தந்தையர் தினம்
தந்தையர் தினம்
முந்நூறு நாள் சுமந்தவள் அம்மா.
தோள்மீது சுமந்து ,உலகம் காட்டி ,ஒவ்வொன்றாய் அறிய வைத்து,
நடைபயிற்றுவித்து,நன்மை தீமை அறிய வைத்து காலமெல்லாம் கூடவே நடப்பவர் அப்பா.
இப்படிப்பட்ட அப்பா இல்லை என்றால் நாம் இன்று இந்த நிலைமையில் இருந்திருக்கவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
அப்பாவின் சமபாதி அம்மா.
ஆனால் அன்பில் சமபாதி கிடைக்காத அப்பாவி குழந்தை அப்பா.
இதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா!
நினைவுபடுத்திப் பாருங்கள்....உண்மை என்ன என்பது புரியும்.
அமெரிக்காவின் வாசிங்டன் நகருக்கு அருகிலுள்ள ஸ்போகன்
என்ற இடத்தில் இதே போன்றதொரு ஞாயிற்றுக்கிழமையில்
தேவாலயத்தில் அன்னையர் தின சிறப்பு பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றது.
திரளான மக்கள் கூடியிருந்து போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பிராத்தனைக் கூட்டத்திற்கு சோனோரா என்ற பெண்ணும் வந்திருந்தார்.
அங்கே போதகர் அன்னையைப்பற்றிய சிறப்பு பண்புகளை மிகவும் பெருமையாக பேசினார்.
நெஞ்சம் நெகிழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சோனோரா.
அன்னைக்குச் சொன்ன அத்தனை பெருமைகளும் தகுதிகளும் என் தந்தைக்கு உண்டு என்பதை நினைத்துப் பார்த்தாள் சோனோரா.
தனது பதினாறு வயதில் தாயை இழந்த பின்னர் தன்னோடு பிறந்த ஆறு உடன்பிறப்புகளையும் வளர்க்க அப்பா பட்ட கஷ்டங்களையும் செய்த தியாகங்களையும் நினைத்துப் பார்த்தாள்.
அப்பா வில்லியம் சாக்சனை கௌரவிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
அதனால் 1910 ஆம் ஆண்டு ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாள்.
பின்னர் இந்த நாளையே தந்தையர் தினமாக கடைபிடிக்கலாமே என்ற ஒரு யோசனையும் வந்தது .அதையே பலரிடமும் பரிந்துரை செய்து முன்மொழிந்து வைத்தார்.
இப்படியாக சோனோரா தன் தந்தையை கௌரவப்படுத்த முதன்முதலாக தொடங்கியதுதான் தந்தையர் தினம்.
இது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதிருந்தது.
ஆரம்ப காலத்தில் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்பது போல முக்கியத்துவமில்லாத ஒரு தினமாகதான் தந்தையர்தினம் நினைக்கப்பட்டது.
சில பத்திரிகைகள் தந்தையர் தினத்தைக் கிண்டலும் நையாண்டியும் செய்து செய்திகள் வெளியிட்டன.
1913 ஆம் ஆண்டு இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
முதன்முதலாக அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் 1924 இல் தந்தையர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதை சட்டமாக கொண்டுவர 1930 ஆம் ஆண்டு ஒரு தேசிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
ஆனால் அதுவும் சட்டப்படி நடைமுறைக்கு வர 1966 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.
ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினத்திற்கு பெடரல் விடுமுறை என அறிவித்தார்.
1972ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்டு நிக்சன் ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுவதை உறுதி செய்தார்.
அந்தநாள்முதல் இன்றுவரை தந்தையர்தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அன்னையர்தினம் போன்று பிரபலமாக கொண்டாடுகிறோமா என்றால் ....
இல்லை என்றுதான் சொல்லுவேன்.
அம்மாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல வீடுகளில் அப்பாவுக்கு கொடுப்பதில்லை.
இதுவரை இல்லை என்றாலும் இனியாவது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அன்னையர் தினத்திற்கு இணையாக தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும்.
அப்பா உங்களை நேசிக்கிறேன்...ஒற்றை வரியில் அப்பாவின் மீதுள்ள அன்பைச் சொல்லி அப்பாவோடு நாள் முழுவதும் இருந்து மகிழ்ச்சி படுத்த வேண்டும்.
" மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் "
என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க பெருமையைத் தந்தைக்குப் பெற்றுத்தந்து பெருமிதம் சேர்ப்போம்.
"தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை "என்பதை நினைவில் வைப்போம்.
தாயோடு ஆறுசுவைபோம்
தந்தையோடு கல்விபோம்....
கல்வி அறிவைத் தந்த தந்தையை காலமெல்லாம்
மகிழ்ச்சியைத் தந்து பாதுகாத்திருப்போம்.
உயர வைத்து அழகு பார்த்த அப்பாவை உள்ளத்தில் வைத்து
தொழுதிருப்போம்.
பழுதில்லா அன்புடன் பக்கம் வைத்து பார்த்திருப்போம்.
நாளும் அன்பை தந்திருப்போம்.
தந்தையர்தின நல்வாழ்த்துகள்.
Comments
Post a Comment