பெத்த கடன்

   

                                      பெத்த கடன்

   

என்றுமில்லாதபடி  விடியற்காலையிலேயே 

எழுந்து கதவைத் திறந்து வெளியில் வந்தார் ராசம்மா.

பெருக்குமாறைக் கையிலெடுத்து

 தரதரவென்று தரையில் நாலு தேய் 

தேய்த்த மாதிரி இருந்தது.
 அதற்குள் கையில் தண்ணீர் சருவத்தைத் 

தூக்கி வந்து தெளிக்க ஆரம்பித்தார் .
எங்குதான் படித்து வந்தாரோ தெரியவில்லை ராசம்மா மாதிரி எல்லா இடமும் ஒரே அளவாக கச்சிதமாக ஒரு ரோபோவால் கூட  தண்ணீர் தெளிக்கமுடியாது.

ஒருவேலை முடிந்ததும் மறுவேலைக்கு 

இடையில் ஒரு நிமிட இடைவெளி கூட இருக்காது.
 கையில் பாத்திரங்களை அள்ளி

 வந்து முற்றத்தில் போட்டார்.

பலகை கட்டையை எடுத்து வந்து அதில் உட்கார்ந்து பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தார்

யாரோ புதுசா ஆள் வருகிறது போல 

ஏதோ ஒரு பரபரப்பு மனதில் வந்து ஒட்டிக் கொள்ள

 படபடவென்று வேலை செய்ய ஆரம்பித்தார்.

 மனசு பூரா இன்று வரப் போற மகன் மேலேயே இருந்தது.
 ரொம்ப நாளுக்குப் பிறகு வருகிறான்.

 என்ன பண்ண... ஏது பண்ண ....ஒன்றும் தெரியல..
  கை காலெல்லாம் ஒரு பதற்றம்..
 பெத்த பிள்ளைய பார்க்கிறதுக்கு அப்படி

 என்ன பதற்றம். ....?
 அவளுக்கே புரியல...

மனசு எங்கெங்கெல்லாமோ 

நினைவலைகளை அலையவிட்டது.

 பையன் டவுணுல வேலை பார்க்கிறான்.

 திருமணத்திற்குப் பிறகு இந்த பக்கம் 

அவ்வளவா வர்றது இல்ல...

அடிக்கடி மாமியார் ஊருக்கு மனைவியோடு

 போவதாக பார்த்தவர்கள் வந்து 

சொல்லுவார்கள்.
அப்போதெல்லாம் அங்கு போயிட்டு 

வரும்போது வருவான் என்று காத்திருப்பார் ராசம்மா.
ஒருத்தர் மாத்தி 

 ஒருத்தர் வந்து.... உங்க மவனை மாமியார்

வீட்டுப்பக்கம் பார்த்தேன்.இங்கு வரலியா....?

என்று  கேட்பார்கள்.

கேட்பவர்களுக்கு "அவனுக்கு என்ன 

சோலியோ அவசரமா போயிருப்பான்... 

வருவான்... வருவான் "சொல்லி சாமாளிப்பார்

ராசம்மா.
அடுத்தமுறை வரும்போது வருவான்... 

உதடுகள் சொல்லி சமாளிக்குமே ஒழிய

மனசு உள்ளுக்குள் ஊமையாக அழுது

கொண்டுதான் இருக்கும்.

மூடி மறைத்து வாழ்ந்தாலும்....

இதயம் அடுத்தமுறையாவது  என்னைப் பார்க்க

வர மாட்டானா  என ஏங்கும்.....

பெத்த மனசு புள்ளைய விட்டு  கொடுக்காம....

தொலைக்கவும் மனமில்லாம....

தவியா தவிக்கும்.

பாவம் ராசம்மா...

இப்படி ஒரு முறையா ...இரண்டு முறையா....

ஆறுமாத காலமா இதே எதிர்பார்ப்பும்

ஏக்கமுமாக காலம் கடந்து போனது.

மகனுக்குத்தான் தாய் நினைப்பு கொஞ்சம்கூட

வரல...

மாமியாரை அம்மா..அம்மா..என்று உங்கள்

மகன் கூப்பிடுகிறான் என்று யாராவது வந்து

சொல்வார்கள். என்னையும் அம்மா என்று

அழைக்க வரமாட்டானா...என்று மனசு

வாதிக்கும்.

மகனுக்கு மாற்று தாய் கிடைத்துவிட்டாள்.

இந்த பேதை இன்னொரு மகனுக்கு எங்கே போவாள்?

புல்லு சுமந்து ...வேகாத வெயிலுல வெந்து

காட்டு வேலை செய்து....குடிச்சும் குடிக்காமலும்

புள்ளைய படிக்க வைத்தார் ராசம்மா.

" இந்த வேகாத வெயிலுல இன்னுமா 

 வேலை செய்யுறீங்க..." என்று யாராவது கேட்டால்...

இன்னும் ஒரு வருசம் படிப்பு இருக்கு...

படிப்பு முடிச்சு அவனுக்கு ஒரு வேலை கிடைச்சுது

என்றால் என்னை என் மவன் கூடவே

கூட்டிட்டுப் போயிருவான். 

அதுக்குப் பிறகு இந்தக் காட்டுப்பக்கம்

யாரு வரப் போறா..சொல்லி தேற்றிக் 

கொண்டிருந்தவர் இந்த ராசம்மா.

அவர் நினைத்ததுபோலவே படித்து 

முடித்ததும் நல்ல வேலை கிடைத்தது. 

முழுசா மூணு மாசம்தான்

வேலை பார்த்திருப்பான்.

அதற்குள் அங்குமிங்கும் இருந்து பெண் வீட்டார்

வரிசையாக நெருக்க ஆரம்பித்தனர். முதலில்

 இரண்டு வருடம் வேலை பார்க்கிறேன். இப்போது

திருமணம் வேண்டாம்...

என்று சொன்னவன் திடீரென்று

ஒருநாள்," ஒரு பெண் வீட்டார்

அடிக்கடி தன்னை தொடர்பு கொள்வதாகவும்

பெண்ணும் நன்றாக இருப்பதுபோல் தெரிகிறது.

அதையே முடிச்சுடுவோம்மா" என்றான்.

மகனுக்கு புடிச்சுருக்கும்போது வேறு என்ன

சொல்ல முடியும் ? 

அந்தப் பெண்ணையே பேசி முடித்து வைத்தார்

ராசம்மா.

திருமணம் ஆன புதிதில் இரண்டு மூன்று

முறை மனைவியோடு வந்தவன்தான்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்கு வரும்

போக்குவரத்தைக் குறைத்துக் கொண்டான்.

ஒத்த பிள்ளையை பெத்து வச்சிட்டு

அவனே உலகம் என்று  இருந்த ராசம்மாவுக்கு

பெரிய ஏமாற்றமாக இருந்தது.

ஆரம்பத்தில் படுக்கையில் கிடந்து அழுவாள்.

காலையில் எழுந்து புல் அறுக்க காட்டுக்குப்

போனால்" உங்க மவன் நல்ல வேலையில

இருக்காவள...இன்னுமா பெரியம்மா

புல் அறுத்துகிட்டு திரியுரிக.."என்று பார்ப்பவர்கள்

எல்லாம் கேட்பார்கள்.

"ஒரு பால் மாடு கிடக்கு இல்லியா...கொஞ்சம்

பச்சைபுல் தின்னா கூட ஒரு லிட்டர் பால்

கறக்கும் " அதனால்தான் புல் அறுக்கிறேன்

என்று சொல்லி சமாளிப்பார்.

"பால் மாட்டை வித்துவிட்டு மகன்கூட

போய் இருக்க வேண்டியதுதானே" என்று கேட்பவர்களும்

உண்டு.

" பட்டணம் நமக்கு சரிபட்டு வராது...

இங்கே மாதிரி நாலு எடத்துக்கு காலார

நடக்க முடியுமா..? "என்று மகன் கூப்பிட்டது

போலவும் இவர்ஊரைவிட்டுப் போக மனமில்லாமல்

இங்கு இருப்பது போலவும் மகனை விட்டுக்

கொடுக்காமல் பேசுவார்.

இதுதான் பெத்த மனசு.

பட்டுத் திருந்துவார்கள் என்பார்கள்.

 இந்தத் தாய் மனசு மட்டும் பட்டும் திருந்தாது.

 தூக்கித் தூர வீசினாலும் ....

வந்து தூக்கமாட்டானா.... என்று ஏங்கும்.


அந்த ஏக்கத்திற்கு பதிலாக வந்ததுதான்

ராசம்மா மகன்  நாளை வரப்போகிறான் 

என்ற இன்றைய செய்தி.

கேட்ட நேரத்திலிருந்து காலும் ஓடல..

கையும் ஓடல....
" புள்ள வருகிற நேரம் பார்த்து ஒரு அரைக்கிலோ

இறைச்சி வாங்கி ஒரு நல்ல சோறு குழம்பு வைத்து

 கொடுப்பதற்கு கையில் கால் காசு இல்ல....

கறி  குழம்பு என்றால் விரும்பி சாப்பிடுவான்."

மனசு பூரா என்ன குழம்பு வைக்க...கறி வாங்க

பணத்திற்கு எங்க போக என்று ஒரே 

சிந்தனையாகவே இருந்தது.

.யாரிடமாவது கைமாத்தா  

பணம் வாங்கி வந்து கறி வாங்கி சமைக்கணும்.

மகன் வந்தா எப்படியும் ஒரு ஐந்நூறு

 ரூபா துட்டாவது கையில தராமலா 

போயிடுவான்...?
சாயங்காலம் திருப்பி கொடுத்துறலாம்...

மனம் என்னென்ன கணக்கெல்லாமோ  

போட்டு வைத்தது.

 எவ்வளவு நேரமாயிற்று....

பழைய நினைப்பு வந்ததில்

 நேரம் போனதே தெரியல..
கையில் பாத்திரங்களை அள்ளி 

வீட்டுக்குள்  அடுக்கி வைத்துவிட்டு

முந்தானையில் கையைத் துடைத்தபடி 

வெளியில் வந்தார்.

யாரிடம் போய் ரூபாய் கேட்பது....?

கேட்க கூச்சமாக இருந்தது.

இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழியில்ல...
நேரே தம்பி வீட்டுக்குப் போனாள்..
காலையிலேயே அக்காவைக் கண்டதும்

" என்னக்கா காலையிலேயே வந்திருக்கா..."

 "  இல்ல தம்பி  ...என் மவன் இன்றைக்கு வர்றான்... "

 "  அப்பிடியா?... இன்றைக்கு கண்டிப்பாக வர்றானாக்கும்...

.யார் சொன்னா ? " தம்பியின் பேச்சில் ஒரு எளக்காரம் தெரிந்தது.
  "யார் சொல்லுவா.. நம்ம பெருமாளுதான் 

நேற்று  எங்கேயோ பார்தானாம்.

ஊருக்கு வரலையா...அம்மா தேடிகிட்டே இருக்காவ என்று சொன்னானாம். நாளை வாரேன் என்று

அம்மா கிட்ட சொல்லிடு என்று தம்பி

சொல்லி அனுப்பி இருக்கிறான் "

"இத நீ நம்புரியாக்கும்...  மாமியார் வீட்டுக்குப் போயிருப்பான்...இவன்

கேட்டுட்டானே என்பதற்காக நாளை வருகிறேன்

என்று சொல்லியிருப்பான். உன் மகன்

சொல்லுவதை தண்ணியிலதான் எழுதி

வைக்கணும்." சொல்லி சிரித்தார்

ராசம்மாவின் தம்பி.

ராசம்மாவால் எதுவும் சொல்ல முடியல...

தம்பி சொல்லுவதிலும் தப்பில்லை.

இப்படி பலமுறை வராமல் போயிருக்கிறான்.

இந்தமுறை எப்படியும் மகன் வருவான் என்ற

நம்பிக்கை இருந்தது.

  "  சரி உக்காரு.. நிக்க வச்சே பேசி கிட்டு இருக்கேன் .

.ராணி அக்காவுக்கு ஒரு தம்ளர் காப்பி கொண்டா..."

மனைவிக்கு குரல் கொடுத்தார் ராசம்மாவின் தம்பி.

"வேண்டாம் தம்பி..காப்பி குடிச்சுட்டுத்தான் வந்தேன்..."

"ஒருவாய் குடிச்சதுல வயிறு நெறஞ்சு போச்சாக்கும்..."

"   இல்ல.. தம்பி...
  ஒரு ஐநூறு ரூபா இருக்குமா....சும்மா தராண்டாம் கைமாத்தாதான்..." கூச்சத்தோடு

கேட்டார் ராசம்மா.

அதற்குள் காப்பியை நீட்டிய ராணி

", கையில ஒத்த ரூபா இல்ல அண்ணி.

கையில இருந்த பணத்தை எல்லாம் போட்டு

 நேத்துதான் யூரியா வாங்கிட்டு வந்துபுட்டாவ..."

என்றபடி கணவனின் முகத்தைப் பார்த்தாள்.
 "ஆமாக்கா...கையல பணமில்லை.

இருந்தா தரமாட்டேனா...

நீ ஒரு நாளும் கேட்காதவ கேக்குற... "

பணம் தரமுடியாது என்பதை வேறு மாதிரி

பேசி சமாளித்தார் ராசம்மாவின் தம்பி.

"அப்படி உங்களுக்கு என்ன செலவு?

கேட்டார் தம்பியின் மனைவி ராணி.

"ஒரு அவசரம்..சரி பரவாயில்லை.."
 ராசம்மாவுக்கு இதுக்கு மேல

 எங்கு போய் கேட்க என்று தெரியல...
 "வர்றேன் தம்பி...."எழும்பினார்.
 " காப்பிய குடிச்சிட்டுப் போ...".

காப்பியை வாயில் வைத்தார்.

காப்பி தொண்ட குழிக்குக் கீழே 

இறங்க மாட்டேன்னுட்டுது...
ஒருவழியா மருந்து குடிப்பதுபோல 

ஒரே மடக்காக குடித்துவிட்டு எழும்பினார்.
  " அண்ணி....அந்த சின்னத்தாயி வட்டிக்கு பணம்...கொடுக்காளாம்...கேட்ட உடனே தந்துருவா...ஆனால்...""

"என்ன ஆனால் ...."என்பது போல ராணி

 முகத்தைப் பார்த்தார் ராசம்மா.

" பத்து    வட்டிதான் ...தரும்போதே 

வட்டியை பிடிச்சுட்டுதான் தருவாளாம்..."

" ஆமாக்கா நானும் சொல்லணும்னு நெனச்சேன்... 

ராணி சொல்லிபுட்டா...நீ போய் 

அவகிட்டேயே கேட்டுப் பாறேன்."

  '  பார்ப்போம் 'என்றபடி வெளியில் வந்தார் ராசம்மா

சின்னத்தாயி வீட்டுக்குப் போவோமா... கால்கள் கீழத் தெருவுக்குப் போக தயங்கின.

சின்னத்தாயி கறார் காரி.

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசுவா ...

பணத்தை  திருப்பி கொடுக்கலைன்னா...
" நீங்க சோறு திங்கல... என் பணத்த வச்சிகிட்டு

 மறு சோலி பாரு "என்று வீட்டு வாசலுல 

நின்னு கத்துவா...
வேண்டாம்...வீட்டை நோக்கி நடந்தார்.

பாதி வழிதான் போயிருப்பார்.

கால்கள் திருப்பி இழுத்தன.
"போய் கேட்டுதான் பார்ப்போமே...

நம்மதான் நாளைக்கே திருப்பி கொடுத்துறலாமே...

திருப்பி கொடுத்துட்டா அவள் ஏன் பேசப் போறா..."
ஏதோ ஒரு உந்துதலில்  சின்னத்தாயி 

வாசலில் போய் நின்றார் ராசம்மா..
ராசம்மாவை பார்த்த சின்னத்தாயி மகள்,

."அம்மா புளியமரத்து வூட்டு காரக வந்துருக்காவ..."

என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.
 "அது யாருல ....அம்மா இல்லன்னு 

சொல்ல வேண்டியதுதான ..."

"அம்மா...சத்தம் போடாத கேட்கப்போவுது.."

"   கேட்கட்டும்....அது எந்த வூட்டுக்காரக ... நானும் பாத்துபுடியேன்..."கொண்டையை முடித்தபடியே 

வாசலுக்கு வந்தாள் சின்னதாயி.
"எக்கா நீங்களா....என்ன ஒருநாளும் வராதவுக வந்துருக்கிய....

வெளியிலே நிக்குறிய வாங்க வீட்டுக்குள்ள..."

தாழ்மையாகப் பேசினாள் சின்னத்தாயி.
"இல்ல சும்மாதான்..."வார்த்தைகள் வெளி வர முடியாமல் தொண்டைக்குள்ளேயே திக்குமுக்காடின.

  " என்னக்கா எதும் பணம் கிணம் வேணுமா..

.உங்களப் பாத்து அப்படி கேட்கப்புடாது...

என் வீட்டுக்கு வந்திருக்கியள அதான் கேட்டேன்..."

" ..ஒரு ஐந்நூறு ரூபா கிடைக்குமா...

சின்னத்தாயி...  இரண்டு நாளையில தந்துருவேன்...."


 "நீங்க தந்துருவிய...உங்க பிள்ள நல்ல வேலையில இருக்காவுள...
எக்கா...உங்க மவன்  வந்துபோயி இருப்பாவளா..."


"   இன்றைக்கு வர்றான்.." இப்போது குரலில் சற்று தெம்பு வந்தது.
"எவ்வளவு ரூபா வேணுங்கா ...".தாய் தராட்டும் மகன்கிட்ட ஒருநாள் வாங்கிபுடலாம் என்ற 

நம்பிக்கையில் பேசினாள் சின்னத்தாயி.

 "ஐந்நூறு ரூபா.."

"இவ்வளவுதானா....இதை கேட்கிறதுக்கா இவ்வளவு தயக்கம்.."?

கேட்டபடியே சுருக்கு பையைப் பிரித்து 

பணத்தை எடுத்தாள்.
" எல்லாருக்கும் வட்டிய புடிச்சுட்டுதான் கொடுப்பேன்... ஒருநாளும் கேட்காதவுக கேக்குறிய. அதான் வட்டி புடிக்கல.."என்றபடி பணத்தை எடுத்து ராசம்மாவிடம் நீட்டினாள்.
  பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்ட ராசம்மா "உடனே தந்துருவேன். 

பயப்பட வேண்டாம் ."என்றார்.

 "அட...போக்கா...நீ தந்துருவ... "

"   வாறேன்.. சின்னத்தாயி ..."வாய் சொன்னாலும்

 மனசுக்குள் ஏதோ ஒரு கவலை வந்து 

அப்பிக் கொண்டது.
வர்ற வழியிலேயே சமையலுக்கு

 வேண்டிய எல்லா சாமானும் வாங்கி வந்தார்..

ஓடி வந்து தடபுடலாக வேலையைப் பார்த்தார்.

அம்மியில் வைத்து அரைச்சு வச்சாதான் ருசியா

இருக்கும் என்று வயதான காலத்திலும்

மாங்கு மாங்கு என்று அம்மியில் வைத்து

அரைத்து குழம்பு வைத்தார்.

ஒருமணி நேரத்துக்குள்ள எல்லாம் முடித்தாயிற்று...

மணியும் பன்னிரண்டு ஆயிற்று..
கையைத்துடைத்தபடி தெருவை...தெருவை 

எட்டிப் பார்த்தார்
 அவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல 

கார் ஒன்று  வாசலில் வந்து நின்றது.
ராசம்மாவுக்கு உடம்பெல்லாம் படபடத்தது.

ஓடிப் போய் "வாய்யா..வா. .".என்றபடி

 கையைப் பிடித்தாள்.

" நல்லா இருக்கியாம்மா..."மருமகளையும்

 அழைத்தபடி வீட்டுக்குள் சென்றார்.
"எம்மா...வீட்டுக்குள் வருமுன்னே வாசனைஅசத்துது..
கறிக்குழம்பா அம்மா...
    என் அம்மா வச்சா இப்படித்தான் நாலு தெருவுக்கு மணக்கும் ."

வந்ததும் வராததுமாக அம்மா சமையலுக்கு

 வாழ்த்துப்பா வாசிக்க ஆரம்பித்தான்.
   'ம்ஊம்...'மனைவியின் முக்கல் காதில் விழவே அப்படியே அடங்கிப் போனான்.
    "அப்பா.... எங்க அப்பாவ காணோம்..."
"  எங்க போயிருப்பாரு... தோட்டத்துப் பக்கம் போயிருப்பாரு..."
"  ஆமா... தோட்டத்துல என்ன காய்கறி எல்லாம் விளைஞ்சுருக்கு...அப்பாகிட்ட பறிச்சுட்டு வரச் சொல்லணும..."
"  பறிச்சுட்டு வருவாரு...நீ கேக்கணுமா...அதுக்குத்தான் தோட்டத்துக்குப் போயிருப்பாரு..."
"  வா...நேரம் ஆகுதுல்ல...நீ சாப்பிடு... அப்பா வந்துடுவாரு..."
   " எம்மோ உன் சாப்பாட்ட   ஒரு புடி புடிச்சிற வேண்டியதுதான்..."சொல்லிவிட்டு நேரே போய்
    சாப்பிட உட்கார்ந்தான்..
    அதற்குள் அப்பாவும் கையில் கோணிப் பை நிறைய காய்கறிகளைச் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தார்.
    "தம்பி  எப்புடிப்பா இருக்க....

அம்மாதான் சதா புலம்பிகிட்டு இருப்பா...

அப்பப்போ ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப்போ.."

 "ம்..."என்றபடி அம்மாவைப் பார்த்தான்.
 அம்மா திரும்பி நின்றபடி தோள் சீலையால் 

கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்.
 "அம்மா...கொஞ்சம் குழம்பு ஊற்றுங்க..".பக்கத்தில் இழுத்தான்.

"என்னம்மா...கண்ணு சிவந்துருக்கு..."

 "ஒண்ணுல்லப்பா...நீ வாறான்னு கையால மசாலா அரைச்சேனா...ஒரப்பு கண்ணுல பட்டுட்டு..."மறுபடியும் கண்களைத் துடைத்தார்.
"கண்ணை கசக்காதுங்க....தண்ணி வச்சி கழுவுங்கம்மா..".எழும்பி வந்து

 கையைப் பிடித்தான்.
"கழுவுறேன்....கழுவுறேம்பா நீ சாப்பிடு..."என்றபடி வீட்டிற்குப் பின்னால் போய்  நின்று முகத்தைத் துடைத்தார்
 துடைக்கத் துடைக்க கண்ணீர்

 பொத்துக் கொண்டு வந்தது.
   
ஒரு செம்பு தண்ணீர் எடுத்து கழுவினாள்.  

 கண்ணீர் வந்த சுவடு தெரியாதபடி 

முந்தானையால் நன்றாக துடைத்தாள்.
 "ராசம்மா அங்க என்ன செய்யுற... 

புள்ளைக்கு இன்னும் சோறு வேணுமான்னு கேட்டியா"...

"இதோ வந்துட்டேன்... கொஞ்சம் கறி வைக்கட்டுமாப்பா"

 "போதும்மா...  திருப்தியா சாப்பிட்டாச்சி.."

 எழும்பி கை கழுவி விட்டு வந்தவன் "அப்போ நான் புறபடட்டுமா அம்மா..ஒரு அவசர வேலை

இருக்கு . "என்றபடி மனைவியைப் பார்த்தான்.
கணவன் சொல்லுக்குக் காத்திருந்தவள் போல 

"வரட்டுமா அத்த"..என்றாள் மருமகள்.
 ராசம்மா மகனின் முன்னால் வந்து நின்றார்.

 அப்பா கோணிப்பையைத் தூக்கி காரில் வைத்தார்.
  " அம்மா ...அப்போ கிளம்பட்டுமா...

.உடம்பை பத்திரமா பாத்துகோங்க..."
 என்று சொன்னபடியே மனைவியைப் பார்த்தான்.

அவன் பார்வையைப் புரிந்து கொண்டவள் போல,
 " இந்தாங்க அத்தை...கைச்செலவுக்கு 

வச்சுகிடுங்க.."

இருநூறு  ரூபா நோட்டை ராசம்மா

கையில் திணித்தபடி காரை நோக்கி 

நடந்தாள் மருமகள்.

மனைவியின் பின்னாலேயே போய் காரில் அமர்ந்து கொண்டு கையை அசைத்தான் மகன்.
 அம்மாவும் பதிலுக்கு கையில் இருந்த இருநூறு ரூபா நோட்டோடு சேர்த்து கையை அசைத்தார்.

இன்னும் முந்நூறு ரூபாய் யாரிடம் வாங்கி 

கடனை அடைப்பது என்பது மட்டுமே 

இப்போது ராசம்மா மனதில் இருந்தது.

   
    
   
 
    
    
    
    
    
    
      

Comments

  1. வருமையிலும் பாட்டியின் பாசம்

    ReplyDelete

Post a Comment

Popular Posts