நீதி சொல்லும் சேதி

       நீதி சொல்லும் சேதி

 மகனே உன் தகப்பன் புத்திமதியைக் கேள்

  உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே"
                                                    நீதிமொழிகள்  1 :8

எந்த பொருளின் மதிப்பும்  இருக்கும்வரை நமக்குத் தெரிவதில்லை.
     கைவிட்டுப் போன பின்னே அதைப்பற்றி  ஆகா...ஓகோ...என்று வானளாவ புகழ்ந்து கொண்டிருப்போம்.
     கிட்ட இருந்தால் முட்டப்பகை. தூர இருந்தால் சேர உறவு.
அறிவுரை என்றாலே காதுகளைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடுவோம்.
    அம்மா அப்பாவை பிள்ளைகள் வெறுக்கிற ஒன்று உண்டென்றால் இந்த அறிவுரைக்காக மட்டுமாகத்தான் இருக்கும்.
    வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது.
    கேட்பதற்காகவே காதுகளை இறைவன் திறந்தே படைத்தாராம்.
    எதைக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை. உன் தகப்பனின் புத்திமதியைக்கேள்.அது அனுபவத்தின் சாறு.
   
    தாய் சொல் தட்டாதே.அது உன்மீது கொண்ட அக்கறையினால் சொல்லப்படும் வார்த்தைகள்.
    பெற்றோர் சொல் கேட்டுட்டா மட்டும் என்ன கிடைக்கும்
     என்று கேட்க தோன்றும்.
    கேட்டுப்பார்.உண்மை புரியும்.
    "அவை உன் சிரசுக்கு அலங்காரமான முடியும்
    உன் கழுத்துக்கு சரப்பணியுமாய் இருக்கும்."

                           நீதிமொழிகள்  1  : 9
     "தாயில் சிறந்த கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."
     பெற்றோரை மதிப்போம்.பெற்றோர் சொல் கேட்போம்.
     "விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவதில்லை."
     இன்றைய நீதி சொல்லும் சேதியில் விதைக்கப்பட்ட நீதி  கண்டிப்பாக கனி தரும் விதையாக இருக்கும்.
         நாள் முழுவதும்  இதை உள்ளத்தில் வைத்து தியானி.
         தேவனால் உனக்காக இன்று சொல்லப்பட்ட வார்த்தை இது என்பதை நம்பு.
         அதன்படி நடக்க கற்றுக்கொள்.
         இன்றுமட்டுமல்ல என்றும் அது உன் பாதைக்கு நல்தீபமாய் இருந்து வழி நடத்தும்.

ஆமென்.

Comments

Popular Posts