார் கம்பர்.


"யாரந்தப் பெண்?"

என்று கேட்டார் புலவர்.


"யாரைக் கேட்கிறீர்கள்? 

தாங்கள் வீட்டிற்கு வருவதற்கு

சற்று முன்னர் வந்தாளே...அவளையா கேட்கிறீர்கள்." என்றார் கம்பர் சாதாரணமாக.


"அவளைத்தான்...யாரவள் ?"மறுபடியும் விடாமல் கேட்டார் புலவர்.


"அவளா ? அவள் என் வீட்டில் வரட்டி தட்டும்

பெண் "என்றார் கம்பர்.


"வரட்டி தட்டும் பெண்ணா  அழகான தமிழில் விடுவிக்க முடியாத அளவுக்கு விடுகதை போட தெரிந்து வைத்திருக்கிறாள்?" 

என்றார்


"என்ன சொல்கிறீர்கள்.அவள் விடுகதை போட்டாளா?

அதுவும் விடுவிக்க முடியாத அளவுக்கு கடினமான விடுகதை போட்டாளா?

அப்படி என்ன கடினமான விடுகதை? சொல்லுங்கள்" என்றார் கம்பர்.


புலவர் அவள் கூறிய விடுகதையை

கம்பரிடம் க்கூற

வாய்விட்டுச் சிரித்து விட்டார் கம்பர்.


"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"அவள் ,தான் செய்யும் தொழிலைத்தைத்தான் விடுகதையாக சொல்லி இருக்கிறாள் "என்றார் கம்பர்.


"புரிய வில்லையே.."

"வரட்டியைத்தான் அவள் வட்டமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறாள்.

வன்னி மரக் கட்டைகளை எரித்து

அந்த நெருப்பில் தான் வரட்டியை சுடுவார்கள் .

வரட்டி எரிந்த பின்னர் கிடைக்கும்  சாம்பல் திருநீறு ஆகும் .அதை நெற்றியில் பூசும் போது சிவ சிவ என்று சொல்லி பூசிக் கொள்வார்கள் அல்லவா அதைத்தான் அவள் உங்களிடம் விடுகதையாக சொல்லி இருக்கிறாள்" என்றார் கம்பர்.


அதைக்கேட்டு புலவர் அசந்துபோய்விட்டார்.

கம்பர்  வீட்டில் வரட்டி தட்டும் பெண்ணுக்கே

இத்துணைப் புலமையா ? வியந்து போனார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று சும்மாவா சொன்னார்கள் .கம்பன் வீட்டில் வரட்டி தட்டும் ஒரு பெண்ணின் தமிழுக்குக்கூட  நம்மால் பதில் சொல்ல முடியவில்லையே என்று வருந்தியபடி வருகிறேன் என்று சொல்லி, திரும்பிச் சென்றுவிட்டார்  புலவர்.

காட்சி என்பக்கம் திரும்ப

" கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" என்ற பழமொழி  வந்ததற்கான பின்னணி

இதுதானா ?"என்றபடி நானும் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

பழமொழிக்குக் காரணமான பைங்கிளி

மட்டும் என் காட்சியிலிருந்து இன்னும் 

அகலவே இல்லை.

கதை நன்றாக இருக்கிறது இல்லையா?

இருக்கும்... இருக்கும்.

கம்பர் வீட்டுக் கதை அல்லவா

நன்றாகத்தான் இருக்கும்.வரட்டா?






Comments

  1. பழமொழி விளக்கத்தை கதையாக பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment