உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை

            உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை



பழந்தமிழ் நூல்கள் நம் வாழ்க்கை நடைமுறைகள் எப்படி இருக்கவேண்டும்...
   எப்படி எல்லாம் இருக்கக் கூடாது... என வலியுறுத்துகிறது.
   ஆசாரக்கோவை என்னும் நூல் உணவு உண்ணும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சில நற்பண்புகளை நமக்குச் சொல்லித் தருகிறது.
   நாம் இன்றுவரை எப்படி இருந்தால் என்ன ?
   சாப்பிட வேண்டும் அவ்வளவுதான் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்போம்.
   அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் இன்றுமுதல் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.
   சாப்பிடுவதற்கு என்று சில வழிமுறைகளை கடைபிடித்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
   சாப்பிடுவதற்கு அப்படி என்ன வழிமுறைகள் இருந்துவிடப் போகிறது.சாப்பிட வேண்டும். அவ்வளவுதான்.
   எங்கே இருந்து சாப்பிட்டால் என்ன?
   எப்படி இருந்து சாப்பிட்டால் என்ன?
   என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள்.
   அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் எண்ணம் தவறு என்கிறது ஆசாரக்கோவை.
   அட...போங்கப்பா நீங்களும்.... உங்கள் ஆசாரமும்...சலிப்பாக இருக்கிறதா!
   என்னதான் சொல்லி இருக்கிறார்கள் என்று கேட்டுதான் பார்ப்போமே!
  
   📣  நாம் கிழக்குத் திசை நோக்கி இருந்துதான் உணவு உண்ண வேண்டுமாம்.
   கிழக்கா...எங்கே...சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று படித்திருக்கிறோமே அதுவா !
   பட்டணத்தில் உட்கார்ந்து கொண்டு கிழக்கு எங்கு இருக்கிறது என்றே இதுவரை தெரியாமல் இருந்து விட்டோம்.
   இதில் கிழக்கை எங்கே போய் தேடுவது?..
   இனி தேடித்தான் ஆகணுங்க..
    
    📣அடுத்து   உண்ணும்போது ஆடுதலோ அசைதலோ கூடாதாம்.
அட போங்கங்க...கையில் தட்டைத் தூக்கிட்டு அங்கிட்டு  உட்கார இடம் கிடைக்குமா?
இங்கிட்டு இடம் கிடைக்குமா என்று அல்லோலப்படும் காலம்.
இப்போ போய் ஆடக் கூடாது ...அசையக் கூடாது என்றால்...

    📣   சாப்பிடுமுன் உணவளித்த இறைவனைத் தொழுதுவிட்டுதான் உணவில் கை வைக்க வேண்டுமாம். நல்ல பண்பு இல்ல...
   இத பாராட்டித்தான் ஆகணும்.
  
     📣   சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்குமிங்கும் பார்க்கக் கூடாதாம்.
     ஐயோ... போனைப் பார்க்காமல் ஒரு கவளம் சோறு கூட உள்ளே இறங்காதே...
   அப்படி போனைப் பார்ப்பதை வீட்டிலுள்ளவர்கள் பார்த்துவிடக் கூடாதே என்று திருடனைப்போல அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து ...
   சாப்பிடும்முன் நாங்கள் படும் அவஸ்தை.... உள்ளக் குமுறல் கேட்கிறது.
  
     📣  வாய் பேசுதல் கூடவே கூடாதாம்.
   முடிகிற காரியமா என்ன? சோறு காய்ந்து போகும்வரை செல்போனில் பேசும் காலம். இப்போ போய் பேசாமல் சாப்பிடச் சொன்னால்...
   நடக்கக்கூடிய செயலாய் சொல்லுங்க...
  
      📣  கீழே ஒரு பருக்கை கூட சிந்தக் கூடாதாம்.
   இது சரிதாங்க...
  
      📣   நின்று கொண்டோ ...நடந்து கொண்டோ... உணவு உண்ணுதல் கூடவே கூடாதாம்.
   நடக்காத காரியம்....நடக்கவே நடக்காது...பட்டணத்தார் மனநிலை இப்படித்தான் இருக்கும்.
   காலத்திற்கு ஏற்ற கோலம்.
  
     📣  குறிப்பாக கட்டிலில் அமர்ந்து உணவு உண்ணுதல் கூடவே கூடாதாம்.
  எம்மாடியோவ்...இத்தனை விதிமுறைகளா?
  
   வேண்டாமப்பா...எனக்கு சாப்பாடே வேண்டாம் என்று எழும்பி ஓடப் பார்க்கிறீர்களா...விட்டால்தானே....விடமாட்டோம்ல்ல..
   இன்னும் இருக்கு...கேளுங்க...
  இன்றைய கால கட்டத்தில் கையில் செல்போனை வைத்துப் பேசிக்கொண்டே சாப்பிடுகிறோம்.
    பேசாவிட்டாலும் ஒற்றை விரலை செல்போனில் நடமாட விட்டபடியே    உண்கிறோம்.
    வீட்டுக்குள் வந்ததுமே அம்மா சாப்பாடு...என்று சொல்லிக்கொண்டே வருகிறோம்.
    யார் சாப்பிட்டா...யார் சாப்பிடவில்லை.. எதுவுமே கேட்பதில்லை.
    இதுவும் தவறுதானாம்.
    மொத்தத்தில் சாப்பாடு கேட்பதே தவறா?
    இருங்க...இருங்க..ஆற அமர இருந்து சாப்பிடுங்க...
    


      📣 பெரியவர்கள் பசியுடன் காத்திருக்க நாம் ஒருபோதும் சாப்பிடக் கூடாதாம்.
        📣அப்படியே அனைவரும் சேர்ந்திருந்து உண்டாலும் பெரியவர்கள் உண்ணத் தொடங்கிய பின்னர்தான் நாம் உண்ண வேண்டுமாம்.
       📣அதுபோல பெரியவர்கள் உண்டு எழும்பும்வரை நாம் காத்திருக்க வேண்டுமாம்.
        📣அவர்கள் சாப்பிட்டுவிட்டு எழும்பிய பிறகே நாம் எழும்ப வேண்டுமாம்...
    இது நல்ல கருத்தா இருக்கு இல்ல..
    ஆனால் இப்படி எல்லாம் பொறுமை யாருக்கு இருக்குப்பா...
   
     📣    இது என்ன சாப்பாடு பண்ணி இருக்கிறாய் என்று உணவின் முன் அமர்ந்து கொண்டு ஒரு போதும் குறை கூறவே கூடாதாம்....
   
       இது சாப்பாட்டைச் சமைத்தவரை மட்டுமல்ல...  சாப்பாட்டைப் பழித்துப் பேசுதல்  போல் ஆகிவிடுமாம்.
  மொத்தத்தில் கப்சிப் என்று உட்காரச் சொன்ன இடத்தில் உட்கார்ந்து சாப்பிடணும் .அவ்வளவுதானே...
  சாப்பிட்டுவிட்டால் போச்சு...
 
    சாப்பாட்டில் இவ்வளவு விசயமா?
    எண்சாண் உடம்பில் வயிறே பிரதானம்.
    இதுதாங்க புதுமொழி.
    இந்த  ஒரு சாண் வயிற்றுக்காக தானே எல்லாம்.
    பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல...
    இருப்பினும் பெரியவுங்க சொன்னால் உண்மை இல்லாமலா இருக்கும்!
    முடிந்த மட்டும் கடைபிடித்துதான் பார்ப்போமே!
   

   
   
   
     

Comments

Popular Posts