கல்விக்கண் திறந்த காமராசர்
கல்விக்கண் திறந்த காமராசர்
ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள்.
கர்ம வீரர் காமராசர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் விதமாக அவர் பிறந்தநாளான ஜூலை15 ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2006 ஆம் ஆண்டு தமிழக அரசு அதற்கான ஆணையை வெளியிட்டது.
பள்ளிகளில் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
அதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
இளமைப் பருவம் :
" எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் "
அப்படியானால் கல்விக் கண் திறந்த காமராசரும் இறைவன் என்றால் மிகையாகாது.
ஆறு வயதில் தந்தையை இழந்தார். அதனால் மேலும் படிக்க முடியாத சூழ்நிலை.
குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய கட்டாயம். அதன் காரணமாக உறவினர் ஒருவரின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
பதினாறு வயதில் காங்கிரஸின் ஹோம் ரூல் இயக்கத்தில் சேர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபட்டார்.
விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
படிப்படியாக உயர்ந்து காங்கிரஸ் கட்சியில் உயர் பதவியை அடைந்தார்.
தான் பெறாத கல்வியை பாமர மக்கள் அனைவரும் பெற வேண்டும் என விரும்பினார்.
*• குருகுலக் கல்வி :
ராஜாஜி முதலமைச்சரானதும் குருகுலக் கல்வி முறையைக் கொண்டு வந்தார்.
அதன்படி ஐந்தாம் வகுப்பு வரைப் படிக்கும் பெண் பிள்ளைகள் மூன்று மணி நேரம் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற நேரங்களில் அவர்கள் தங்கள் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும்.
மாணவர்கள் தங்கள் குடும்பத் தொழிலைக் கற்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது ஊர்களில் துப்புரவுத் தொழில், சாலை அமைத்தல் ,கட்டடம் கட்டுதல் ஆகிய எல்லா வேலைகளிலும் தினமும் இரண்டு மணி நேரம் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த குருகுலக் கல்வி முறையை தந்தைப் பெரியார் எதிர்த்தார். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது.
காமராசர் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க தடையாக இருந்த இந்த திட்டத்தை எதிர்த்தார்.
இது காமராசர் 1954 இல் முதல்வராக ஒரு வாய்ப்பாக அமைந்தது.
• கிராமங்கள்தோறும் பள்ளி :
காமராசர் ஆட்சிக்கு வந்ததும் குருகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார். ராஜாஜி ஆட்சி காலத்தில் மூடப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் திறந்தார்.
அனைவருக்கும் பதினோராம் வகுப்புவரை இலவச கட்டாயக் கல்வி வழங்க வழிவகை செய்தார்.
முன்னூறு பேர் வசிக்கும் ஒரு கிராமத்திற்கு ஒரு ஆரம்பப் பள்ளி என்ற முறையில் கிராமங்கள்தோறும் பள்ளிகள் தொடங்கப்பட்டன
.மூன்று மைல்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இதன்மூலம் கிராம மக்கள் ஏராளமானோர் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.
மதிய உணவுத் திட்டம் :
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே "
கிராமப்புற மாணவர்களைப் பள்ளிகளில் கொண்டுவருவதற்காக மதிய உணவுத்திட்டம் என்ற மகத்தானதிட்டம் தொடங்கப்பட்டது.
இதன்மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
" அன்னதானம் என்பது தமிழர்களுக்குப் புதிதான ஒன்று அல்ல. இதுவரை வீடுகளுக்கு வந்தவர்களுக்கு அன்னதானம் அளிப்போம்.
இப்போதுபள்ளிகளைத் தேடி சென்று அன்னதானம் அளிக்கிறோம் "என்பார்.
" இந்த திட்டத்திற்காக ஊர் ஊராக சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் "என்றார் காமராசர்.
ஓராசிரியர் பள்ளிகள் :
" கிராமங்கள்தோறும் பள்ளிகள் திறக்கப்படும்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாகிவிடுமே "என அதிகாரிகள் தெரிவித்தனர்.
" அ -ன்னா ஆவன்னா சொல்லிக் கொடுப்பதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவையில்லை "என்று கூறி படித்தவர்களை ஓராசிரியர் பள்ளிகளில் நியமனம் செய்தார்.
அதன்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளில் அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார்.கல்வி சிறந்த தமிழ்நாடாக மாற்றியவர் காமராசர்.
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது.
எல்லா கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளி திறக்கப்பட்டது.
சீருடை :
கிழிந்து நைந்து போன ஆடைகளோடு பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்ற தாய்மாரின் புலம்பலைக் கேட்டார்.
அதற்கு ஒரு திட்டம் தந்தால் என்ன என்று யோசித்தார்.
பள்ளிகளில் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து வந்தால் ஏற்றத்தாழ்வு இல்லா நிலை ஏற்படும்.
பிள்ளைகளும் தாழ்வு மனப்பான்மை இன்றி படிக்க ஏதுவாக இருக்கும் என்று எண்ணினார்.
அதனால் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிகளில் ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இதன்மூலம் களையப்பட்டது.
உணவும் உடையும் கிடைப்பதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது.
பெண்கல்வி :
" ஏட்டையும் பெண்கள் படிப்பது தீதென்று
எண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுனிந்தார் "
என்ற மகாகவி பாரதியார் பாடலுக்கு ஏற்ப பெண்கள் படிக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்ட மனிதர்கள் தலை குனியும்படி பெண்கல்விக்கு ஊக்கம் அளித்தார்.
"கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்"என்பார்.
பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற குருகுலக் கல்வியைத் தடை செய்து பெண் பிள்ளைகளைப் பள்ளிகளை நோக்கி வர வைத்தார்.
பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகப்படுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
முதியோர் உதவித் திட்டம் :
ஒருமுறை சாப்பாடு தூக்கிச்செல்லும் வேலை செய்யும் ஒரு பெண் காமராசரைப் பார்க்க விரும்பினார்.
உதவியாளர் கையிலிருந்த இருபது ரூபாயைக் கொடுத்து அவளைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தார்.
அந்த பெண் பணத்தை வாங்க மறுத்ததோடல்லாமல் கண்டிப்பாக காமராசரைப் பார்க்க வேண்டும் என்றார்.
காமரசர் அந்தப் பெண்ணை அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அந்தப்பெண் காமராசரிடம் ,கை கால் விழுந்து வேலை செய்ய முடியாத நிலை வரும்போது எங்களைப் போன்ற யாதுமற்றவர்களுக்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என்று கூறி அழுதாள்.
"ஆகட்டும் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் காமராசர்.
வண்டியில் ஏறியதும் அந்தப்பெண் கூறியவை மனதில் வர "ஒண்டிக்கட்டைகளுக்கு மாதம் எவ்வளவு செலவாகும் "என்று உதவியாளரிடம் கேட்டார்.
உதவியாளர்" இருபது ரூபாய் ஆகும் "என்றார்.
மறுநாளே நாடு எங்கும் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் தகவல் திரட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பத்தே நாளில் முதியோர் உதவித்திட்டம் உருவானது.
அப்போது மாதம் இருபது ரூபாய் ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.
காமராசர் பற்றி பெரியார்.:
" இன்னும் பத்தாண்டுகள் காமராசர் ஆட்சி நீடித்தால் தமிழகத்தில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிடும்" என்றாராம் பெரியார்.
பெரியார் இறக்கும் தருவாயில் இருந்தபோது "பத்து ஆண்டுகளுக்காவது காமராசரைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
காமராசரைத் தவற விட்டுவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது" என்று மனம் நெகிழ்ந்து கூறியதாக கூறுவார்கள்.
எவ்வளவு பெரிய உண்மை பாருங்கள்.
"கல்வி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு காமராசர் வாழ்த்துப் பாட வேண்டும் "என்றார் பெரியார்.
| எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்."அப்படியானால்
கல்விக்கண் திறந்த காமராசரை கடவுள் என்று சொல்வதில் வியப்பு ஏதுமில்லை.
Comments
Post a Comment