நேர்மறை எண்ணம்
நேர்மறை எண்ணங்கள்
எண்ணம் போல வாழ்வு என்பார்கள்.
"நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"என்றார் சுவாமி விவேகானந்தர்.
நாம் பேசும் பேச்சு செயல் யாவும் நேர்மறையாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் நடப்பவையும் நன்றாகவே நடக்கும்.
* சூழ்நிலையை சாதகமாக்குங்கள்.
சூழ்நிலை சரியாகவே இல்லை.நாம் அன்றாடம் காண்பவை யாவும் தாறுமாறாக இருக்கிறது.
கேட்பவை யாவும் சகிக்க முடியவில்லை.
நம்மைச்சுற்றி நடப்பவை யாவும் விரும்பத் தகாததாகவும் தவறானதாகவுமே இருக்கிறது.
"நம்மால் மட்டும் எப்படி நேர்மறை சிந்தனையாளராக இருக்கமுடியும்?"
இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
இவற்றை எல்லாம் கடந்து நம்மை நாமாக செதுக்கிக் கொள்வதுதானே சிறப்பு.
சூழ்நிலைகளை சாதகமாக்கும் சூட்சுமத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும்.
இதற்காக பெரிதாக ஒன்றும் மெனக்கெடத் தேவை இல்லை.
சின்ன சின்ன முயற்சி எடுத்துக் கொண்டால் போதும்.
* தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி வீசுங்கள்:
முதலாவதாக நமக்குள்ளே உள்ள தாழ்வான எண்ணத்தைத் தூக்கி வீச வேண்டும்.
நாளை பேச்சுப் போட்டிக்குச் செல்ல வேண்டும்.
முதல்நாள் இரவே கை கால் எல்லாம் உதறல் எடுக்கும்.
நான் நன்றாக பேசுவேனா?.... மாட்டேனோ?.. மனதிற்குள் ஒரு போராட்டம்.
சரியாக பேசவில்லை என்றால்....எல்லோரும் சிரிப்பார்களே....இப்படி வீணான பயம்.
இப்படிப்பட்ட மன நிலையில் சென்றால் நம்மால் கண்டிப்பாக சரியாக பேச முடியாது.
பள்ளி விடுதியில் உணவுக்குப் பின்னர் நடைபெறும் பிரார்த்தனை வேளை.
நாலுவரி சொன்னால் போதும்.நாற்பது பேருக்கு முன்னால் பிரார்த்தனை பண்ண வேண்டும்.
ஆறேழு முறை தன் தோழியிடம் ஒத்திகையும் பார்த்தாயிற்று.
சரியா சொன்னேனா.....சரியா சொன்னேனா....தோழியிடம் ஆயிரம் முறை கேள்வி.
இறுதியாக அந்த வேளையும் வந்தது.
இரண்டு வரிதான் சொல்லி இருப்பாள்.கெக்கே...கெக்கே...என்று சிரித்து விட்டாள்.
பிரார்த்தனையில் இருந்தவர்கள் எல்லோரும் கண்களைத் திறந்து என்ன என்பது போல் பார்த்தனர்.
தோழியிடம் ஒப்பித்தவை நினைவுக்கு வர வந்தது அவமானம்.
நாலுபேர் மத்தியில் என்னால் எப்படி பேச முடியும் என்று நம்மை நாமே தாழ்வாக எண்ணிக் கொண்டால் இப்படித்தான் முடியும்.
முதலாவது நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி வீச வேண்டும்.
* கடந்த கால சிந்தனைகள் வேண்டாம் :
" நன்றாக பேசுவேன் "என்ற நம்பிக்கை நமக்குள்ளே எழும்போதுதான் நம்மால் சரியாக பேச முடியும்.
பொறுப்பு உங்கள் கையில் இருக்கும்போதுதான் பலன் நல்லபடியாக இருக்கும்.
நமது மனது எப்போதும் நிகழ்காலத்தைச் சுற்றிச் சுற்றியே வரும்.
சிந்தனைகள் நிகழ்காலம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.
நாளை...நாளை என்பது நீர்த்துப் போனதாகவே இருக்கும்.
காலுக்குள்ளே பல்லி....என்று நண்பர் கத்துனதுதான் தாமதம்
எங்கே பல்லி...எங்கே பல்லி என்று நங்கு நங்கென்று குதிக்க ஆரம்பித்து விடுவோம்.
நேற்று இந்த இடத்தில் பல்லி இருந்தது என்று சொன்னால்...அங்கேயும் இங்கேயும் திரும்பிப் பார்த்துவிட்டு அப்படியே கூலாகி விடுவோம்.
நாளை பல்லி வரும் என்று சொன்னால்....நாளைதானே வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் .
அப்படியா..என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டுப் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டோம்.
நம் செயல்கள் நிகழ்காலம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.
* பொறுப்பைக் கையில் எடுங்கள்
" ஒன்றே செய் ;நன்றே செய் ;நன்றும் இன்றே செய்."
படிப்பா...இதோ இப்போதே ...படித்து முடித்துவிடுவேன்.
வேலையா..இப்போவே. ...செய்து முடித்த பின்னர்தான் மறுவேலை....
கடைக்குப் போகணுமா?....இதோ ஒரு நொடியில் வாங்கி வருகிறேன்.
இப்படி எல்லாம் இன்ஸ்டென்ட் ஆக நிகழ்த்த வேண்டும்.
எல்லாமே நம்மைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.
அந்தப் பொறுப்பை உங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். " தன் கையே தனக்கு உதவி "
எப்போது பொறுப்பு உங்கள் கையில் வந்ததோ கண்டிப்பாக காரியம் நல்லபடியாகவே நடந்து முடியும்.
* நேர்மறை பதில்கள் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் :
கடையில் போய் "வற்றல் வேண்டும் "என கேட்கிறோம்.
கடைக்காரர் "மல்லி இருக்கிறது. சீரகம் இருக்கிறது .
கடுகு இருக்கிறது" என்கிறார்.
எது கேட்டோமோ அது அவரிடம் இல்லை .
'இல்லை' என்ற சொல்லுக்குப் பதிலாக எதெல்லாம் இருக்கிறது என்று நேர்மறையாகப் பட்டியலிட்டுப் பேசி வியாபாரம் செய்கிறார்.
கணக்கா....கணக்குக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.
ஆங்கிலமா..அதைப்பற்றி என்னிடம் பேசவே பேசாதிங்க ...எனக்கும் ஆங்கிலத்துக்கும் ரொம்ப தூரம்.
வரலாறா... ரொம்ப ரொம்ப போரு....அதைப்போய் எவன் படிப்பான்?
இப்படிப்பட்ட எதிர்மறையாகப் பேசுவதைத் தூக்கி வீசிவிட்டு நேர்மறை சிந்தனைக்கு மாறுங்கள்.
"நான் நன்றாக படிக்கிறேன்.நல்ல மார்க் வாங்குவேன்."
பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நேர்மறையாக இருக்க வேண்டும்.
முடிவை நோக்கி அல்ல. தொடக்கத்திலிருந்து சிந்தனை புறப்படட்டும்.
* எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்.
" உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நன்று"
என்றார் வள்ளுவர் .
நம் எண்ணம் உயர்வானதாக நேர்மறையானதாகவும் இருக்கட்டும்.
"நீங்கள் பலவீனமாவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால் பலமற்றவர்களாகவே ஆகிவிடுவீர்கள்.
பலம் பொருந்தியவர்கள் என்று எண்ணினால் பலமுடையவர்கள் ஆகிவிடுவீர்கள்."
என்றார் விவேகானந்தர்.
நம்மை பலமுடையவர்களாக்குவதும் பலவீனர்களாக்குவதும் நம் எண்ணங்களே.
நடப்பவை யாவும் நல்லவையாகவே நடக்கும் என்று எண்ணுங்கள்.
* விலங்குகள் சொல்லித்தரும் பாடம்:
எறும்பு என்னை மிதித்து விடுவார்களே என்று எதிர்மறையாக எண்ணினால் வெளியில் ஊர்ந்து சென்று இரை தேட முடியுமா?
புலி கொன்றுவிடுமே என்று நினைத்தால் மான்கள் காட்டில் சுற்றித் திரிய முடியுமா?
தேனடையை எடுத்துச்சென்றுவிடுவார்களே ...நான் ஏன்தேனை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைத்தால் தேனீக்களால் கூடு கட்டி தேனை சேமித்துதான் வைக்கமுடியுமா?
எல்லாம் நன்றாய் நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் விலங்குகள் தமது அன்றாட செயல்களில் ஈடுபடுகின்றன.
விலங்குகளுக்கே அந்த நம்பிக்கை இருக்கும்போது ஆறறிவுள்ள
நமக்கு இல்லாமல் போய்விடுமா என்ன!
*நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை:
" எது நடந்ததுவோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது .எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்." என்பதை மனதில் வைத்து முன்னேறுங்கள்.
இதற்குமுன் இதைச்செய்ததே இல்லை என்பதற்குப் பதிலாக புதிதாக ஒரு விசயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்று புதிய கோணத்தில் யோசிப்போம்.
நல்லதே நடக்கும். நன்றாகவே நடக்கும் என்ற நேர்மறை சிந்தனையோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோம்.
எல்லா நாளும் இனிய நாளாகவே அமையும்.
👍 👍 👍 👍 👍 👍 👍
Comments
Post a Comment