தாத்தா புளியமரம்

     

                         தாத்தா புளியமரம்


    முகிலன்,பாலன் இருவரும் அண்ணன் தம்பிகள்.
       இருவரும் நாள்தோறும் பள்ளிக்கூடம் செல்லும்போது தாத்தாவிடம் போய் பத்து பைசா வாங்கி விட்டுதான் செல்லுவர்.
       தாத்தாவும் பத்துப்பைசாவை கையில் கொடுத்து "நல்லா படிச்சுட்டு  வாங்க" என்று வாழ்த்துச்  சொல்லி அனுப்பி வைப்பார்.
       மாத கணக்காக இதுதான் நடந்து கொண்டிருந்தது.
       ஒருநாள் தாத்தா பத்துப்பைசாவோடு சேர்த்து ஆளுக்கொரு புளியங்கொட்டையையும் கையில் கொடுத்தார் .
       ஒத்த புளியங்கொட்டையை வைத்து என்ன செய்ய முடியும்?
       பள்ளிக்கு செல்லும் வழியில் இந்த ஒத்த புளியங்கொட்டையை வைத்து என்ன செய்வது என்று தூர வீசிவிட்டு சென்றான் பாலன்.
     ஆனால் பாலனைப்போல முகிலனுக்கு  புளியங்கொட்டையை எளிதில் தூர வீசிவிட மனம் வரவில்லை.
     தாத்தா ஆசையோடு தந்த புளியங்கொட்டை.
      தாத்தா தரும் பத்து பைசாவையும்கூட முகிலன் வீணாக செலவளிப்பதில்லை.
      உண்டியலில் சேர்த்து சேர்த்து  வைத்திருந்தான்.
  இந்த புளியங்கொட்டையும்  வீணாக போய்விடக் கூடாது.
      அதனால் பள்ளிகளில் இருந்து வரும் வழியில் ரோட்டு ஓரமாக ஒரு குழி தோண்டி புளியங்கொட்டையைப் புதைத்து வைத்தான்.
     நாளும் பள்ளியில் இருந்து வரும்போது வாட்டர் பாட்டிலில் மிச்சம் இருக்கும் தண்ணீரை அதில் ஊற்றுவான்.
  . சில நாட்களில் புளியங்கொட்டை  முளைவிட ஆரம்பித்தது.
  முகிலன் மனதில் மகிழ்ச்சி.
  இன்னும் சில நாட்களில்  தளிரை அனுப்பி மெதுவாக உலகை எட்டிப் பார்த்தது.
     முகிலனுக்கு ஏதோ நல்லது செய்துவிட்டது போன்று மகிழ்ச்சி தாழவில்லை.
     தாத்தாவின் அன்பு புளியமரமாக  வளர்ந்து வருவது போன்றதொரு நெகிழ்ச்சி.
   முகிலன் வளர வளர புளியமரமும்  கூடவே வளர்ந்து வந்தது.
     கூடவே வரும் பாலன் இது எதையும் கண்டு கொள்வதே இல்லை.
     தன் வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரைத் தாறுமாறாக அடுத்த மாணவர்கள் மேல் ஊற்றி விளையாடுவான்.
    ஆண்டுகள் பல கடந்தன.புளிய மரம் நெடுநெடுவென்று கிளைகளை விரித்து சிரத்து நின்றது.
    இப்போது இருவரும் படிப்பதற்காக வெளியூர் சென்று விட்டனர். புளியமரம் வளர்ந்து பலன் கொடுக்கத் தொடங்கியது.
      ஆனால் ஒருநாள் தாத்தா நம்மைவிட்டு சென்றுவிட்டார் என்ற கடிதம் வந்தது.
     முகிலன் அப்படியே நொறுங்கிப் போய்விட்டான்.
     தாத்தாவை இனி எப்போதும் காண முடியாதா....மனம் அழுதது.
என்ன செய்வது...எல்லாவற்றையும் கடந்துதான் ஆக வேண்டும்.நண்பன் வந்து தேற்றினான். ஆனாலும் மனம் கேட்கவில்லை.
படிப்பு முடிந்து ஊருக்கு வந்தான்.
ஊர் தாத்தா இல்லாது வெறுமையாக இருப்பதுபோல் உணர்ந்தான்.         இப்போது தாத்தா இல்லை.
  தாத்தா புளிய மரம் மட்டும் நான் இருக்கிறேன் என்பதுபோல முகிலனோடு உறவு கொண்டாடி நின்றது.
  முகிலனுக்கு   எப்போதாவது தாத்தா ஞாபகம் வந்தால் புளிய மரத்தின் கீழ் வந்து அமர்ந்து கொள்வான்.
     பார்ப்பவர்கள் எல்லாம்" என்ன  தாத்தா புளிய மரத்தோடு பேசுறியா" கிண்டலடித்தனர்.
     ஆமாம்....உள்ளபடியே புளியமரத்தின்கீழ் அமர்ந்தால்  முகிலனுக்கு தாத்தாவோடு இருப்பது போன்ற உணர்வு இருப்பதாக சொல்லுவான்.
     அது தாத்தா புளியமரம்தான்.
    
      

Comments

Popular Posts