விடை தர மறுக்கும் பள்ளி நினைவுகள்

       விடை தர மறுக்கும் பள்ளி நினைவுகள்
    பள்ளிப்பருவத்தில் 
     துள்ளி விளையாடிய
     இடங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்!
     கண்களில் ஏக்கம்
     நடந்த இடங்களில்
     மறுபடி என் காலடி பதித்து
     தடம் அழிந்து போகாதபடி
    மெல்ல நடக்கிறேன்!
    
     தூண்களை சுற்றி சுற்றி
     தேய்த்த இடங்களில்
     சேதாரம் இருக்கிறதா
      பட்டு விரல்களால் மெல்ல
      தொட்டுப் பார்க்கிறேன்
      கண்களில் இட்டு  வணங்குகிறேன்!
       
       முட்டிபோட மறுத்த 
       முழங்கால் மறுபடி
       தனக்கு ஒரு வாய்ப்பு கேட்டு
       தடுமாறி நின்றிட 
       வகுப்பறையின்  வராண்டாவில் 
       வாய்தா கேட்டு நிற்கின்றேன்!
       
       தலைமை ஆசிரியர் வாயில்
       காத்துக் கிடக்கும் காலம்
       இனி உனக்கு இல்லை
       சொல்லாமல் சொல்ல 
       நக்கலாய் பேசிய சொற்கள்
       விக்கலாய்  தொண்டைக்குள் சிக்க
        திருகும் கால்களைத் திருப்ப..
         
        முடங்கினில் திரும்ப
        அடம்பிடிக்கும் 
        வண்டி மாடுகள் போல
        கால்களும் மறுக்க
        மனமெனும் சாட்டையைச் சுழற்றி
        வலுக்கட்டாயமாய்த் திருப்புகின்றேன்!
       
         துள்ளித் திரிந்த
         மைதானமும் இடமில்லை
         இங்கென  எள்ளி நகையாடிட 
         ஒற்றைப் பனைமரமாய்
         தனிமையில் நிற்பதைப்போல
        வெறுமையை உணர்கின்றேன்!
             
       முழுதாய் விடைபெற 
        ஆசிரியர் அறையை 
        எட்டிப் பார்க்கின்றேன்!
        பளுதாய் கிடந்த மனதை
         முழுதாய் சரி செய்த இடம்
        எளிதாய் கடந்திட முடியாமல் 
          தயங்கியே நிற்க...
               
         ஏனிந்த தயக்கம் 
         குரல் கேட்டு திரும்புகிறேன்
         தோழனாய் வகுப்பாசிரியர் 
         தோள்தொட்டுப் பேச
          கரைந்து போகின்றேன்
         தொலைந்து போகின்றேன்!
          
        எப்போதும் நீ வரலாம்
        வாயால் சாசனம் எழுதி  
        வழங்கிய தெய்வத்தைத்
        தொழுத கையோடு
        தடையிட மறுத்த
        கண்கள் கெஞ்ச
        கரங்களை அசைத்து
         நகர்கின்றேன்!
         
          புதியவை புகுதலும்
           பழையவை கழிதலும் வழுவல
           தேற்றிட முயல்கின்றேன்!
           விடைதர மறுக்கும்
           பள்ளி நாட்களை
           உள்ளி   உள்ளி
           உள்ளுக்குள்  மகிழ்கின்றேன்!
               
  
                     
                    

Comments

Popular Posts