குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை""
அருமையான பழமொழி.
ஒருவருடைய குற்றத்தைப் பார்க்கத்
தொடங்கினால் அவருடைய
குற்றம் மட்டுமே கண்களுக்குத் தெரியும்.
அவர் அதுவரை செய்த நன்மைகள்,
நல்ல செயல்கள் எதுவுமே
கண்களுக்குத் தெரியாமலே
போய்விடும்.
எல்லாவிதத்திலும் குறையில்லாத மனிதன்
ஒருவனைக் காட்டு என்றால் யாராலேயும்
யாரையும் காட்டிவிட முடியாது.
ஒரு சாரார் நல்லவர் என்று சொல்கிற ஒரு நபர்
இன்னொரு சாராரால் தீயவர் என்று
குற்றஞ்சாட்டப்படுகிறார்.
நன்மை எது ? தீமை எது?
என்று பிரித்து அறிவதிலும்
இருவேறு கண்ணோட்டம்
எல்லோரிடமும் உண்டு.
ஒரே நபர் இருவேறு மனிதர்களால்
இருவேறுவிதமாக சித்திரிக்கப்படுகிறார்.
குற்றமில்லாத ஏசுநாதரும்
குற்றஞ்சாட்டப்பட்டு
சிலுவையில் அறையப்பட்டார்.
நாம் இறைவனாகப் பார்க்கும் ஒருவர்
இன்னொருவர் பார்வையில் தீயவராகத்
தெரிகிறார்.
இதுதான் உலகம்.
எல்லோருடைய பார்வையும்
ஒரே மாதிரி இருப்பதில்லை.
மகாபாரதத்தில் இந்தப் பழமொழிக்கு
அருமையான ஒரு
தீர்வைச் சொல்லித் தருகிறார் தருமர்.
கௌரவர்கள் சபையில் பாஞ்சாலியை
இழுத்து வந்து மானபங்கப்படுத்த முயன்ற காட்சி
பஞ்ச பாண்டவர்களைக்
கொதிப்படையச் செய்கிறது.
தருமரைத் தவிர மற்ற நால்வரும்
பழிக்குப் பழி வாங்க வேண்டும்
என்ற ஆத்திரத்தில் பேசுகின்றனர்.
தருமர் மட்டும் மற்ற நால்வரிலும்
இருந்து சற்று மாறுபடுகிறார்.
பீமன் கோபத்தின் உச்சக் கட்டத்தில்
நின்று பேசுகிறான்.
அதற்குப் பதிலளித்த தருமர்,
"பரிவுடன் மற்று இவைகூறும்
பவன குமாரனை மலர்க்கை பணித்து, நோக்கி,
குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது
பார்க்குங்கால் சுற்றம் இல்லை;
ஒருகுலத்தில் பிறந்தார்கள் உடன்வாழும்
வாழ்வினைப் போல் உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ,
இருநிலம் காரணமாக எதிர்பதென்றான் "
"பீமா, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
ஒரே குலத்தில் பிறந்தவர்கள் நாம்.
ஒன்றாக வாழ்வதைப் போல உறுதி
வேறு ஒன்றும் இல்லை.
மாறாக, நாம் ஒருவருக்கு ஒருவர்
சண்டை போட்டுக் கொண்டால் இருவருக்குமே
பழிதான் வந்து சேரும் " என்று உலக
எதார்த்த நிலையை இயல்பாக
எடுத்துக் கூறுகிறார் தருமர்.
எவ்வளவு அருமையான சிந்தனைக்குரிய
வரிகள்!
உள்ளபடியே பார்த்தால் தருமருக்குத்தான்
அதிக கோபம்
வந்திருக்க வேண்டும்.
மாறாக சாந்தமாகப் பேசுகிறார்.
உலக எதார்த்தநிலை அறிந்து பேசுகிறார்.
உறவின் மாண்பினை உலகுக்கு
எடுத்துரைக்கும் விதமாகப் பேசுகிறார்.
சுற்றம் என்று இருந்தால்...
அவ்வப்போது தவறு நிகழ்தல் இயல்பு.
அதையே நினைத்து வெட்டு ஒன்று
துண்டு இரண்டு என்று பேசி விடுவோமானால்
குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு
தனிமரமாகப் போய்விடுவோம்.
"கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் "
என்று சொல்லித் திரியும் மனநிலையில்
வாழும் நமக்கு தருமர் எவ்வளவு பெரிய
வாழ்வியல் உண்மையைச்
சொல்லித் தருகிறார்.
சண்டை என்று வந்துவிட்டால்
இருவரின் மேலும் குற்றம் சுமத்த உலகம்
காத்திருக்கும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாம் சண்டை
போட்டுக் கொண்டால் இருவருக்குமே பழி
வந்து சேரும் என்று இருவர் பக்கத்தையும்
திரும்பிப் பார்க்க வைக்கும் பண்பு எத்தனை
பேருக்கு வரும்?
"ஒருவர் பொறை;இருவர் நட்பு "
என்ற பழமொழி சொல்லித் தரும்
பாடமும் இதுதான்.
எப்போதுமே சண்டையில்
ஒருவர் பக்கம் மட்டுமே ஞாயம் இருக்கும்
என்று நினைத்துக் கொண்டு
அந்தப் பக்கத்திற்குச் சாதகமாகவே தீர்ப்பு
எழுதி வைத்து விடுகிறோம்.
எதிரிப் பக்கம் இருக்கும் ஞாயத்தை
கேட்க மனம் இடம் கொடுப்பதில்லை.
எதிரி என்றால் தப்பானவனாகத்தான்
இருப்பான் என்ற மனநிலை நம்
எல்லோருக்கும் உண்டு.
சில நேரங்களில் எதிரியாக
இல்லாவிட்டாலும் எளியவன் பக்கம்
இருக்கும் ஞாயத்தைப் பார்க்க
மறுத்து விடுகிறோம்.
உலகில் தவறு செய்யாதவர் எவரும் இலர்.
மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து
செய்த கலவைதான் நாம் என்ற உண்மையை
ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்தான் உறவு
வளரும் என்பதுதான் இந்தப் பழமொழி
சொல்லித் தரும் பாடம்.
இப்போது எதுவரை விட்டுக் கொடுப்பது
என்ற கேள்வி எழலாம்.
இருகை தட்டினால்தான் ஓசை.
ஒரு பக்கம் மட்டுமே ஞாய தர்மம்
பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு
ஆகாது என்ற உங்கள் தரப்பு ஞாயமும்
காதுகளில் விழத்தான் செய்கிறது.
சுற்றத்தோடு கூடி வாழ வேண்டும்
என்பதற்காக குறைகளை
கூறக் கூடாதா....என்பீர்கள்.
குறைகளைக் குற்றமாக்கக் கூடாது.
அவ்வளவுதான்.
குறைகள் தக்க நேரத்தில்
சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
அப்போதுதான் குறைகள் நிவிர்த்தி செய்யப்பட
வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக இருக்கும்.
குற்றம் கண்டுபிடித்தால் இவர் பெரிய
நக்கீரர் பரம்பரையோ பெரிதாக குற்றம்
கண்டுபிடிக்க வந்துவிட்டார் என்பார்கள்.
நக்கீரர் என்ன குற்றம் கண்டுபிடிக்க
வேண்டும் என்றே வந்தவரா?
தமிழில் பிழை இருக்கிறது என்பதை
தக்க நேரத்தில் சுட்டிக் காட்டினார்.
தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்
அதனால் நக்கீரர் என்று பெயரெடுப்பதில்
தப்பில்லை.
ஆனால் குற்றம் கண்டுபிடிப்பதையே
தொழிலாக கொண்டிருக்க வேண்டாம்.
குற்றத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால்
உறவுகள் என்று சொல்ல யாரும்
இருக்க மாட்டார்கள்.
நட்பு காணாமல் போய்விடும்.
பிறர் குற்றங்களைக் கண்டும்
காணாமல் போய்விடுவதுதான்
சில நேரங்களில் நமக்குப் பாதுகாப்பாக
இருக்கும்.
சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ச்சியாக
வாழ்வதுதான் வாழ்க்கை.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை.
கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுப்பதில்லை."
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை."
பழமொழிகள் தந்து பதிவிட்ட கருத்து மிகச்சிறப்பு.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteமிகச் சிறப்பு
ReplyDelete