நல்ல சமாரியன் யார் ?

                      நல்ல சமாரியன் யார் ?


ஒரு குட்டிக் கதை சொல்லப்போகிறேன் .
இன்று டிரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மேட்டர் இதுதான்.
ஆளாளுக்கு குட்டிக்கதை சொல்லப் போகிறேன் .
குட்டி...குட்டி..கதை சொல்லப் போகிறேன் என்று கிளம்பிவிட்டார்கள்.
      பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் சுவாரசியத்தை ஏற்படுத்த குட்டிக் கதைகளைச் சொல்வது வழக்கம்.
      குட்டிக் கதைகள் இல்லா அரசியல் மேடைகள் இல்லை.
     இன்று தாங்கள் சொல்ல வந்த கருத்துக்கு சம்பந்தமே இல்லாமல் எல்லோரும் குட்டிக்கதைகள் சொல்ல கிளம்பிவிட்டார்கள்.
      இப்போது குட்டிக்கதைகளின் காட்டில் மழையோ மழை ....அடை மழை.            
      ஆனால் இந்த கதை சொல்லும் போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
      பைபிளில் ஏசு கிறிஸ்து பல குட்டிக்கதைகளைக் கூறியிருப்பதை நாம் வாசித்திருக்கிறோம்.
       உவமைகள் மற்றும் கதைகள் மூலமாக கூறும்போது எளிமையாக தான் சொல்ல வந்த கருத்தை மக்களிடம் பதிய வைக்க முடியும்.
     இப்படி சொல்லப்பட்ட கதைதான்  பைபிளில் வரும் நல்ல சமாரியன் கதை.
         அன்பு உள்ளத்தில் சுரக்கப்பட வேண்டும்.
   சுருட்டப்பட்டுக் கிடக்கக்கூடாது.
   எல்லோரிடத்திலும் கண்டிப்பாக அன்பு இருக்கும். அது இரண்டுவகையான அன்பாக இருக்கும்.
      ஒன்று இறையன்பு .
      மற்றொன்று பிற  உயிர்கள்மீது கொள்ளும் அன்பு.
      இறையன்பு நிரம்ப இருக்கும் ஒருவரிடம் பிறர் மீது கொள்ளும் அன்பு தாராளமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
      பிறர் மீதுள்ள அன்பு குறைபடக் காரணம் சுயநலம்தான்.
      நாம் ஒருபோதும்  சுயநலவாதியாக இருக்கக்கூடாது .
    
     நல்ல சமாரியன் கதையை இயேசு சொல்லுவற்கு காரணம்
  அவரைச் சுற்றி இருந்தவர்களிடம் காணப்பட்ட சுயநலம்தான்.
     ஒருமுறை இயேசுவைச் சோதித்துப் பார்க்க விரும்பிய ஒரு நியாயசாஸ்திரி "போதகரே ! நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும் "என்று கேட்டார்.
     அவன் வேண்டுமென்றே கேட்கிறான் என்பதை அறிந்து கொண்ட இயேசு,
    "நியாயப் பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று நீ வாசித்ததில்லையா" என்று கேட்டார்.
     "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்  முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் முழு சிந்தையோடும் அன்பு கூர்ந்து உன்னிடத்தில் அன்பு கூர்வதுபோல பிறரிடத்திலும் அன்பு கூர்வாயாக  என்று எழுதி இருக்கிறது "என்றார் அந்த நியாயாதிபதி.
      "அப்படியே செய் .அப்போது நீ பிழைப்பாய் "என்றார் இயேசு.
    
    இயேசுவின் பதிலில் திருப்தி அடையாத அந்த மனிதர்
     இயேசுவை நோக்கி "பிறனிடத்தில் அன்பு கூர்வாயாக என்று கூறுகிறீர்களே அந்த பிறன் அதாவது அயலான்  யார் "என்று கேட்டார்.
    அப்போதுதான் இயேசு இந்த குட்டிக்கதையைக் கூறுகிறார்.

  ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோ பட்டணத்திற்குப் போய்க் கொண்டிருந்தான்.
போகும்வழியில்  கொள்ளையர்கள் கையில் மாட்டிக் கொண்டான்.
கொள்ளையர்கள் அவனிடமிருந்த எல்லா பொருட்களையும் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துப் போட்டனர்.
  கிட்டதட்ட சாகும்நிலையில் இருந்த அவனை அப்படியே தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
அந்த மனிதன் கீழே விழுந்து  வலியால் துடித்துக் கொண்டிருக்கிறான்
      அப்போது அந்த வழியாக மத போதகர் ஒருவர் வருகிறார்.
      அந்த மனிதனின் புலம்பல் சத்தம் கேட்கிறது.
      இது என்ன சத்தம்....திரும்பி பார்க்கிறார்.
      அங்கே சாகும் நிலையில் ஒரு மனிதன்...இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்.
      மத போதகருக்கு போதனையைத் தவிர வேறு எதுவும் இப்போது மனதில் இல்லை.
      அந்த மனிதனைப் பார்த்ததும்... பார்த்தும் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார்.
      அடுத்து லேவியர் அதாவது ஆலய பணிகளைச் செய்கிற இன்னொரு மனிதர் அந்த வழியாக வருகிறார்.
      ஐயோ....பாவம் .யார் இந்த கொடிய காரியத்தைச் செய்தது?
      அதற்குமேல் அவருக்கு எதுவும் செய்ய தோன்றவில்லை.
      எனக்கு ஆலயப்பணிகள் ஏராளம் உள்ளன...
      இதில் நின்று நேரத்தைப் போக்க விரும்பவில்லை.
      தானுண்டு தன் வேலை உண்டு என்பதுபோல எனக்கென்ன என்று எதிர் பக்கமாக திரும்பி போய்விட்டார்.
      மூன்றாவதாக சமாரிய தேசத்து மனிதர் ஒருவர் அந்த வழியாக வருகிறார்.
      முனங்கல் சப்தம் கேட்டதும் ....தன் கழுதையிலிருந்து இறங்கி வந்து சுற்றுமுற்றும் பார்க்கிறார்.
      பார்த்ததும் பதறிப்போய் அருகில் சென்று பார்த்தால்...அங்கே ஒரு யூதர் ...உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட ...சொட்ட கிடக்கிறார்.
      அடிபட்டுகிடப்பவர் யூதர் என்றுகூட பார்க்கவில்லை.
      அப்படியே தூக்கி காயங்களின்மேல் எண்ணெய் பூசி திராட்சை மதுவை ஊற்றி கட்டு போடுகிறார்.
      அதோடு அவனை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட மனமில்லை.
      தன் கழுதைமேல் ஏற்றி ஒரு சத்திரத்தில் கொண்டு சேர்க்கிறார்.
      சேர்த்ததோடு தன் பங்கு முடிந்தது என்று இப்போதும் செல்லவில்லை.
      சத்திரக்காரனிடம் இரண்டு வெள்ளிக்காசுகளைக் கொடுத்து "இவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.இதற்குமேல் என்ன செலவானாலும் நான் திரும்பிவரும்போது உனக்கு தருகிறேன்."
  என்று ஒரு பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டு செல்கிறார்.
   கதையை சொல்லி முடித்துமே... இவர்கள் மூவரில்.. உண்மையிலேயே அயலான்  யார் ...என்று கேட்கிறார் இயேசு.
      "அவனிடம் இரக்கத்தோடு நடந்து கொண்டவன் "என்கிறார் கேள்வி கேட்ட மனிதர்.
      "போ.. நீயும் அந்தபடியே செய் "என்கிறார் இயேசு.
      இதன்மூலம் தேவன்  சொல்ல வந்த கருத்து என்ன?
      துயரில் இருக்கும் மனிதருக்கு உதவ வேண்டும் என்பது மட்டும்தானா...
      இல்லை.. ஒருபோதும் அப்படி  இருக்கவே இருக்காது.
      அந்த காலத்தில் ...யூதர்கள் சமாரிய நாட்டு மக்களை ரொம்பவும் வெறுத்தனர்.
      அவர்களிடம் தண்ணீர் வாங்கி பருகுவதுகூட தீட்டாக கருதி ஒதுக்கி வைத்தனர்.
      காலப்போக்கில் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவே நினைக்க ஆரம்பித்தனர்.
      இது தவறு என்பதை சுட்டிக்காட்டவே இயேசு இந்த கதையைக் கூறியுள்ளார்.
      இனத்தின் பெயரால்...மதத்தின் பெயரால் ...ஒருவரை வெறுப்பது அர்த்தமற்றது.
      பாரபட்சம் பாராமல் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்கிறார் இயேசு.
      அதுவும் கண்ணெதிரே துன்பப்படும் மனிதரை கைவிட்டுச் செல்வது மனிதாபிமானமற்ற செயல்.
      மொத்தத்தில் உயர்வுதாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைக்க வேண்டும் .
      உளுத்துப்போன கொள்கைகள் உருப்படாத சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றால் இந்த மனிதர்களுக்கு மதத்தின் லட்சியமும் தெரியவில்லை. ....மனிதர்களின் துடிப்பும் புரியவில்லை.
      இந்த உண்மையைப் புரிய வைக்கவே பைபிளில் இந்த கதை கூறப்பட்டுள்ளது.
      நல்ல சமாரியன் என்பவன் சமாரிய தேசத்தான் அல்ல...
      அயலானுக்கு உதவுபவனே நல்ல சமாரியன் என்பதுதான் இந்த கதைமூலம்  நமக்குச் சொல்லப்படும்  செய்தி.
      நல்ல சமாரியனாய் இருப்போம்.!
       நல்லவற்றையே நாளும் செய்திருப்போம்.!
     
     


     
  
  
     

Comments

Popular Posts