வாழ்; வாழவிடு
வாழ்; வாழவிடு
பட்டாம்பூச்சியைப் பார்க்கும்போது அதற்கு வண்ணம் தீட்டிய ஓவியனைப் பாராட்டாமல் இருக்க முடிவதில்லை.
வண்ண வண்ண சேலை உடுத்தி பூக்களுக்குப் பூ பறந்து சென்று
"உன்னைவிட நான் ஒன்றும் அழகில் குறைச்சல் கிடையாது "என்று தம்பட்டம் அடிக்கும்.
தொடர்ந்து ஓரிடத்திலேயே இருக்காமல் அங்குமிங்கும் சுற்றும்.
சிறுவர்கள் அதைப் பிடிப்பதற்காக அதன் பின்னாலேயே ஓடுவர்.
பிடிபட்டேனா பார் என்று பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து விளையாட்டுக் காட்டும்.
அதன் பின்னால் சற்றுதில் இருக்கும் இன்பமே அலாதிதான்.
ஒருமுறை சிறுவன் ஒருவன் தன் அப்பாவோடு பூங்காவிற்குச் சென்றான்.
அங்கு வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கின.
கூடவே வண்ணத்துப்பூச்சிகளும் போட்டிப்போட்டு அழகு காட்டின.வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டதும் சிறுவனால் சும்மா செல்லமுடியவில்லை.
அப்பா கையிலிருந்து கையை உருவி விட்டுவிட்டு வண்ணத்துப் பூச்சிகளை நோக்கி கைகளை நீட்டியபடி ஓடி்னான்.
வண்ணத்துப்பூச்சி அகப்பட்டேனா பார் என்று போக்குக் காட்டியபடி பறந்து சென்று இன்னொரு பூவின் மீது அமர்ந்து கொண்டது.
சிறுவனும் விடுவதாகத் தெரியவில்லை.
பின்னாலேயே ஓடி ..ஓடி எப்படியோ பட்டாம்பூச்சியின் இறக்கையைப் பிடித்துவிட்டான்.
பிடித்த வேகத்தில் ஒற்றை இறக்கை கையோடு வந்துவிட ஒற்றை இறக்கையை இழந்த பட்டாம்பூச்சி பரிதாபமாக கீழே விழுந்தது.
அதற்கு மேல் பட்டாம்பூச்சியால் பறக்க முடியவில்லை.
கீழே கிடந்த பட்டாம்பூச்சியைப் பார்த்த சிறுவனுக்கு ஒன்றுமே பேச முடியவில்லை.
சிறுவனின் அப்பா ஓடி வந்து "டேய்...டேய்...பார்த்தாயா...
அதுபாட்டுக்குப் பறந்து கொண்டிருந்தது இப்படி பண்ணிவிட்டாயே"
என்று கோபப்பட்டார்.
கைகளில் தூக்கி வைத்து தடவிக்கொடுத்தார்.
சிறுவனுக்கு அதற்குமேல் எதுவுமே பேச முடியவில்லை.
அதுவரை அனைவருக்கும் அழகு காட்டிக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி இப்போது பாவப்பட்ட ஜீவனாகிப் போனது.
இப்போது சிறுவனால் பட்டாம்பூச்சி பறக்கும் போது கிடைத்த சந்தோசத்தைப் பெற முடியவில்லை.
ஏதோ ஒரு குற்ற உணர்வு வந்து குமைய ஆரம்பித்தது.
இப்படித்தான் நாமும் பல நேரங்களில் செய்யக் கூடாதவற்றைச் செய்துவிட்டு மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டு நின்றிருப்போம்.
பட்டாம் பூச்சி பறப்பதைப் பார்ப்பது தான் மகிழ்ச்சி.
மயில் ஆடுவதைக் காண்பது மகிழ்ச்சி.
குயில் பாடுவதைக் கேட்டு இன்புறுதல் மகிழ்ச்சி.
.குயிலின் மீது கல்லைவிட்டு எறிதல் குயிலுக்கும் மகிழ்ச்சி தராது. நமக்கும் மகிழ்ச்சி தராது.
சிறுவன் ஒருவன் பட்டாம்பூச்சியைக் கையில் பிடித்நு வைத்துக்கொண்டு ஒரு சாமியாரிடம் சென்றான்.
"சுவாமி...சுவாமி...நீங்கள்தான் எல்லாம் அறிந்தவராயிற்றே..
அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்" என்றானாம்.
"கேள்...சொல்கிறேன்" என்றாராம் சுவாமிஜி.
"என் கைக்குள் ஒரு பட்டாம்பூச்சி இருக்கிறது. அது உயிரோட இருக்கிறதா...செத்துவிட்டதா என்று சொல்லுங்கள் என்றானாம்.
"இது என்ன பெரிய கேள்வி..
அது சாவதும் பிழைப்பதும் உன் கையில்தான் இருக்கிறது."
"அது எப்படி ?"என்றானாம் சிறுவன்.
" நீ கையைத் திறந்து விட்டால் ..அது பிழைத்துப் பறந்து போகும்.
நீ அப்படியே கையை அழுத்தி மூடிக்கொண்டால்...அது இறந்துவிடும் "என்றாராம்.
ஆமாம்..ஒரு உயிரை வாழ வைப்பதும் சாக வைப்பதும் நம் கையில்தான் இருக்கிறது .
பிற உயிர்கள் வாழ்வதைக் கண்டு இன்புற வேண்டும். அதில்தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது.
கண நேர சந்தோசத்திற்காக பிற உயிர்களை வதைத்தல் அந்த நேரத்தில் மட்டும் இன்பம் தரலாம்.
நாயைக் கல்லால் அடித்துவிட்டு அது வீல்...வீ்லென்று கத்திவிட்டு ஓடுவதைப் பார்த்து எத்தனைமுறை சிரித்திருப்போம்.
பள்ளியில் வேகமாக ஓடி வரும் நண்பனை கீழே விழத்தட்டி மகிழ்ந்திருப்போம்.
நண்பனில் சட்டையில் மையைத் தூவி சிரித்திருப்போம்.
ஆனால் இந்த மகிழ்ச்சி எத்தனை மணி நேரம் நீடித்திருக்கும்.
பிற உயிர்களை வாழ விடுவோம்.
அதுதான் மகிழ்ச்சி.
நமக்கும் அதுதான் நிரந்தர மகிழ்ச்சியாக இருக்கும்.
இனியும் வேண்டாமே விபரீத விளையாட்டு.
இந்த அற்பத்தனமான விளையாட்டோடு கொள்ளுவோம் பிணக்கு.
தொடங்கட்டும் உங்கள் வெற்றிக்கணக்கு.
Comments
Post a Comment