முயலின் கனா

                         முயலின் கனா


வானத்தைப் பார்த்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது முயல்.
   வானத்தில் ஓடும் குட்டிக்குட்டி மேகங்கள் தன்னைப் போன்றே இருப்பதைப் பார்த்து வியந்து போனது.
    எங்கே இந்த மேகங்கள் ஓடுகின்றன?
    அப்பப்பா...என்ன வெண்மை...என்னைவிட வெண்மையாக இருக்குமோ ?
    தொட்டுப் பார்த்துவிட ஆசை. ஆனால் முடிகிற காரியமா என்ன?
    எப்படி வானத்திற்குப் போக முடியும்.
    ஏணி வைத்தால் கூட எட்டாதே.
    இன்று எப்படியாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும் .ஆசை ஆசையாக  மேகத்தையே பார்த்தது.
    எட்டி நின்று தன் குட்டிக் குறும்பால் சுண்டி இழுத்து என்னை தூங்க விடாமல் செய்கிறதே .
    இந்த மேகங்களுக்குத்தான் எத்தனை குறும்பு.
    அப்படியே ஏதேதோ  சிந்தனையில் அசந்து தூங்கிப் போனது.
    சற்று நேரத்தில் ஒரே தாவல்.... வானத்தைப் போய் சேர்ந்தது முயல்.
    பக்கத்தில்  மேகக் கூட்டம். 
    "ஆ...இது எப்படி சாத்தியமாயிற்று?"
    "யார் கொண்டு விட்டது?".ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் அப்படியே நின்றது.
    மறு நிமிடம் தொட்டுவிடலாமா....
       ஒரு சின்ன தயக்கம் வந்து முட்டுக்கட்டை போட  சற்று ஒதுங்கியது.
       மேகக் கூட்டம்  தன்னை கடந்து செல்லவும் ....கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட மனமில்லை .மெதுவாக முன்னங்காலை நீட்டியது.
      " யார் நீ ?...".என்ற அதிரும் குரல் அதற்கு மேல் முயலை நகர விடாமல் தடுத்தது.
       ஒரு நிமிடம் வெடவெடத்துப்போன முயல் அப்படியே நின்றது.
      " யார் நீ ...கேட்பது காதுல விழல..."
      " நான்தான் முயல் "ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தை வரவழைத்து பதிலளித்தது  முயல்.
       "முயல் என்றால்..."
      " என்ன கேட்கிறீங்க....எனக்கு புரியல..."
      " முயல் என்று மொட்டையாக சொல்லி விட்டால்..."
      " வேறு எப்படி சொல்லணும் ..".அப்பாவியாக கேட்டது முயல்.
      " பெயரைச் சொன்னதுமே புரிந்து கொள்வதற்கு நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?"
        முயலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
      " ஆமாம்...நீ எங்கிருந்து வருகிறாய்?"
      " பூமியிலிருந்து வருகிறேன்."
       "பூமியில் இருக்கும் உனக்கு இங்க என்ன வேலை ?"
      " சும்மாதான்..... சுற்றிப் பார்பதற்கு வந்தேன்."
      " பார்த்துப் போவதற்கு இதென்ன சுற்றுலா தலமா?"
     " சும்மா...."இழுத்தது் முயல்.
     " இந்த சும்மா ...கிம்மா எல்லாம் இங்க வேண்டாம்...
       போ..போ...திரும்பிப் போ..இங்கே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை."
       பேசாமல் நின்றது முயல்.
      " போ என்றால் போக மாட்ட... இங்கே உனக்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காது" துரத்துவதிலேயே குறியாக இருந்தது மேகம்.
        அதற்குமேல் என்ன பேச முடியும்?
        சரி என்பது போல சற்று பதுங்கியது முயல்.
       மேகக்கூட்டம் மறுபடியும் ஓட ஆரம்பித்தது.
       முயலும்  விட்டேனா பார் என்பது போல பதுங்கி பதுங்கி மேகத்தின் பின்னால் சென்றது.
       அப்போது எதிரே வந்த காகம்  ஒன்று முயலைக் கண்டுவிட "முயலண்ணா  ஏது இந்த பக்கம் ...? " குரல் கொடுத்து நிறுத்தியது.
     "  அத தெரிஞ்சு நீ  என்ன பண்ண போற...சும்மா போவியா " நக்கலாக சொல்லியபடி நகர்ந்தது முயல்.
      " எங்க ஓடுறீங்க...நில்லுங்க..". என்று  மறுபடியும் தடுத்து  நிறுத்தியது காகம்.
       "ஏன்  என்னை நிறுத்தினா... உனக்கு என்ன வேணும்?"
      " அப்படி என்ன மேகத்திற்குப் பின்னால் ஓட்டம் ."
      " கண்டிப்பா உனக்கு தெரிஞ்சுக்கணுமா ..."
    "  இல்ல...சும்மா கேட்டேன்."
    "மேகத்தைத் தொடப் போறேன் .போதுமா...என்ன தடுக்காத..."
       நில்லாமல் ஓடியது முயல்.
     "  இப்போதும் பின்னால்தான் ஓட்டமா...
       ஆமையிடம் தோற்றது போதாதா..." சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தது காகம்.
         " என்ன சொன்னா.....என்ன சொன்னா....இன்னொருமுறை சொல்லு..."
       வீறாப்பு கொண்ட முயல் ஒரே தாவலாக காகத்தின்மீது தாவ... அவ்வளவுதான்.....அம்மா....வீல்...என்ற கத்தல் காடே அதிர்ந்து போனது.
      அருகில் இருந்த முள்ளின்மீது விழுந்து  வலியால் துடித்துக் கொண்டிருந்தது  முயல்.
    "  எங்க காகத்தைக் காணோம்...
        அத்தனையும் கனவா....
      கனவிலும் கோபம் கூடாதப்பா..."புலம்பியது முயல்.
       
       
       
    

Comments